Monday, 28 November 2016

தலையை விட்டுவிட்டு வால் பிடிப்பது...

ஒரு வண்டிய ஓட்டணும் என்றால் முதலில் ஸ்டார்ட் பண்ணனும்
பிறகு ஃபர்ஸ்ட் கீர்... செகண்ட் கீர்... தெர்ட் கீர்-நு போய் பின்னர் டாப் கீர் போட்டா வண்டியும் நீண்ட நாட்களுக்கு வரும்
பெட்ரோல் மைலேஜும் நல்லா கொடுக்கும்
அதவிட்டுட்டு, வண்டிய ஸ்டார்ட் பண்ணவுடன் டாப் கீர் போட்டா என்னவாகும்?
                                


ஸோ, எந்த வேலையையும் ஸ்டெப் பை ஸ்டெப்-ஆ செஞ்சாத்தான் நாம நெனச்சத சாதிக்க முடியும்.

நல்லபடியா வண்டிய ஸ்டார்ட் பண்ணீங்க (எல்லோருக்கும் வங்கி கணக்கு ஆரம்பித்தீர்கள்)

பிறகு ஃபர்ஸ்ட் கீர் போட கத்துக்கொடுத்திருந்தீங்கன்னா அது சரி (வங்கியின் மூலம் வரவு செலவு செய்ய சொல்லி கட்டாயப்படுத்தி, பழக்கப்படுத்தி இருக்கணும்)

பிறகு ஸெகெண்ட் கீர் போடணும் (காஷ்-லெஸ் பரிவர்த்தனையை அறிவித்து அதை நடைமுறைபடுத்தாதவர் மீது தக்க நடவடிக்கை எடுத்திருக்கவேண்டும்)

பிறகு தேர்ட் கீர் (இதை பழக்கப்படுத்திக்கொள்ள சிலபல சலுகைகளை அறிவித்திருக்கணும்...உம்., நிறுவனத்தில் பணிபுரியும் அனைத்து ஊழியர்களுக்கும் வங்கி கணக்கு ஆரம்பித்து, சம்பளம் வங்கி மூலம் பட்டுவாடா செய்பவர்களுக்கு, அவர்கள் வாங்கும் கடன் தொகைக்கு வட்டியில் கால் சதவீதம் அல்லது அரை சதவீதம் சிறப்பு கழிவு, நூறு சதவிகிதம் வங்கியின் மூலம் பறிமாற்றம் செய்யும்  வியாபாரிகளுக்கு, தக்க அங்கிகாரம்... இப்படி ஏதாவது ஒருவழியில் அனைவரையும் வங்கியின்பால் ஈர்த்திருக்கவேண்டும்)

இப்படி செய்யும்போது ஏதாவது தடைகளை சந்தித்திருந்தால், ஒரு பிரேக் அடிச்சு மீண்டும் தேவைக்கேற்ப ஸெகெண்ட் கீரோ அல்லது ஃபர்ஸ்ட் கீரோ போட்டு நிலைமையை கட்டுக்குள் கொண்டுவந்து
அதன்பிறகு ஃபோர்த் கீரோ அல்லது டாப் கீரோ போட்டிருந்தால் (ரூபாய் நோட்டுக்கள் மதிப்பை இழக்கும் என்ற அறிவிப்பு) வண்டி ஸ்மூத்தாக பயணித்திருக்கும்.

அதையெல்லாம் செய்யாமல், எங்கிட்டே நல்ல ரோட் இருக்கு (தனிப்பெரும்பான்மை), நல்ல வண்டி இருக்கு (என் சொல்லுக்கு மறுப்பு தெரிவிக்காத அடிமைகள்), ஆட்டோமொபைல் இஞ்சினீர் "அப்படியெல்லாம் ஓட்டக்கூடாது" என்று சொன்னால் அவரை மாற்றிவிட்டு (ரகுராம் ராஜன்), நான் எதற்கு ஸ்டெப் பை ஸ்டெப் போகணும் என்று ஒரே தாவில் டாப் கீர் போட்டால் என்னவாகும் என்பதை நீங்களே இப்போது புரிந்துகொண்டு இருப்பீர்கள்.

இன்னுமோர் உதாரணம் வேண்டுமென்றால், இதோ!
மார்பக புற்று நோயை உடனடியாக கட்டுப்படுத்த ஒரு அறிய ஆணை!
இன்று இரவு முதல் வயதுக்கு வந்த அனைத்து பெண்களின் மார்புகளையும் அறுவை சிகிச்சை மூலம் நீக்கிவிடுதல்.  நல்ல ஐடியாதானே!? (யாரும் என்னை அடிக்க வராதீங்க!!!)

அப்படியே நீங்கள் எதிர்த்தால்... உதாரணத்திற்கு

பிறக்கும் குழந்தைக்கு பாலூட்டவேண்டுமே என்று யாராவது கேட்டால்... சொன்னவன் வன்புணர்ச்சி செய்பவன் என்று கூறி அவனை கெவலப்படுத்திவிடலாம் (தேசத்துரோகி/தீவிரவாதி)

அல்லது புட்டி பால் கொடுக்கலாம் என்று கூறி, அதனால் புட்டிகள் கூடதலாக விற்கும், பால் அதிகமாக விற்கும்.  எனவே உற்பத்தியும் வியாபாரமும் கூடும்... எனவே பண பரிவர்த்தனை அதிகமாவதால் அனைவருக்கும் இலாபமே என்று ஒரு சாராரை வைத்துக்கொண்டு கதைவிடலாம்

அல்லது மிகச்சிறப்பாக புதுவடிவில் 
"தென்னைய பெத்தா இளநீரு... புள்ளைய பெத்தா கண்ணீரு..."
அப்படீன்னு புதுசா ஒரு ரீல் காண்பித்து
"நாமே இருவர்... நமக்கெதுக்கு மற்றொருவர்?" என்று சொல்லிவிட்டால் முடிந்தது...
முடிஞ்சே போச்சுதே... மார்பக புற்று நோய்!
என்ன நான் சொல்றது சரித்தானே?

125 கோடி மக்கள் தொகை கொண்ட இந்திய திருநாட்டில் வருமான வரி செலுத்துவோர் ஒரேவொரு சதவிகிதம்தான்.  அதிலும் பெருவாரியாக மாத சம்பளம் பெரும் அரசு அலுவலர்கள் மற்றும் தனியார் பெருநிருவன ஊழியர்களே!  மற்றவர்கள் அனைவரும் ஏதாவது ஒரு சாக்கு காட்டி தப்பித்துவிடுகின்றனரே!  முதலில் இதையல்லவா தடுத்திருக்கணும்?

வருமானவரி கட்டுவதை ஊக்கத்தவறிவிட்டோமே நாம்!
சரியாக வரி கட்டுபவனை நாம் ஏமாளியாகவே காட்டிவருகின்றோமே!
பிறகு கருப்பு பணம் எப்படி காணாமல் போகும்?  அதிகரிக்கத்தானே செய்யும்!

சரி..., கருப்பு பணத்தை ஒழிக்கவாவது ஏதாவது உருப்படியா செஞ்சோமா?
அதை வளர்க்கிற மாதிரிதானே அனைத்து திட்டங்களையும் செய்துகொண்டு வந்தோம்.  உதாரணத்திற்கு... 

தனியார் கல்வி நிலையங்கள்
தனியார் மருத்துவமனைகள்
தனியார் சாலைகள்

ஒரு தனிமனிதன், உண்மையான இந்தியன், இலஞ்சம் கொடுக்காமலோ, அதிக கட்டணம் செலுத்தாமாலோ, தான் நினைத்ததை சட்டத்துக்கு உட்பட்டு செய்ய முடியுமா நம் தேசத்தில்?  முதலில் செய்யவேண்டியது இதைத்தானே?

தலையை விட்டுவிட்டு வால் பிடிப்பது இதுதானோ?

இதை நான் சொன்னா...
நான் ஒரு தேசத்துரோகி
நான் ஒரு தீவிரவாதி
நான் ஒரு கொள்ளைகாரன்
நான் ஒரு ஏமாற்றுப்பேர்வழி

இரண்டு நாள் பொருத்துக்கொள்ள சொன்னவர் இப்போது ஐம்பது நாட்கள் தவணை கேட்கிறார்.  மூன்று வாரங்கள் ஆனபின்னரும் இன்னும் ஐநூறு ரூபாய் தாள்கள் புழக்கத்தில் வந்தபாடில்லை. இரண்டாயிரம் ரூபாய் தாளை மாற்ற முடியவில்லை! இந்திய வங்கி ஊழியர் சம்மேளனத் தலைவர் கூறுவதை கேட்டால் பணத்தாள்கள் புழக்கத்தில் வர குறைந்தது ஆறேழு மாதங்கள் புடிக்கும் என்று தோன்றுகிறது.

