Saturday 11 January 2014

தமிழகம்: அரசியல் - சினிமா - சாராயம் - இலவசம்

1916-ல் டாக்டர் அன்னி பெசண்ட் இந்திய ஹோம் ரூல் இயக்கத்தை சென்னையில் ஆரம்பித்தது...
1918-ல் திரு விக இந்தியாவின் முதல் தொழிலாளர் சங்கத்தை துவக்கியது...
1937-ல் நடந்த சட்டமன்ற தேர்தலில் சக்ரவர்த்தி ராஜகோபாலாச்சாரி (ரஜாஜி) சென்னை மாகாண முதல்வராக பதவியேற்றது...
உலகின் இரண்டாவது நீளமான கடற்கரையை கொண்ட சென்னை (மெரினா கடற்கரை)
இந்தியாவின் மான்செஸ்டர் என்றழைக்கப்படும் கோயம்பத்துர்
மலைகளின் ராணி என்று வர்ணிக்கப்படும் உதகமண்டலம்
கோயில் நகரமாம் மதுரை
தஞ்சை பெரிய கோயில்
இரண்டாம் நூற்றாண்டில் கட்டப்பட்ட கல்லணை
கிட்டத்தட்ட 100 அடி உயரமும் 300 டன் எடையும் கொண்ட திருவாரூர் தேர்
133 அடி உயர திருவள்ளுவர் சிலை
150 அடி உயர கொடி மரம் (புனித ஜார்ஜ் கோட்டை)
ஆசியாவின் மிகப்பெரிய பேருந்து நிலையம் (கோயம்பேடு)
ஆசியாவின் மிகப்பெரிய சிறைச்சாலை (புழல்)
கப்பலோட்டிய தமிழன்
கொடி காத்த குமரன்
காந்திக்கே அடையாளமாக மாறிய மதுரை விவசாயியின் ஆடை
கணிதமேதை ராமானுஜம்
இயற்பியலார் சர் சிவி ராமன்
விஞ்ஞானிகள் ஜிடி நாயுடு முதல் அப்துல்கலாம் வரை என்று

tamilnadu symbol

இப்படி நாம் அன்றைய சென்னை மாகாணத்தின், இன்றைய தமிழ் நாட்டின் பெருமையை பற்றி சொல்லிக்கொண்டே போகலாம்.

ஆனால் இன்று நம் தமிழகத்தின் நிலையை யோசித்துப்பார்த்தால்...

உலகிலுள்ள கிட்டத்தட்ட 7000 மொழிகளில் 700 மொழிகளில் மட்டுமே எழுதவும் பேசவும் முடியும்.  அதிலும் வெறும் 100 மொழிகளே சொந்த வரிவடிவம் கொண்டவை.  இவற்றுக்கெல்லாம் மூலமொழியாக திகழ்ந்து இன்றளவும் பேச்சு வழக்கில் உள்ள இரண்டு மொழிகளில் ஒன்றான தமிழ் மொழியை நாமே பேச வெட்கப்படுகின்றோம்.  ஆனால் மொழிக்கு மாநாடு நடுத்துவதும் "தமிழ் வாழ்க" என்ற கோஷம் போடுவதும் மட்டும் குறையவில்லை.
                                              
தமிழ் படித்தால் தமிழகத்தில் மதிப்பில்லை! தமிழில் படித்தவர்களுக்கு இங்கு வேலையுமில்லை!
நம் மீனவர்கள் மீன்பிடிக்க சென்றால், திரும்பி வருவது சந்தேகமாக உள்ளது.
நம் விவசாயிகளுக்கு பயிர் செய்ய நீர் கிடைப்பதில்லை.
நம் மக்களுக்கு குடிக்க நீரில்லை.
திடமாக இருக்கும் அணையையும் பலவீனமானதுதான் என்று நம்பவைக்கும் நம் அண்டைய சகோதரன்.
பாம்பன் பாலம் கட்டி சாதனை படைத்த நமக்கு சேது சமுத்திர திட்டம் நடைமுறைபடுத்த முடியவில்லை.
தொப்புள் கொடி உறவு என்று கூறிக்கொண்டே நம் இனம் அழிவதை வேடிக்கை மட்டுமே பார்க்கும் ஒரு இழி நிலை!
நம்மீது நம்பிக்கை வைத்து கடல் தாண்டி அடைக்கலம் தேடியவர்களை இன்றும் நாம் எப்படி நடத்திக்கொண்டிருக்கிறோம்?

