Monday 23 March 2020

கரோனா + முஸ்லிம் + மசூதி


அஸ்ஸலாமு அலைகும்

இப்போது நம் நாடு அபாயகரமான ஒரு கட்டத்தில் உள்ளது.  இந்தியனாகிய நம் ஒவ்வொருவரின் மிக முக்கிய பங்களிப்பை கொண்டுதான் நம் நாடு அந்த அபாயத்திலிருந்து விடுபட முடியும்.  நாம் இன்னமும் மந்தமாகவே இருந்து விடுவோமானால் இன்று இத்தாலியில் நடப்பது அடுத்த வாரத்திலிருந்து நம் நாட்டில் நடக்க தொடங்கிவிடும்.  இதை நான் அச்சுருத்துவதற்காக கூறவில்லை, மாறாக உண்மையை பேசியே ஆக வேண்டிய காலத்திற்கு நாம் வந்தாகியாச்சு.

கரோனா வைரஸ்

இந்த வைரஸ் மனிதர்களிடம்தான் பரவி வளர்ந்து வாழ்ந்து கொல்லக்கூடியது.  மனித உடல் கிடைக்காத பட்சத்தில் அதிக பட்சமாக இந்த வைரஸ்ஸின் வாழ்நாள் என்பது 12-14 மணி நேரம்தான்.  வைரஸ் பாதிக்கப்பட்ட மனிதனிடமிருந்து இது அடுத்த மனிதனுக்கு காற்று மூலமாக பரவுவதில்லை.  மாறாக இந்த வைரஸ் பாதிக்கப்பட்ட மனிதன் தும்முவதாலோ அல்லது துப்புவதாலோ ஏற்படும் கழிவு, அதாவது எச்சில்/சளி போன்றவைகளில் இந்த வைரஸ் இருக்கும்.  மேலும் வைரஸ் பாதித்த மனிதனின் கை/கால் தடம் பதித்த இடங்களிலும் இந்த வைரஸ் தங்கிவிடும்.  இப்போது அந்த வைரஸின் வாழும் காலம் மேலே சொன்னது போல 12-14 மணி நேரமாகும்.  துப்பிய அல்லது சளி சிந்திய அல்லது கை/கால் பதித்த இடமானது நம் கண்ணுக்கு ஒரு அரை மணி நேரத்திற்கு பிறகு சுத்தமாகத்தான் தெரியும்.  ஆனால் அந்த இடத்தில் இந்த கரோனா வைரஸானது அடுத்த பல மணி நேரம் உயிரோடுதான் வாழ்ந்து கொண்டிருக்கும்.  இந்த இடத்தை ஒரு ஆரோக்கியமான மனிதன் தொடுவதால் உடனடியாக அவனிடம் தொற்றிக்கொள்ளும்.

இப்படி தொற்றிக்கொண்ட இந்த வைரஸ், அந்த மனிதனிடம் தொற்றிக்கொண்டதை நாம் கண்டறிய குறைந்தது 5 முதல் 8 நாட்கள் வரை ஆகும்.  இங்குதான் சிக்கலே! அதாவது கரோனா வைரஸ் என்னை தொற்றியுள்ளது என்பதனை நான் அறிந்து நான் அதை மற்றவர்களுக்கு பரவாமல் என்னை நானே பாதுகாத்துக்கொள்வதற்கு முன்பே, அதாவது அந்த 5 முதல் 8 நாட்களுக்குள், நான் பயணம் செய்திருந்தாலோ அல்லது சினிமா, கடை தெரு, ஹோட்டல், பார்க், பீச் அல்லது வேலை செய்யும் இடம் போன்ற பொது இடங்களுக்கு சென்றிருந்தாலோ, என்னையும் அறியாமல் என்னிடம் இருக்கும் கரோனா வைரஸானது அடுத்தவருக்கு பரப்பட்டிருக்கும் என்பதுதான் கசப்பான உண்மை.  இதை கட்டுப்படுத்த ஒரே வழி நான் என்னை தனிமைபடுத்திக் கொள்வதுதான்.  அதாவது நாம் நம்மை!

எனக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளதோ இல்லையோ, நான் குறைந்தது 5 முதல் 8 நாட்கள் தனிமைபடுத்திக்கொள்ள வேண்டும்.  இதுவே இத்தருணத்தில் நாம் செய்ய வேண்டியது.  இப்படி செய்வதால் கரோனா பாதிக்கப்பட்ட என்னால் மற்றவருக்கு அது பரவாமல் தடுக்கப்படும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.  அதேபோல கரோனா பாதிக்கப்படாத ஒரு மனிதன் அந்த வைரஸின் தொற்றிலிருந்து பாதுகாத்துக்கொள்ளலாம் என்பதும் நிதர்சனம்.