உணவு... உடை... உறைவிடம்
இவைதான் ஒரு மனிதனுக்கு அவசியமானது என்று இத்தனை நாட்கள் எண்ணியிருந்தோம்.  இனி இவையனைத்தையும்விட மிக முக்கியமானது...
CREDIT/DEBIT CARDS
NET BANKING/eVALLET
SWIPING MACHINE
என்பதை உணர்ந்துகொண்டோம்.
ஜெய்ஹிந்த்!

Monday, 21 November 2016

திருடனாய் பார்த்து திருந்தாவிட்டால்....

முதலில் ஒரு விஷயத்தை சொல்லிவிடுகின்றேன்.  120 கோடி மக்கள் தொகை கொண்ட ஒரு ஜனநாயக நாட்டில், அதிலும் பாதிக்கு மேல் கல்வியறிவு இல்லாத நாட்டில், இப்படி ஒரு அதிரடியான/துணிச்சலான முடிவு எடுத்த பாரதப்பிரதமர் அவர்களையும் அவர் சார்ந்த கட்சிக்கும் எனது நன்றியை கூறிக்கொள்கிறேன். சுதந்திர இந்தியாவின் வரலாற்றில் இப்படி ஒரு துணிச்சலான முடிவு எடுத்ததை நாம் மனதார பாராட்டியே ஆகவேண்டும். இந்த முடிவால் நன்மை/இலாபம்/வெற்றி ஏற்படுமானால் அது நாட்டுக்கு நல்லதே!  அதே சமயம் இந்த முடிவு தோல்வியை தழுவினால் அதனால் முதலில் பாதிக்கப்படும் நபர் நிச்சயமாக பாரத பிரதமர் திரு மோடியே! எனவேதான் நான் இந்த முடிவை... துணிச்சலை...அதிரடியை பாராட்டுகிறேன்."

இதை எழுதும்போது ஒரு சம்பவம் என் ஞாபகத்தில் வருகிறது.  சென்னை ரிசர்வ் வங்கி அருகில் ஒரு பாலம் கட்டவேண்டும் என்று அன்றைய முதல்வர் காமராஜுக்கு ஒரு எண்ணம் தோன்றியது.  சம்பத்தப்பட்ட அதிகாரிகளை அழைத்து அதற்காக அலோசனை செய்யப்பட்டது.  அனால் வந்த அனைத்து அதிகாரிகளும் அது முடியாத காரியம் என்று பலப்பல காரணங்களை அடுக்கியதாகவும் அதை கேட்ட காமராஜ் "முடியாது" என்பது தனக்கும் தெரியும். அதை சொல்ல இந்த கூட்டம் கூட்டப்படவில்லை.  இங்கு ஏற்படும் போக்குவரத்து நெரிசலை குறைக்க வழி கண்டுபிடிப்பதற்கே இக்கூட்டம். அதற்கான ஆலோசனையை கூறுங்கள் என்று கடிந்துகொண்டாராம். அக்கூட்டத்தில் பிறந்ததே, இன்றைக்கும் போக்குவரத்துக்கு பயன்பட்டு கொண்டிருக்கும் சுரங்கப்பாதை!  அதேபோலத்தான் ரகுராம் ராஜன் முடியாது என்றதால் அவரை மாற்றிவிட்டு உர்ஜீத் பட்டேல்-ன் ஆலோசனையை பிரதமர் ஏற்றுக்கொண்டு இந்த காரியத்தை துவக்கியுள்ளார் என்று நினைக்கிறேன்.
வாழ்த்துகள் திரு மோடிஜீ!

இத்திட்டத்திற்கு பின்னால் இருக்கும் லாஜிக்:
கள்ளப்பணம்/கருப்புப்பணம்:  அரசாங்கம் அச்சடித்தால் அது நல்ல பணம். அதைத்தவிர மற்றவர் யார் அச்சடித்தாலும் அது கள்ளப்பணம்!  தன்வசம் வைத்திருக்கும் பணத்திற்கு அரசாங்கத்திடம் கணக்கு காட்டிவிட்டு அதற்கான வரியை கட்டிவிட்டால் அது நல்ல பணம்.  அதுவன்றி தன் வருமானத்தை மறைத்து/பதுக்கி வைத்துக்கொண்டால் அது கருப்புப்பணம்!

நம் நாட்டிற்கு கள்ளப்பணம் பாகிஸ்தானிலிருந்து வருகிறது... பங்களா தேசத்திலிருந்து வருகிறது என்று நம் அரசாங்கங்களே கூறுகின்றன. அதேபோல கருப்பு பணம் என்பது பெரும்பெரும் பணக்கார முதலைகள்வசம் இருப்பதாகவும் அரசாங்கமே கூறுகின்றது.

கள்ள நோட்டு அச்சடிப்பவர்கள் மற்றும் கருப்பு பணம் பதுக்குபவர்கள் 5,10,50,100 ரூபாய் நோட்டுகளை பய்ன்படுத்துவதைவிட சுலபமானது 500,1000 ரூபாய் தாள்களை பயன்படுத்துவது.  எனவே ஐநூறு ஆயிரம் ரூபாய் தாள்களை மதிப்பிழக்க செய்தால் பதுக்கப்பட்ட பணத்தில் அதிகபட்சம் புழக்கத்தில் வந்து வெள்ளையாகிவிடும்.  அதேபோல தீவிரவாதத்திற்கு ஊக்கமளிக்கும், வெளி நாடுகளிலிருந்து கடத்தி வரும் பணத்தாள்களின் வரத்து குறைந்துவிடும். அதனால் எல்லையோரங்களில் நடக்கும் தேசத்துரோக செயல்கள் தன்னால் முடிவுக்கு வந்துவிடும்.

எனவே இந்த காரணங்களுக்காகத்தான் நம் பாரத பிரதமர் திரு மோடி அவர்கள் இந்த முடிவை எடுக்க துணிந்துள்ளார்.  இந்த துணிச்சலுக்கு மீண்டும் ஒருமுறை அவருக்கு பாராட்டுகள்.  ஆடிட்டர் திரு குருமூர்த்தி அவர்களின் பேட்டியை இங்கே சொடுக்கி பாருங்கள்.

09-11-2016 00:00 மணியிலிருந்து ஐநூறு ஆயிரம் ரூபாய் தாள்கள் செல்லுபடியாகாது என்று அறிவிக்கப்பட்ட பின் இந்திய பிரஜைகளுக்கு கிட்டத்தட்ட 50 நாட்கள் அவகாசம் தந்து, தங்களிடம் உள்ள 500, 1000 ரூபாய் தாள்களை வங்கியில் சென்று மாற்றிக்கொள்ளலாம் என்று பிரகடணம் செய்யப்படுகிறது. அதோடுமட்டுமல்லாமல் 9.11.16 & 10.11.16 ஆகிய இரு நாட்களுக்கு வங்கிகள் செயல்படாது என்றும் அறிவிப்பு வெளியாகிறது. ஏனென்றால் வங்கிகளுக்கு புதிய ரூபய் நோட்டுகளை கொண்டு சேர்க்க வேண்டியுள்ளதால் இந்த  விடுமுறை தரப்பட்டது.

அதற்குள்ளாகவே நமது தகவல் தொடர்பு சாதனங்கள் (தமிழில் கூறுவதானால் "மீடியாக்கள்") தங்கள் மனம் போன போக்கில் கிசுகிசுக்களை பரப்ப ஆரம்பித்துவிட்டனர்.  நடுநிசியிலிருந்து பணம் செல்லாது என்று கூறிவிட்டு, இரண்டு நாட்கள் வங்கிகளை மூடிவிட்டனர்.  இதனால் நாடே ஸ்தம்பித்துவிடும். நாளை காலை முதல் பால்வாங்க முடியாது... மருந்து மாத்திரை வாங்க முடியாது.... பெட்ரோல் ஊற்ற முடியாது... இப்படி பலப்பல முடியாதுகளை அவரவர் இஷ்டம்போல பரப்பிவிட்டனர்.

இதோ கிட்டத்தட்ட 13 நாட்கள் (22/11/2016) இன்றோடு ஆகிவிட்டன. இங்கொன்ரும் அங்கொன்றுமாக சிலபல சலசலப்புகள் ஏற்பட்டாலும் பொதுவாக மக்களின் ஆதரவு இந்த கள்ள/கருப்பு பணத்தை ஒழிப்பதற்கு கிடைத்துள்ளது!

இந்த மக்கள் ஆதரவு மேலும் பெருக வேண்டும் என்றால், இனி அரசின் நடைமுறைகள் மேலும் வெளிப்படைத்தன்மையுடன் இருக்க வேண்டும் என்பதே என் கருத்து.  ஒவ்வொரு குடிமகனும் தான் கஷ்டப்பட்டு சம்பாதித்த சிலபல தாள்களை சங்கடங்கள் ஏற்பட்டாலும் அதை பொருத்துக்கொண்டு நம் நாடு இந்த திருட்டு பேர்வழிகளிடமிருந்து தப்பித்து செழிப்புமிக்க நாடாக வேண்டும் என்று ஆசைப்படுவது கண்கூடாக தெரிகிறது.