மேலே உள்ள அனைத்து எதிர்மறையான வாக்கியங்களுக்கு காரணம் என்று பார்த்தால் அது வேறு எங்கோ இல்லை.  நம்மிடம்தான் குறையுள்ளது.  கூடி வாழ்ந்தால் கோடி நன்மை என்று அறிந்த நாம், நம் எதிர்கால சந்ததியர்களுக்கு பயன்தரக்கூடிய எந்த திட்டத்தை செய்ய நினைத்தாலும் அதற்கு ஒற்றுமையாக குரல் கொடுக்க மறந்துவிடுகின்றோம்.  இதையேதான் நம் தலைவர்களும் நமக்கு கற்று தந்துக்கொண்டிருக்கின்றனர்.

 

நம் நாட்டை கடந்த நாற்பத்தைந்து ஆண்டுகளாக ஆண்டு கொண்டு இருப்பவர்கள் மற்றும் இனி ஆளவேண்டும் என்று கனவு காண்பவர்கள் என்று அனைவருக்கும் உள்ள ஒரே ஒற்றுமை, அவர்கள் வரும் துறை. கலைத்துறை! இதையே காரணம் காட்டி நம் இளைய சமுதாயத்தை நாமே சீரழித்து கொண்டிருக்கிறோம் என்பதே உண்மை.

மாணிக்க வாசகர் தனது 24வது வயதில் திருவாசகம் பாடினார்
தனது 26வது வயதில் ஏஆர் ரஹ்மான் இசையமைப்பாளரானார்
தன்னுடைய 19வது வயதில் விஸ்வநாதன் ஆனந்த், சதுரங்க உலகின் கிராண்ட் மாஸ்டர் என்ற அங்கிகாரம் பெற்றார்
தன்னுடைய 13வது வயதில் குற்றாலீஸ்வரன் கின்னஸ் உலக சாதனை படைத்தான்
தனது 22வது வயதில் சுதேஸமித்ரன் பத்திரிக்கையின் துணையாசிரியரான பாரதி தனது 38-ஆம் வயதில் தேசியக்கவியாக காலமானான்
தனது 24வது வயதில் திருவிக பெரியபுராணத்துக்கு குறிப்புரையும் வசனமும் இயற்றினார்
கணித மேதை ராமானுஜன் சாதித்ததும் தனது 27வது வயதிலேயே!

இப்படி சாதனையாளர்களை பட்டியலிட்டால் அதில் அனைவரும் இளைஞர்களாகவே இருப்பதை பார்க்கும் நம் இளைஞன், தன் பொழுதை வீணடிப்பது இதே சினிமாத்துறையாகத்தான் இருக்கிறது. இப்படி இன்றைய ஒவ்வொரு இளைஞனும் தன்னுடைய இளமையை வீணடித்து கொண்டிருப்பதற்காக யாரும் கவலையும்படவில்லை.  தமிழில் சினிமாவிற்கு பெயர் வைத்தால் வரிவிலக்கு என்று சொல்லும் அரசு, தமிழை மட்டுமே கற்றறிந்தவர்க்கு என்ன அளிக்கிறது என்று பார்த்தால் மிஞ்சுவது ஒன்றுமில்லை.
ரசிகர்கள் மொட்டையடித்து காவடி தூக்கி பாலாபிஷேகம் செய்கின்றனர்

சரி அடுத்ததாக நாம் பார்க்கும் கொடுமை என்றால் அது சாராயம்.  இன்று தமிழகத்தின் அடையாளமாக மாறிக்கொண்டிருப்பது டாஸ்மாக் கடைகள்! அரசு நடத்தும் எந்த துறையிலும் இலக்கு நிர்ணயிப்பதுமில்லை. ஒருவேளை இலக்கு நிர்ணயித்தாலும் அது வெறும் காகிதத்தில் மட்டுமே இருக்கும். ஆனால் டாஸ்மாக் இலக்கு மட்டும் குறிப்பிடுவதைவிட அதிகமாகவே எட்டப்படுகிறது.

எந்த ஒரு சமூகம் போதைக்கு அடிமைபட்டுகிடக்கிறதோ அது எப்போதும் தன்னை தொலைத்துவிடும் என்பது வரலாறு.  நம் தலைவர்கள் இதை நன்றாகவே உணர்ந்துள்ளனர்.  ஆனாலும் இவர்களுக்கு அரசு நடத்த இந்த பணம்தான் முக்கிய வருமானமாக இருக்கின்றது என்கின்றனர்.  கண்ணை விற்று ஓவியம் வாங்குவதற்கு ஒப்பானதாகும் இந்த கூற்று.  

"குடிமக்களை" காக்கும் தலைவர்


மூன்று தலைமுறைக்கும் பீடித்திருக்கிறது இந்த நோய்!!

2002-ல் 2000 கோடியாக இருந்து சாராய வருமானம் 2010-ல் 20,000 கோடியாக வளர்ந்துள்ளது.  கடந்த புத்தாண்டின் (01-01-14) ஒரு நாள் விற்பனை மட்டும் 250 கோடிகளை தாண்டியுள்ளதாம்!

சினிமாவினாலும் சாராயத்தாலும் கெடுவது போதாமல் இலவசங்களை கொண்டும் நம்மை ஏமாற்றுகின்றனர், நம் தலைவர்கள்!
மருத்துவம், கல்வி, மின்சாரம் போன்ற அத்தியாவசியங்களை விலைக்கு கொடுத்துவிட்டு, தொலைக்காட்சி பெட்டி, மிக்ஸி, கிரைண்டர் மற்றும் ஃபேன் ஆகியவற்றை விலையில்லாமலும் கொடுப்பதில் என்ன ஆளுமை தன்மை இருக்கிறது இவர்களுக்கு?  இப்போது செல் ஃபோன் தரப்போகின்றார்களாம். ரொம்ப முக்கியம்!!!


நாம் இருப்பது மக்களாட்சியில்தான் என்பதை மறந்துவிட்டிருக்கிறோம். மக்களுக்கு நன்மையை தராத எந்த அரசையும் எதிர்க்கும் நாம், மக்களுக்கு தீமையை தரும் அரசுகளுக்கே மீண்டும் வாய்ப்பளிக்கின்றோம்.

இந்தியாவிலுள்ள மாநிலங்களில் சாராய விற்பனையில் முதலிடத்தில் நம் தமிழகம்!
தமிழ் சினிமா, படத்தயாரிப்பில் இந்தியாவிலேயே முதல் மூன்று இடங்களுக்குள் இருக்கிறது!
இலவச திட்டங்களை அறிமுகப்படுத்தியதில் முதலில் நிற்பதும் நாமே!

குடிக்க நல்ல தண்ணீர் தரமுடியாத அரசு...
விவசாயத்திற்கு நீர் தரமுடியாத அரசு...
தொழிற்சாலைக்கு மின்சாரம் தரமுடியாத அரசு...
கல்வியை காசுக்கு விற்கும் அரசு...
மருத்துவத்தை வியாபாரமாக்கும் அரசு...

வாழ்க தமிழ் மாநில அரசியல்