அப்படி இருக்கும்பட்சத்தில் நம் அரசின் பொருப்பு இப்போது மேலும் கூடிவிடுகிறது.  தங்களிடம் இருக்கும் சிலபல தாள்களை மாற்ற வரும் நபர்களுக்கு வங்கிகள் சங்கடம் ஏற்படுத்தாமல் சேவை செய்ய வேண்டும். அதே போல கள்ள/கருப்பு பணம் வைத்திருப்போர்களை கண்டறிந்து, குறைந்தது ஒரு பத்து நூறு பேரையாவது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்.  இதில் அரசியல் குறிக்கீடு இங்கித்தும் இருக்கக்கூடாது. ஏற்கனவே இப்படிப்பட்ட திருடர்களின் பெயர்களை நீதிமன்றங்களிடம் இருக்கின்றன. இரகசியமாக சீலிடப்பட்ட அந்த பெயர்களை பிரகடணப்படுத்தி,
     வரி ஏய்த்தவர்கள்
     இலட்சம் கோடிகளை வங்கியில் கடன் வாங்கி பதுக்கிக்கொண்டவர்கள்
     ஷேர் மார்க்கெட்டில் மொள்ளமாரித்தனம் செய்தவர்கள்
     ரியல் எஸ்டேட் என்ற பெயரில் ஏழை எளியோர் வயிற்றிலடித்தவர்கள்
இப்படி பலரை பிடித்து தக்க நடவடிக்கைகளை வரும் 30-12-2016-க்குள் எடுக்கும்பட்சத்தில், இப்போது பொருமையோடு இருக்கும் பொதுமக்கள் பிரதமரின் நடவடிக்கைகளுக்கு பேராதரவு தருவார்கள் என்பதில் எள்முனையளவும் சந்தேகமில்லை.  இல்லையென்றால், இந்த பொருமை எல்லை மீறும்போது "சாது மிரண்டால் காடு கொள்ளாது" என்ற பழமொழி உண்மையாகும்.

கடந்த சில நாட்களாக நம் நாட்டில் நடக்கும் விஷயங்களை கவனித்தால் நம்பிக்கை ஏற்படுவதைவிட அவநம்பிக்கையே அதிகமாகிறது.  500,1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவிக்கப்பட்ட 8-11-16 அன்று இரவே கட்டுகட்டாக பணத்தை எடுத்துச்சென்று தங்கமாக மாற்றிக்கொண்டனர் பலர். அதாவது கருப்புப்பணம் மஞ்சளாக மாற்றப்பட்டுவிட்டது.  அதுமட்டுமல்ல, இங்கு மனிதனின் ஒரு குரூர புத்தியும் வெளிச்சத்தில் வருகிறது.  அதாவது என்னிடமுள்ள கருப்பு பணத்தை எதையாவது வாங்கி அடுத்தவன் தலையில் கட்டிவிடுவது.  வாங்கியவன்  எக்கேடும் கெட்டு போகட்டும் என்ற மனநிலை. இதை புறிந்து கொண்ட நகை வியாபாரி, தங்கத்தின் விலையை இர்வோடு இர்வாக ஏற்றிவிட்டான்.  மேலும் நான் தந்த பணத்திற்கும் மதிப்பை குறைத்தே வரவு வைத்தான்.  அதாவது ஒரே கல்லில் இரண்டு மாங்காய்கள்!  இங்கே நகை வாங்கியவன் மற்றும் விற்றவன் இருவரிடமும் நான் கண்டது 
"எரிகின்ற வீட்டில் பிடுங்கியவரை இலாபம்" எனும் மனப்பாண்மையை!

அடுத்து நடந்தது...
வங்கியில் வாராக்கடன் என்று சிலபல ஆயிரம் கோடிகளை தள்ளுபடி செய்தது. இதனால் அரசாங்கத்தின் மீது மக்கள் நம்பிக்கை இழந்தது.  விவசாயி டிராக்டர் வாங்கி தவணை செலுத்தவில்லையென்றால் போலீஸை வைத்து அடித்து உதைத்து டிராக்டரை பறிமுதல் செய்ய தெரிந்த வங்கிகளுக்கு... 
மாணவன் வாங்கிய கவிக்கடனை ஏஜெண்ட் என்ற பெயரில் அடியாட்களை அனுப்பி மிரட்டி தற்கொலை செய்ய தூண்டத்தெரிந்த வங்கிகளுக்கு...
இப்படி "வாராக்கடன்" என்று தள்ளுபடி செய்ய என்ன தார்மீக உரிமையுள்ளது?

அடுத்து நடந்தது...
ஆறுமாதமாக இரகசியமாக நடந்த இந்த விஷயம் என்று கூறப்பட்டாலும் பல அரசியல் புள்ளிகளுக்கும், பெரிய வியாபாரிகளுக்கும் ஏற்கனவே இந்த விஷயம் தெரிந்து 8-11-16-க்கு முன்பே புதிய பணத்தை கட்டுகட்டாக பெற்றதற்கான செய்திகள் வெளிவந்துள்ளன.  எப்படி கிடைத்தன அவர்களுக்கு இந்த புது நோட்டு கட்டுகள்?  அரசின் கவனக்குறைவா அல்லது அரசே உடந்தையா?  ஆதாரச் செய்திகள் வெளிவந்த பின்னும் இவர்களின் மீது இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாதது, இந்த கள்ள/கருப்பு பண ஒழிப்புத்திட்டம் வெற்றியடையாதோ என்ற சந்தேகம் ஏற்பட ஆரம்பித்துள்ளது.

அடுத்து நடந்தது...
பணத்தைக் கொடுத்து பணம் வாங்கியது.  10% என்று ஒருத்தன் கூற 20% அல்லது 25% என்று மற்றொருவன் கூற, அட ஏமாந்திட்டேயே 40% வரை போய்க்கொண்டிருக்கிறது என்று எதிர்பட்டவன் கடுப்பேத்திச்செல்ல, தலை சுற்றுகிறது.  இதில் வெட்கக்கேடான விஷயம் என்னவென்றால் இப்படி பணத்துக்கு பணம் மாற்றியவர்களில் பிடிபட்டவர்கள் வங்கி மேலாளர்களும் ஊழியர்களும்தான்.  அடப்பாவிகளா!
பாரதி அன்றே கூற்ச்சென்றானே...
     "படித்தவன் தவறு செய்தால் அய்யோ என்று போவான்"
அய்யய்யோ!!!

அடுத்து நடப்பது...
கள்ள/கருப்பு பணம் ஒழிப்பு திட்டத்தை ஆதரிப்பவர்கள் தேச பக்தி உடையவர்கள், மற்றவர்கள் தேசத்துரோகிகள் என்ற சாயம் பூசுகின்றனர். அடப்பாவிகளா!  இன்றைக்கு ஒரு நாள் கூலி என்று கொத்தனார், கார்பெண்டர், எலக்ட்ரீஷியன், பெயிண்டர், சமையல் மாஸ்டர் வாங்குவதே 500-800 வரை இருக்கின்றது.  பின்னர் தான் சம்பாதித்த காசு செல்லாது என்று இர்வோடு இரவாக கூறப்படும்.  அதை எதிர்ப்பவன் தேசத்துரோகியா?  ஞாயவாங்களே... சற்று சிந்தித்து உங்களின் தீர்ப்பை கூறுங்கள்.
ஒரு உதாரணம் பாருங்கள்:
     ஒரு பெண்ணுக்கு திருமணம்.  அவருக்கு 10 பவுன் நகை போட்டாலே
     இரண்டரை இலட்சம் ஆகும்.  பின்னர் மண்டப செலவு, சாப்பாடு,
     நகை நட்டு, துணிமணிகள், சீர் செனத்தி, இத்யாதி இத்யாதி.  ஆனால்
     திருமண செலவிற்கு அரசு நிர்ணயித்த செலவு வெறும் 2.5 இலட்சம்.
     இதில் திருமணம் முடிக்க முடியுமா ஞாயவாங்களே?!?  இதை எதிர்த்தால்
     தேசத்துரோகியா?
வாழ வழி காட்டுங்கள் என்று கேட்டால் தேசத்துக்காக எல்லையோரத்தில் சாகும் ராணுவ வீரர்களை உதாரணத்திற்கு கூறுகிறீர்கள்.  இது அடுக்குமா?


கள்ளப்பணம் வெளிநாட்டில் அச்சடிக்கப்பட்டு இந்தியாவிற்குள் அனுப்பப் படுவதால், இனி இந்த பணத்திற்கு மதிப்பில்லை என்று கூறி இந்திய அரசு புது பணத்தை புழக்கத்தில் விட்டுள்ளது.  இனி ஏன் பாகிஸ்தானோ பங்களாதேசமோ இந்த புதுப்பணத்தை அச்சடிக்காது?  இதோ சீனா நாம் வங்கிகளில் மாற்றுவதற்கு முன்பே, நம் கைக்கு இந்த 2000 ரூபாய் நோட்டு கிடைப்பதற்கு முன்பே பர்ஸ்ஸில் அச்சடித்து வெளியிட்டுவிட்டது.  இதைபோல அடுத்த சிலபல நாட்களில் வெளிநாட்டினர் இந்த பணத்தையும் அச்சடித்து வெளியிட்டுவிட்டால் பின்னர் மீண்டும் இதே மாதிரி புதிய நோட்டுகளும் செல்லாது... புத்தம்புதிய நோட்டுகள் வெளிவரும் என்று மீண்டும் மீண்டும் அறிவித்துக்கொண்டே இருக்குமா நம் பாரத அரசு?

இந்த நாடுகள்தான் கள்ள நோட்டுகள் அச்சடிக்கின்றன என்ற தகவல் நம்பத்தகுந்தது என்றால் இந்த நாடுகளுக்கு எதிராக என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது நம் அரசால்?  இன்னும் பாகிஸ்தானிலிருந்து கப்பல் கப்பலாக சிமெண்ட்-ஐ இறக்குமதி செய்கிறோமே ஏன்?  அதேபோல பங்களாதேசத்திற்கு நாம் மின்சாரம் அனுப்பிக்கொண்டிருக்கிறோமே ஏன்? ஏன்?  இந்த நாடுகளின் மீது பொருளாதார தடை விதிப்பதை விட்டுவிட்டு இது என்ன சின்னப்புள்ளத்தனமான நடவடிக்கைகள்?

கருப்புப்பணம் என்பது பதுக்கப்பட்ட பணம் மட்டும்தானா?  மேலோட்டமாக பார்த்தால் பண நோட்டுகள் மட்டுமே.  ஆனால் தங்கமாகவும் வெள்ளியாகவும் மாறியுள்ளதே அவை எந்த கணக்கில் சேரும்?  நிலம் அல்லது வீடு வாங்கும் போது மார்க்கெட் மதிப்பு, கவர்ன்மெண்ட் மதிப்பு என்று சொல்லித்தானே நானும் நீங்களும் பத்திரம் பதிவு செய்கின்றோம். அதுவும் கருப்பு பணம்தானே!
நாம் கடைக்கு சென்று ஒரு பொருளை வாங்கும் போது நம்மில் எத்தனை பேர் அதற்கான பில் (Bill) கேட்டு வாங்குகின்றோம்?  அப்படியே நாம் பில் கேட்டாலும் கடைக்காரர் டாக்ஸ் (Tax) 5 முதல் 14 சதம் வரை அதிகமாக வரும் என்று கூறினால், நம்மில் எத்தனை பேர் டாக்ஸ் கொடுத்து பில் வாங்க தயாராக இருக்கின்றோம்?  இதுவும் கருப்பு பணம் உருவாக காரணமே!

ஒரு சின்ன உதாரணம் பார்ப்போம்:
இன்றைக்கு வடமாநிலத்தவர் சிலர் Flask எடுத்துக்கொண்டு தெருத்தெருவாக சுற்றி டீ விற்பதை நாம் அனைவரும் பார்க்கின்றோம்.  அவர்களில் ஒருவரை நான் விசாரித்ததில் கிடைத்த தகவல்.  ஒருத்தர் ஒரு நாளில் ரூ.1300-1500 வரை டீ விற்கின்றார்.  இவரை போல 10-15 பேர் ஒரு வீட்டில் தங்கவைக்கப்பட்டு Flask-ல் டீ போட்டு அனுப்புகிறார் முதலாளி.  சராசரியாக ரூ1000X10பேர்X30 நாள் என்று கணக்கிட்டாலும் மாதம் ஒன்றுக்கு அந்த முதலாளி 3 இலட்சம் ரூபாய்க்கு வியாபாரம் செய்கின்றார்.  குறைந்தது 10% இலாபம் என்றாலும் ஆண்டுக்கு 3.60 இலட்சம்!  வருமானவரி செலுத்துகிறாரா இவர்?

இப்படி இந்தியாவில் Unorganized Sector-ல் பலர் பணம் சம்பாதிக்கின்றனர். உதாரணத்திற்கு மருத்துவர்கள்...இவர்களில் எத்தனை பேர் சரியான வருமானத்தை காட்டுகின்றனர்?  பள்ளி/கல்லூரிகளில் சேர எவ்வளவு டொனேஷன் தருகின்றோம்?  நம் வேலை வேகமாக நடக்க எவ்வளவு இலஞ்சம் தர தயாராக இருக்கின்றோம் நாம்?  இப்படி தவறுகளை நம்மிடமே வைத்துக்கொண்டு கருப்பு பணத்தை ஒழிக்க பிரதமர் என்னத்தான் அதிரடி வைத்தியம் செய்தாலும் நம்மில் ஒவ்வொருவரும் திருந்தாதவரை அரசின் எந்த நடவடிக்கையும் எந்த பயனும் தராது!

கடைசியாக, திட்டம் அறிவிக்கப்பட்டு 13 நாட்கள் ஆனபின்னரும், நாட்டின் நான்கு மெட்ரோபாலிடன் நகரங்களில் ஒன்றான சென்னைக்கு இன்னும் 500 ரூபாய் நோட்டுகள் வந்து சேரவில்லை!  மும்பைக்கு வந்த 500 ரூபாய் நோட்டுகளில் பிரிண்டிங் சரியாக இல்லை.  பல ATM-களில் பணம் இல்லை. கூட்டுறவு வங்கிகள் ரிசர்வ் வங்கியில் கட்டுப்பாட்டில் வராது என்பதால் அவர்களுக்கு பணம் பட்டுவாடா செய்யப்படாததால் கூட்டுறவு வங்கிகள் முடங்கியுள்ளன!

பிரச்சனைக்கு தீர்வு கூறுங்கள் என்று பிரதமரை கேட்டால் அவர் பொதுவெளியில் அழுகிறார்.  நான் உங்களுக்காக உயிர் கொடுக்கவும் தயார் என்று வசனம் பேசி தன்னுடைய 93 வயது தாயை ATM வரிசையில் நிற்க வைத்து Stunt அடிக்கிறார்.

பிரதமர் மோடி அவர்களே, மக்கள் இதையெல்லாம் கேட்கவில்லை.  பொது மக்கள் இன்றும் கருப்பு பணத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்க முழு ஒத்துழைப்பு கொடுத்துக்கொண்டிருக்கின்றனர்.
திருமணத்திற்கு 2.5 இலட்சம் மட்டுமே ரொக்கமாக வங்கியிலிருந்து எடுக்கலாம் என்று அரசு அறிவித்தபின் 600-700 கோடிகளில் ஒரு திருமணம் நடந்தது!  அரசு என்ன நடவடிக்கை எடுத்தது?
இந்திய மெடிகல் கவுன்சிலின் முன்னால் தலைவர் கேதன் தேசாய் வீட்டில் வருமானவரித்துறையினர் பல ஆயிரம் கோடி ரொக்கமும் 1500 கிலோ (கிராம் இல்லைங்க... கிலோ... 1500 கிலோ) தங்கமும் பறிமுதல் செய்யப்பட்டதே, அவர் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது?
தமிழகத்தில் மூன்று கண்டெய்னர்களில் பணம் பறிமுதல் செய்யப்பட்டதே! அது என்னவானது?

பொதுவாக இந்தியாவில் 25-ஆம் தேதியிலிருந்து 5-ஆம் தேதிக்குள் அனேகமாக சம்பளம் போடப்பட்டுவிடும்.  அப்போதே நம்மில் பலரும் பால் அட்டை, காஸ் சிலிண்டர், மாத மளிகை சாமான், வீட்டிற்கு தேவையான மருந்துகள் என்று அனைத்தையும் வாங்கிவிடுவார்கள் அல்லது கடந்த மாதம் வாங்கிய பொருட்களுக்கு பணம் கொடுத்துவிட்டு இந்த மாதத்திற்கான பொருட்களை வாங்கிவிடுவார்கள்.  எனவே இதுவரை பெரிய அளவில் எந்த விபரீதமும் எந்த வீட்டிலும் ஏற்படவில்லை என்பதை நாம் கவனத்தில் கொள்ளவேண்டும்.  வரும் ஒன்றாம் தேதி, நம் கையில் பணம் புரளவில்லை என்றால், நிச்சயமாக ஒரு பிரளயம் நம் வீட்டில் வெடிக்கும்.  அது அடுத்த சில நாட்களுக்குள் வெளியில் வெடிக்க ஆரம்பிக்கும்.  எனவே அரசின் திட்டம் அதற்குள் சரியாக வரையரை செய்யப்பட்டுவிட்டால் எடுத்த காரியம் சுபமாக முடியும்.

இப்படி பல்வேறு விஷயங்களில் அரசால் எடுக்கப்படும் வெளிப்படையான நடவடிக்கைகளை பொருத்தே மக்களின் ஆதரவா அல்லது எதிர்ப்பா என்பதை காலம்தான் பதில் சொல்லும்.
Wednesday, 19 October 2016

பொது சிவில் சட்டம்

இந்திரா காந்தியின் கொலையாளிகளுக்கு ஆஜரானவர் - ராம்ஜெத்மலானி
ராஜிவ் காந்தியின் கொலையாளிகளுக்கு ஆஜரானவர் - ராம்ஜெத்மலானி
அஃப்ஸல் குருவுக்கு வாதாடியவர் - ராம்ஜெத்மலானி
செக்ஸ் சுவாமியார் ஆசாராம் பாபுவின் வழக்கரிஞர் - சுப்ரமண்யம் சுவாமி
வோடோஃபோன் வரி ஏய்ப்பு வழக்கில் ஆஜரானவர் - அருண் ஜெட்லீ
குஜராத்தில் நடந்த 500 கோடி வங்கி ஊழல் வழக்கில் ஆஜரானவர்-அருண் ஜெட்லீ
போபால் விஷ வாயு விபத்தில் வார்ரன் ஆண்டர்சன்-க்கு ஆஜரானவர் - அருண் ஜெட்லீ
IPL ஊழலில் சிக்கிய லலித் மோடிக்காக ஆஜரானவர் - வசுந்தரா ராஜேவின் கணவரும் மகளும்
சஹாரா நிருவன ஊழலில் சிக்கிய சுப்ரதோ ராய்க்காக ஆஜரானவர் - ரவி ஷங்கர் ப்ரசாத்

இப்படி சிவில் சட்டத்தில் உள்ள ஓட்டைகளை மிகவும் சரியாக பயன்படுத்தி கிரிமினல்களுக்கும் தீவிரவாதிகளுக்கும் சட்ட பாதுகாப்பு தரும் மேலே கூறப்பட்ட உதாரணங்களில் நாம் பார்ப்பது பெரும்பாலும் பாரதிய ஜனதா கட்சியினர்கள்தான்.  இவர்கள்தான் இப்போது இந்தியாவில் பொது சிவில் சட்டம் அமல்படுத்த வேண்டும் என்று கோருகின்றனர்.

முதலில் இந்தியாவில் பொது சிவில் சட்டம் கொண்டு வரவேண்டிய  அவசியம் என்ன?
இந்தியாவில் வாழும் முஸ்லீம்கள் யாரும் INDIAN PENAL CODE (இபிகோ) -வை ஏற்காதது போலவும் எனவே எல்லோருக்கும் பொது சிவில் சட்டம் கொண்டுவரவேண்டும் என்று ஒரு தவறான கொள்கையை முன்மொழிந்து உள்ளனர்.  ஆனால் இது எந்தளவுக்கு நடைமுறையில் சாத்தியப்படும் என்பது புரியாத புதிராகவே இருக்கும்!

பொதுவாக இந்தியாவில் இருக்கும் முஸ்லீகள் அனைவரும் சிவில்/கிரிமினல் என எந்த வழக்காக இருந்தாலும் இபிகோ மூலமாகத்தான் நீதிமன்றங்களை நாடுகின்றனர் என்பது கண்கூடு.  ஆனால் அதே தங்களின் மத சம்பந்தமான பிரச்சனை/முரண்பாடு ஏற்படும் பட்சத்தில் அதற்கு முஸ்லீம்கள் தேர்வு செய்வது ஷரீயத் சட்டம்தான்.  ஷரீயத் என்றால் முஸ்லீம்களின் இஸ்லாமிய சட்டமுறையாகும்.  இதில் தாடி வளர்ப்பது, தலைக்கு தொப்பி அணிவது, புர்கா அணிவது, விவாகம்/விவாக ரத்து, சொத்து பிரித்தல் இப்படி சொல்லிக்கொண்டே போகலாம்.  முஸ்லீம்களுக்குள் நடக்கும் இந்த மாதிரியான முறண்பாடுகளுக்கு ஷரீயத் முறையிலேயே தீர்ப்பு கூறப்படும்.

ஆனால் இப்போது இதில் விவாகரத்து என்கின்ற ஒரு விஷயத்தை மட்டும் எடுத்துக்கொண்டு முஸ்லீம் ஆண்கள் அனைவரும் விவாகரத்து செய்து முஸ்லீம் பெண்களை தவிக்க விட்டுவிடுவதாகவும் அதை தடுக்கவே இப்படி ஒரு பொது சிவில் சட்டம் கொண்டுவந்து அதனால் விவாகரத்தான முஸ்லீம் பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்கின்றனராம், இவர்கள்!

ஒரு சிறு புள்ளிவிவரத்தை பார்ப்போம்:
இந்தியாவில் வாழும் முஸ்லீம் மக்கள் தொகை = 170 மில்லியன்
50% திருமணமானவர்கள் எனில் = 85 மில்லியன்
விவாகரத்து விகிதம் = 0.5%
அதாவது கிட்டத்தட்ட 42,500 முஸ்லீம்கள்.
(இதில் பலருக்கு முத்தலாக் என்பதில் இணக்கமில்லை என்பதை குறிப்பிட விரும்புகின்றேன்)

இந்தியாவில் வாழும் இந்துக்கள் மக்கள் தொகை = 1 பில்லியன்
50% திருமணமானவர்கள் எனில் = 500 மில்லியன்
விவாகரத்தாகாமல் பிரிந்து வாழும் இந்துக்கள் விகிதம் 3.7%
அதாவது கிட்டத்தட்ட 18.5 மில்லியன் (இதில் இன்றைய பாரத பிரதமரும் இருக்கிறார்)

இப்போது கூறுங்கள்...
தவறான அணுகுமுறையாலும் தவறான சட்ட நுணுக்கங்களாலும் பாதிப்புக்குள்ளாகும் 18.5 மில்லியன் இந்துக்களுக்கு சட்ட மாற்றம் தேவையா அல்லது 42,500 முஸ்லீம்களுக்கு முதலில் சட்ட மாற்றம் தேவையா?

சரி, இப்போது தலாக் என்றால் என்னவென்று பார்ப்போம்.
விவாகம் என்றால் அரபி மொழியில் நிக்காஹ் என்பதாகும்!
விவாகரத்து என்றால் அரபி மொழியில் தலாக் என்பதாகும்!
அதாவது ஒரு மணமான ஆண் தன் மனைவியை விவாகரத்து செய்ய எண்ணினால் "உன்னை விவாகரத்து செய்கிறேன்" என்று கூறவேண்டும். அதாவது "உன்னை தலாக் செய்கிறேன்" என்று கூறவேண்டும்.  இதைதானே இன்றைய சட்டமும் முதலில் நோட்டீஸ் கொடுக்கவேண்டும் என்று கூறுகிறது! பிறகு விசாரித்து சிறிது கால அவகாசம் கொடுத்து சேர்த்து வைக்க முற்பட்டு, பின்னர் முடியவில்லை என்றால் அவர்களின் விவாகத்தை ரத்து செய்கிறது சட்டம்.  அதேபோலத்தான் தலாக் என்பதும்.  முதலில் ஒரு முறை கூறிவிட்டு பிறகு நிக்காஹ்-வில்(விவாகத்தின் போது) சாட்சிகளாக இருந்தவர்கள் அல்லது மற்ற சாட்சிகள் முன்னிலையில் விசாரணை செய்து மறுமுறையும் மணவாழ்க்கை பிடிக்கவில்லையெனில் மீண்டுமொருமுறை தலாக் கூறவேண்டும்.  பின்னரும் சில காலங்கள் கழித்து கடைசியாக ஒரு வாய்ப்பாக மூன்றாவது முறையும் தலாக் கூறினால்தான் விவாகரத்து கிடைக்கும்.
இப்போது ஒரு கேள்வி வரும்.  அதாவது இஸ்லாம் என்பது ஆண்களுக்கும் பெண்களுக்கும் சம உரிமை கொடுப்பதாகுமே!  ஆண் விரும்பினால் தலாக் கூறி விவாகரத்து செய்துகொள்வது போல, பெண் நினைத்தால் முடியுமா? முடியும். அதற்கு பெயர் குலாஹ்.  ஒரு பெண் இந்த கணவனுடன் தான் வாழ விரும்பவில்லை என்றால் குலாஹ் சொல்லி பிரிந்துவிடலாம்.  அதற்கும் அதே வழிமுறைதான்.


சரி.... பொது சிவில் சட்டம் என்கின்றோமே...இதை ஜெய்ன மதம் ஏற்றுக்கொள்ளுமா? அவர்களின் சாமியார்கள் எந்தவிதமான துணியையும் அணியாமல் சுற்றித்திரிகின்றனரே! அம்மணமாக திரிவது இபிகோ-வின்படி குற்றமாச்சே!  அவர்களை தண்டிக்க முடியுமா?  இது அவர்களின் மத அடிப்படை உரிமையாக உள்ளது.சீக்கியர்கள் டர்பண் அணிந்துகொண்டு கையில் கத்தியை வைத்துக்கொள்வதை இந்த பொது சிவில் சட்டம் நீக்குமா?  சீக்கியர்களின் மத உரிமையாக இது உள்ளதை மறக்கலாமா?HUF (ஹிந்து அண்டிவைடட் ஃபாமிலி) ACT-ஐ நீக்கமுடியுமா இந்த பொது சிவில் சட்டத்தால்? இதனால் இந்திய அரசாங்கத்திற்கு எவ்வளவு நஷ்டம் ஏற்படுகிறது என்பதை அறிவீர்களா?பொது சிவில் சட்டப்படி இந்த உரிமையை ஹிந்து மதவாதிகள் விட்டுக்கொடுப்பார்களா?

தாழ்தப்பட்ட பிரிவினர்களை பார்த்து நாம் அவர்களின் ஜாதியை கூறினாலும் நம்மை கைது செய்ய ஒரு சட்டம் இந்த தாழ்த்தப்பட்ட மக்களுக்கு உரிமையாக கொடுக்கப்பட்டுள்ளதே, இதை நீக்கிவிடுவார்களா இந்த பொது சிவில் சட்டம் அமைக்க விரும்பும் இவர்கள்?

இப்படி பல்வேறு வேற்றுமைகளை கொண்ட நம் பாரத திருநாட்டில் பொது சிவில் சட்டம் கொண்டுவருவது என்பது யானை தன் தலையில் மண்ணை தெளித்துக்கொள்ளும் விதமாக ஆகிவிடும் என்பதே என் கருத்து!

கடைசியாக நம் முஸ்லீம் சகோதரர்களுக்கு!
நாம் கலையிலும் மாலையிலும் பள்ளிவாசலில் தொழுதுவிட்டு வரும்போது எத்தனை மாற்று மதத்தினர் வந்து நின்று தங்களுக்கு "ஊத" சொல்லி அதனால் தங்களுக்கு ஏற்பட்ட குறை/நோய் குணமடைவதாக நம்பிக்கை கொண்டுள்ளனர். ஆனால் இவர்களில் ஒருவரேனும் ஒரு முஸ்லீம் வீட்டிற்கோ அல்லது கடைக்கோ வந்து நீங்கள் "ஊதுங்கள்"... எனக்கு குணமாகட்டும் என்று கூறுவதில்லையே ஏன் என்று சற்று சிந்தித்து பார்த்தீர்களா?  நாம் தொழும்போது மட்டுமே முஸ்லீமாக இருக்கின்றோம்.  மற்ற நேரத்தில்... அல்லாஹ்தான் காப்பாற்ற வேண்டும்.
போதை வஸ்துகளுக்கு ஆளாகியுள்ளோம்!
திருமணம் என்றால் வரதட்சணை பெற்று வீண் விரயமாக செலவு செய்வது!
பிள்ளைகளுக்கு மார்க்க அறிவு போதிக்கப்படுவதில்லை!
சகோதர/சகோதரி பசியாக இருக்கும் பட்சத்தில் நாம் விருந்துண்கிறோம்!
இப்படி பல குறைகளை நம்மிடமே வைத்துக்கொண்டு, நாமே ஷரீயத்தை பின்பற்றாமல் இருந்துகொண்டு நம் அரசை குறைகூற நமக்கு என்ன அருகதை உள்ளது?  சற்று சிந்தித்துப்பாருங்கள் இஸ்லாமிய சகோதர சகோதரிகளே!

வாருங்கள் நாம் ஒன்றுபட்டு இந்த அநியாயக்காரர்களின் சூழ்ச்சியை முறியடிப்போம்!  தேவையில்லை எங்களுக்கு பொது சிவில் சட்டம்.Sunday, 2 October 2016

பத்தாம் நாள்... THE TENTH DAY... யவ்மே ஆஷுரா!

அஸ்ஸலாமு அலைகும் வ ரஹ்மதுல்லாஹி வபர்காதஹூஹிஜ்ரி 1437 முடிந்து புத்தாண்டு 1438 பிறந்துள்ளது.  இந்த புத்தாண்டில் இருந்து, இன்ஷா அல்லாஹ் (இறைவன் நாடினால்)  சில பதிவுகள் நம் மார்கம் சம்பந்தமாக பதிவிடலாம் என்று எண்ணியுள்ளேன்.  அதன் ஆரம்பமாக புத்தாண்டின் முதல் மாதமாகிய மொஹர்ரம் மாதத்தின் பத்தாம் நாளின் சிறப்பை இங்கே தருகிறேன்.  இதில் ஏதேனும் தவறுகள் அல்லது குறைகள் இருப்பின் தயைகூர்ந்து நண்பர்கள் எடுத்து கூறினீர்களேயானால் அதை நிவர்த்தி செய்துகொள்வேன்.  அனைத்தையும் அறிந்தவன் அல்லாஹ் ஒருவனே!

ஒவ்வொரு இனம் மற்றும் மதத்திற்கும் நாட்காட்டிகள் இருக்கின்றன. அதேபோல இஸ்லாம் மார்க்கத்தின் நாட்காட்டியானது மொஹம்மத் ஸல்லல்லாஹூ அலைஹ் வஸல்லம் மக்காவை துறந்து மதினாவிற்கு பயணமான ஹிஜ்ரத்தில் ஆரம்பமாகிறது.  எனவே இஸ்லாமியர்களின் நாட்காட்டிக்கு ஹிஜ்ரி ஆண்டு என்று கூறப்படுகிறது.  இஸ்லாமியர்களாகிய நாம் மாதங்களை சந்திரனை கொண்டு கணக்கிடுகின்றோம்.  எனவே பன்னிரண்டு மாதங்கள் கொண்ட ஆண்டிற்கு கிட்டத்தட்ட 355 நாட்களே!

இதன் முதல் மாதம் மொஹர்ரம்   2) ஸஃபர்    3) ரபியுல் அவ்வல்
4) ரபியுல் தானி     5) ஜமாத்துல் அவ்வல்       6) ஜமாத்துல் தானி    7) ரஜப்               8) ஷா'பான்    9) ரமதான்  10) ஷவ்வால்  11) துல் காயிதா  12) துல் ஹஜ்மொஹர்ரம் என்ற அரபி வார்த்தையின் அர்த்தம் "தடை செய்யப்பட்டது" (FORBIDDEN) என்பதாகும்.  இந்த மாதத்தில் சண்டைகளிட்டுக்கொள்ள தடைசெய்யப்பட்டிருக்கிறது!  மேலும் இம்மாதத்தின் 10-ஆம் நாளானது மிகவும் புனிதமானதாக கருதப்படுகிறது.  எம்பெருமானார் ரசூலேகரீம் ஸல்லல்லாஹூ அலைஹ் வஸல்லம் மதீனா சென்றபோது, அங்கிருந்த யூதர்கள் மொஹர்ரம் 10-ஆம் நாள் உண்ணா நோன்பு வைத்திருந்தனர். அவர்களிடம் நோன்பு வைப்பதற்கான காரணத்தை கேட்டபோது யூதர்கள், "எங்கள் தூதர் மோஸஸ் (மூசா அலைஹ் வஸலாம்) மற்றும் அவரின் கூட்டத்தார்கள் கொடுங்கோலனாகிய பாரோ(ஃபிர்அவ்ன்) மன்னனிடமிருந்து காக்கப்பட்டார்கள்.  எனவே அந்த புனித நாளை நினைவு கூற நாங்கள் நோன்பு நோற்கிறோம்" என்றனர்.  இதை கேட்ட எம்பெருமானார் ஸல்லல்லாஹூ அலைஹ் வஸல்லம் "உங்களை விட நாங்கள் தான் மூஸா அலைஹ் வஸலாம்-க்கு நெருங்கியவர்கள்.  எனவே நாங்கள் இரண்டு தினங்கள் நோன்பு நோற்போம்" என்று கூறினார்கள்.  எனவே மொஹர்ரம் மாதம் 9 மற்றும் 10 ஆகிய இரு நாட்களில் அல்லது 10 மற்றும் 11 ஆகிய இரண்டு நாட்களில் நோன்பு நோற்பது நபி வழியாகும் (ஸுன்னத்)பொதுவாக நாம் மொஹர்ரம் 10-ஆம் நாளை துக்க நாளாக புரிந்து வைத்துள்ளோம்.  ஆனால் இந்த ஆஷூரா நாளானது மிகவும் சிறப்பிக்கபட்ட நாளாகும்.  இந்த நாளில் தான் உலகில் படைக்கப்பட்ட முதல் மனிதனான ஆதம் (ADAM) அலைஹ் வஸலாம் அவர்களின் பாவமன்னிப்பு அல்லாஹ்வால் ஏற்றுக்கொள்ளப்பட்டது!  நூஹ் (NOAH) அலைஹ் வஸலாம் அவர்கள் வெள்ளப் பிரளயத்திலிருந்து தப்பிக்க அல்லாஹ்வின் ஆணைபடி தான் நிர்மாணித்த கப்பலில் ஏறி பயணித்தபோது அல்லாஹ்வால் காப்பாற்றப்பட்டதும் இதே ஆஷூராவன்றுதான்.  இப்ராஹீம் (ABRAHAM) அலைஹ் வஸலாம் அவர்கள் நம்ரூத் அரசனால் கொழுந்துவிட்டு எரிந்த நெருப்பு குண்டத்தில் வீசியெறிந்த போது அவரை அல்லாஹ் காப்பாற்றியதும் அதே நன்னாளில்தான்!

மூசா அலைஹ் வஸலாம் அவர்களோடு அல்லாஹ் தூர்ஸினா மலையில் நேரடியாக பேசி தவ்ராத் வேதத்தை அருளியதும் (10 COMMANDMENTS) இதே மொஹர்ரம் பத்தாம் நாளில் தான்!  கொடிய நோயில் உழன்றுகொண்டிருந்த அய்யூப் அலைஹ் வஸலாம் அவர்கள் நோய் குணமடைந்ததும் இதே நன்னாளில்தான்!  யூஸூஃப் (JOSEPH) அலைஹ் வஸலாம் பிரிந்த பின் தன் தந்தையாகிய யாகூப் அலைஹ் வஸலாம் அவர்களோடு இணைந்ததும் இதே நன்னாளில்தான்!  மீன் வயிற்றில் வாழ்ந்த யூனூஸ் அலைஹ் வஸலாம் அவர்கள் மீனின் வயிற்றிலிருந்து வேளியேற்றப்பட்ட தினமும் இதே பத்தாம் நாள்தான்!  ஃபிர்அவ்ன் கடலில் மூழ்கடிக்கப்பட்டு மூஸா  (MOSAS) அலைஹ் வஸலாம் மற்றும் அவரின் கூட்டத்தார்கள் பத்திரமாக பாதுகாக்கப்பட்டதும் அன்றைய தினம்தான்!

தாவூத் (DAVID) அலைஹ் வஸலாமின் பாவமன்னிப்பு ஏற்றுக்கொள்ள பட்டதும், சுலைமான் (SOLOMON) அலைஹ் வஸலாமின் அரசாட்சி மீண்டும் அவருக்கே திருப்பியளிக்கப்பட்டதும், ஈஸா (JESUS) அலைஹ் வஸலாம் அவர்கள் வானத்தில் உயர்த்திக்கொள்ளப்பட்ட தினமும் இதே ஆஷூரா அன்றுதான்!  

மேலும் எம்பெருமான் ரஸூலே கரீம் ஸல்லல்லாஹூ அலைஹ் வஸல்லம் அவர்களின் பேரன் ஹஜரத் ஹுசைன் ரலியல்லாஹ்ஹூ அன்ஹூ அவர்கள் எதிரிகளால் ஷஹீத் ஆக்கப்பட்டதும் இதே மொஹர்ரம் மாதம் பத்தாம் நாள்தான். மேலும் உலகம் படைக்கப்பட்டதும் அழிக்கப்படப்போவதும் யவ்மே ஆஷூரா எனும் இதே நாளில்தான் என்பதனையும் நாம் நினைவில் கொள்வோம்.இப்படி பல்வேறுபட்ட சிறப்புகள் நிறைந்த "யவ்மே ஆஷூரா" என்கின்ற மொஹர்ரம் மாதம் பத்தாம் நாளை நாம் சிறப்பிக்கவேண்டியது நம் கடமையாக உள்ளது.  மேலும் மொஹர்ரம் மாதம் 9 மற்றும் 10 ஆகிய இரண்டு நாட்களில் ஸுன்னத்தான நோம்பு நோற்று அந்நாளை சிறப்பிப்போம்.

Sunday, 25 September 2016

அஸ்ஸலாமு அலைக்கும்

நண்பர்களே, எனக்கு ரொம்ப நாளா ஒரு சந்தேகம்.  அதாவது இந்த ராஜாக்கள் போரிட்டது ஏன், இந்த ராஜாங்கங்கள் அழிந்ததும் வளர்ந்ததும் ஏன்?  சேரன் சோழநாட்டை பிடிப்பதும், சோழன் பாண்டியநாட்டை வெல்வதும், பாண்டியன் பல்லவர்களை விரட்டுவதும், பல்லவர்கள் சேர அரசாட்சிகளை அடிமைபடுத்துவதும் ஏன் ஏற்பட்டது?  அசோக சக்ரவர்த்தி தென்னகம் வென்றதும், ஹைதராபாத் நிஜாம் ஆற்காடு மற்றும் திண்டுக்கல் வரையிலும் கொடி நாட்டியது... வீர சிவாஜி மதுரையை வென்றது... இப்படி சொல்லிக்கொண்டே போகலாம்.  இது மட்டுமா நம் சோழர்கள் இமயமலையில் கொடி நாட்டியதும் கிழக்காசிய நாடுகளான தாய்வான் இந்தோனேசியா போன்ற பல நாடுகளையும் தங்களின் அதிகாரத்திற்கு கீழ் கொண்டுவந்தனரே அது ஏன்?ரொம்ப ஸிம்பில் நண்பர்களே, ஆசை! அதிகார ஆசை! தற்புகழ்ச்சி! அவ்வளவுதான்!நீ பெரியவனா இல்லை நானா?  நீ என் தந்தையை வென்றாயல்லவா, நான் உன் பிள்ளையை வெல்கிறேன் பார்!  நீ இவ்வளவு தூரம் ஆள்கிறாயா?, என் அதிகாரத்தை பார் அதுவரை! உன்னிடம் யானைப்படை இருக்கிறதா? என்னிடம் கடற்படையுள்ளது! இப்படி தடியெடுத்தவனெல்லாம் தண்டல்காரனாகத்தானே இருந்தார்கள்?

இதில் வென்றவர்கள் வீரர்கள், தேசப்பற்றுள்ளவர்கள்.
தோற்றவர்களோ துரோகிகள் மற்றும் கோழைகள்!
பின் சரித்திரம் புரட்டிப்போடப்படும்.  கோழை வீரனாவான்.  தேசப்பற்று கொண்டிருந்தவன் துரோகியாவான்.

இதுவே வரலாறானது.  ஆனாலும் மக்களோ தத்தமது நாடுகளில் சிறப்பாகவே வாழ்ந்து வந்தனர்.  நேற்று வரை பாண்டிய மன்னனால் ஆளப்பட்ட மக்கள் வீர சிவாஜியின் தளபதிகளான நாயக்கர்மார்களின் குடிமக்களானார்கள்.  பல்லவ நாட்டு மக்கள் நிஜாமால் நேரடியாக ஆளப்பட்டனர்.  இப்படியே சொல்லிக்கொண்டே போகலாம்.  அரசுகள் மாறினவே தவிர மக்கள் மாறவில்லை என்பதை இங்கே பதிகிறேன்.

அதேபோல கிபி 1500-க்கு பிறகு மொகலாயப் பேரரசர்கள் இங்கு படையெடுத்து வந்தனர்.  இவர்களும் மற்ற அரசர்கள் எந்த நோக்கத்தோடு நாடுகளை வென்றனரோ அதே நோக்கத்தோடேதான் வந்தார்கள்... வென்றார்கள்.   ஆனால் நாம் இன்று படிக்கும் வரலாறோ, மொகலாய மன்னர்கள் பலமுறை போரிட்டு தோற்று நம் செல்வங்களை பறித்து சென்றனர்.  போரில் தோற்பவன் எப்படி செல்வங்களை கொண்டு செல்வான்... இழந்தல்லவா செல்வான்? வென்றவர் இங்கேயே தங்களின் அரசாட்சியை செய்தனர்.  அதுபோல இவர்கள் (மொகலாயர்கள்) தங்களுடைய மதத்தை பரப்பினார்கள் என்றும் இன்றைய வரலாற்று ஆசிரியர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

அக்பரோ தீனே இலாஹி என்ற ஒரு புது மதத்தையே இங்கு தோற்றுவித்தார். அந்த மதம் இஸ்லாமுக்கு முற்றிலும் மாறுபட்டது ஆகும்.  அதே போல இந்த மொகலாய மன்னர்களால் இஸ்லாம் பரவியதா என்று பார்த்தோமேயானால் இல்லவேயில்லை என்பதுதான் அதாரபூர்வமான உண்மை! அப்படியில்லையென்றால் கிபி 1800-களில் ஆங்கிலேயர்கள் நம் நாட்டை அடிமை படுத்தியபோது ஒரு ஜான்ஸி ராணி லஷ்மிபாயோ, வீரபாண்டிய கட்டபொம்மனோ, ராணி மங்கம்மாளோ, மங்கல் பாண்டேவோ எப்படி தங்களின் நாட்டுக்காக போரிட்டிருக்க முடியும்?

இப்போ விஷயத்துக்கு வருவோம்!  கொஞ்ச நாட்களுக்கு முன் கீழே உள்ள ஒரு செய்தியை இணையத்தில் பார்த்தேன்.  அதாவது ஆங்கிலேயர்கள் இந்தியாவில் நுழைந்தபோது .... please note down... மொகலாயர்கள் ஆதிக்கம்தான் அகண்ட பாரதத்தில் இருந்தது.  அப்படிப்பட்ட சமயத்திலும் ஆங்கிலேய பார்லிமெண்டில் லார்ட் மெக்கலேவால் பதியப்பட்டது...

"ஒரு பிச்சைகாரனோ, திருடனோ இங்கு இல்லை!
செல்வவளம் மிக்க நாடு இது!  நன்நடத்தை கொண்ட திறமையான மக்கள்!
இந்த நாட்டின் முதுகுத்தண்டை முறிக்க வேண்டுமென்றால் இம்மக்களின் ஆன்மீக மற்றும் கலாச்சார பாரம்பரியத்தை தகர்த்தாலொழிய முடியாது.  அதற்காக நாம் செய்யவேண்டியது அவர்களின் பழங்கால பாடத்திட்டத்தையும் அவர்களின் கலாச்சாரத்தையும் ஒழிக்கவேண்டும்!"


1835 ஃபிப்ரவரி இரண்டாம் தேதியிட்ட லார்ட் மெக்கலே-வின் அறிக்கைபடி பார்த்தால் மொகலாயர்கள் பல நூறு ஆண்டுகள் நாட்டை ஆண்ட பின்னும் மக்கள் சுயசிந்தனையுடன் ஆன்மீகவாதியாகவும் தங்களின் கலாச்சாரத்தை பேணி காப்பவர்களாகவுமே வாழ்ந்துள்ளனர் மற்றும் வாழ வலியுறத்தப்பட்டுள்ளனர் என்பதை நாம் உள்ளங்கை நெல்லிக்கனி போல புரிந்துகொள்ள முடியும்.

உண்மை இப்படி இருக்கும்போது  நாம் இன்று மதத்தைக்கொண்டு ஏன் முறண்படுகிறோம்.  இன்றும் நம் கலாச்சாரத்தில் மாற்று மதத்தினரை "மாமன்/மச்சான்/மாப்பிள்ளை/அண்ணே/தம்பி என்று முறைகொண்டுதானே அழைத்துக்கொண்டிருக்கிறோம்!  பின் நமக்குள் வன்மம் ஏன்?  பிரிவினை ஏன்?  

மீண்டும் ஒருமுறை உறக்க கூறுகிறேன்... 
இஸ்லாம் வளர்ந்தது வாளால் அல்ல... 
நற்செயல்களால்/நன்னடத்தையால் மட்டுமே!
I AM A MUSLIM not because of CHANCE but of CHOICE!

Wednesday, 14 September 2016

அன்னை தெரேசாவை கவுரவித்த மண், சகோதரி நிவேதிதாவை புறக்கணித்தது ஏன்?

கடந்த திங்கட்கிழமை (13-09-2016) மாலை  நாடகம் பார்க்க ஒரு சந்தர்ப்பம் கிடைத்தது.  நண்பனின் நீண்ட நாள் வற்புறுத்தலுக்கு பிறகு, "சரி, நாடகம்தானே, பார்த்துவிடலாம்" என்று எண்ணி சென்னை நாரதகான சபாவுக்கு குடும்பத்தோடு பயணித்தேன்.  வற்புறுத்திய நண்பனை அழைத்து என்னுடைய வருகையை உறுதி செய்துவிட்டு "டிக்கெட் கேட்டால் என்ன செய்வது?" என்று மறுபடியும் கேட்டதற்கு, "என் பெயரை கூறு, டிக்கெட் எடுக்கவேண்டிய தேவையேற்படாது" என்று கூறிய வார்த்தையால் மகிழ்ந்தேன்.  (அதாவது ஓஸீ-யில் நாடகம் பார்க்க வாய்ப்பு கிடைத்ததால் குடும்பத்தோடு சென்றேன்) 

நாடகம் "சகோதரி நிவேதிதா"


விவேகானந்தரை லண்டனில் சந்தித்து பின் சேவை செய்வதற்காக இந்தியா வந்து,  புதுமைப்பெண் கண்ட நம் முண்டாசுக் கவிஞருக்கு உந்துதலாக இருந்த ஒரு இளம் பெண்ணின் வாழ்க்கை வரலாற்றை மிகவும் அற்புதமாகவும் அதே நேரத்தில் சற்றும் அலுப்பு ஏற்படாமலும் நாடகமாக்கிய குழுவிற்கு முதலில் எனது பாராட்டுக்களை தெரியப்படுத்திக்கொள்கிறேன்.
ஒரு வரலாற்றை கூறும்போது அதில் நம் சமகாலத்து இளைஞ்சர்களுக்கு ஒரு சுவாரசியம் ஏற்படுத்துவதற்காக மகாகவி பாரதியையே நாடகம் முழுவதிலும் வியாபிக்கவைத்து அவர் மூலமாகவே கதையை நகர்த்திய விதம் மிகவும் புதுமையாக இருந்தது.  நடித்த அனைத்து பாத்திரங்களும் நாடகத்திற்கு உயிர் கொடுத்தனர் என்றால் அது அந்த குழுவினர்க்கு நான் கொடுக்கும் மிக மிக குறைந்த விமர்சனமே!  முதல் காட்சியில் தோன்றும் விவேகானந்தர் அசத்தியேவிட்டார்.  பாரதி, நிவேதிதா, ஹோலி மதர், ராமகிருஷ்ணர் என்று நடித்த அனைவரையும் இங்கே குறிப்பிட்டேயாகவேண்டும்.  அனைவரும் பாத்திரமறிந்து அவ்வாறே மாறிவிட்டனர்.  நடிகர்களை தேர்ந்தெடுத்தற்காகவும் அவர்களை பாத்திரங்களாக வாழவைத்தமைக்காகவும் ஹாட்ஸ் ஆஃப் டு யூ, இயக்குனர் கே.விவேக் ஷங்கர்!
மார்கெரட் எலிஸபெத் நோபல் என்ற ஒரு புண்ணிய ஆத்மாவை சகோதரி நிவேதிதாவாக மாற்றிய சுவாமி விவேகானந்தர்!  தன்னையே நிவேதிதாவாக்கி தன் நாட்டையும் குடும்பத்தையும் விட்டு இந்தியா வந்து, இங்கு தான் பிறந்த மதத்தை போதிக்காமல் இங்குள்ள மக்களுக்கு கல்வி என்ற ஒளிவிளக்கை ஏற்ற வந்து அதற்காகவே வாழ்ந்து மறைந்த நிவேதிதா! பெண் விடுதலையையும் சுதந்திர பாரதத்தையும் புரிந்து பாடிய பாரதி!  இப்படி பல வரலாற்று விஷயங்களை புரிய வைத்தது இந்த நாடகம்.  
நிவேதிதாவாக நடித்தவரின் நடிப்பை பற்றி குறிப்பிட்டே ஆகவேண்டும். சுவாமி உலகைவிட்டு மறைந்தார் என்பதை கேள்விபட்டு, அன்னையிடம் வந்து அந்த அழும் காட்சி.  அவர் தன் முதுகைத்தான் நமக்கு காண்பிக்கிறார். ஆனாலும் அவரின் முழு உடலும் குலுங்குகிறது.  இப்படி செய்ய அவர் சகோதரியாக வாழ்ந்ததாலேயே முடிந்திருக்கும்.  எக்ஸெலெண்ட் பெர்ஃபார்மன்ஸ் நிவேதிதா!
அடுத்ததாக பாரதியாக நடித்தவர்.  இத்தனை நாட்களாக பாரதி என்றால் நம் கண் முன் நிற்கும் ஒரே உருவம், நடிகர் சுப்பையா.  இதோ இந்த தலைமுறைக்கு பாரதி என்றால் நண்பன் மது!  நம் மனக்கண்ணில் நிற்கும் அதே கம்பீரம்... அதே வார்த்தை பிரயோகம்... அதே உடலசைவு... நண்பா நடிகண்டா நீ!!
நாடகம் முடிந்து வீடு திரும்பும்போது மனதில் ஏற்பட்ட ஒரு கேள்வியே இந்த பதிவின் தலைப்பு!  இந்த சந்தேகத்திற்கு பதில் இருந்தால் நண்பர்களே விளக்கவும்.