இதற்காகத்தான் நம் பாரதப் பிரதமர் மார்ச் 22-ஆம் நாள் பொதுமக்கள் ஊரடங்கு பிறப்பித்தார்.  அதாவது நம் நாட்டு பிரஜைகள் யாரும் காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை தங்களின் வீடுகளிலேயே தங்குவது என்று உத்தரவிட்டார்.  நாட்டில் பொது இடங்களில் தானாகவே பரவி கிடக்கும் கரோனா வைரஸானது தனக்கு எந்த மனித உடலும் கிடைக்காத பட்சத்தில் 12 மணி முதல் 14 மணி நேரத்தில் அது தானாகவே மடிந்துவிடும் என்ற எண்ணத்தில் மேற்சொன்ன ஜனதா கர்ஃபி-யை பிறப்பித்திருந்தார்.  இந்த உத்தரவில் பிரதமர், கரோனா பாதிப்பிலிருப்பவரை குணப்படுத்தும் சேவை செய்வோரை பாராட்டுவதற்காக, மாலை 5 மணிக்கு கை தட்டி/கரகோஷம் எழுப்ப வேண்டிக்கொண்டதை நம் மக்கள் தவறுதலாக புரிந்து கொண்டு மாலை 5 மணிக்கு வீடுகளிலிருந்து புறப்பட்டு பேரணியாகவும் ஊர்வலமாகவும் கூட்டம் கூட்டமாகவும் சேர்ந்து செய்த கும்மாளமானது அந்த 14 மணி நேர ஊரடங்கு உத்தரவை பயனற்று போகச் செய்துவிட்டது என்பதே நாம் கண்ட காட்சிகள் பறைசாற்றுகின்றன.

இவ்வாறே தான் சில நாட்களுக்கு முன் இத்தாலி நாட்டவர்களும் தங்களுக்கு போடப்பட்ட ஊரடங்கு உத்தரவை அலட்சியப் படுத்திவிட்டு தங்களின் மனம் போன போக்கில் பொது இடங்களில் கூடி கும்மாளமிட்டுக்கொண்டனர்.  அதனுடைய பயனை அடுத்த சிலபல நாட்களிலேயே அவர்கள் அறுவடையும் செய்து கொண்டுள்ளனர்.  இன்று ஒவ்வொரு நாளும் 500, 1000 பேர் என்று செத்து விழுகின்றனர்.  பிணங்களை புதைக்க முடியாமல் நாறிக்கொண்டிருக்கின்றன. இந்த வைரஸ் பாதிக்கப்பட்ட 60 வயதுக்கு மேல் உள்ளவர்களுக்கு சிகிச்சையளிக்க வேண்டாம் என்றும் கண்டிப்பாக இந்த நோயாளி உயிர் பிழைப்பான் என்றால் மட்டுமே ஆக்ஸிஜன் தரவேண்டும் போன்ற உத்தரவுகளை போட்டுள்ளது இத்தாலிய அரசு.
கொஞ்சம் சிந்தித்துப் பாருங்கள்.  6 கோடி மக்கள் கொண்ட, மருத்துவத்துறையில் முன்னேறிய நாட்டிலேயே இந்த நிலை என்றால் நம் நாட்டில் இப்படி ஏற்பட்டால்?  எண்ணிணாலே நெஞ்சு பதபதைக்கிறது.  நாம் இப்போது புரிந்து செயல்படவில்லை என்றால், ஒவ்வொரு நாளும் பல ஆயிரம் இறப்புக்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. ஏன் ஒவ்வொரு நாளும் இலட்சக்கணக்கில் உயிர்கள் பலியாகலாம்.  இப்படிப்பட்ட ஒரு அபாயகரமான சூழ்நிலையிலிருந்து நம்மையும் நம் நாட்டையும் காப்பாற்ற வேண்டும் என்றால் நாம் வருகின்ற 31ஆம் தேதி வரை நம்மை நாமே தனிமை படுத்திக்கொள்ள வேண்டியது காலத்தின் கட்டாயமாகும்.  இல்லை என்ற பட்சத்தில் சீன அரசு செய்தது போல கரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர் வாழும் வீட்டை மொத்தமாக ஸீலிட்டுவிட்டு அதில் வாழும் அனைவரும் இறந்த பிறகு அந்த வீடுகளுக்கு தீயிட்டு கொளுத்த வேண்டியதுதான்.  வேறு வழியே இல்லை.

உலகில் தோன்றிய “ஒவ்வொரு ஆன்மாவும் மரணத்தை சுவைத்தே தீரும்” என்பது குர்ஆன் வசனமாகும்.  மேலும் “அல்லாஹ் நோயையும் அதற்குரிய மருந்தையும் உருவாக்கியுள்ளான். ஒவ்வொரு நோய்க்கும் மருந்துண்டு. எனவே நீங்கள் மருத்துவம் செய்யுங்கள்” என்று நபி ஸல்லல்லாஹு அலைவஸல்லம் அவர்கள் கூறினார்கள்.  யார் வெறுத்த போதும், விரும்பிய போதும் அல்லாஹ் வகுத்து வைத்திருக்கும் காலக்கெடு வந்துவிடுமாயின் அது தனி மனிதனாயினும் சமுதாயமானாலும் ஒரு வினாடி நேரம் கூட முந்தாமலும், பிந்தாமலும் மரணத்தை சந்திப்பார்கள்.  இவை ஒவ்வொரு முஸ்லிமுடைய நம்பிக்கையாகும்.  எனவே இந்த கரோனா வைரஸால் நம்மை ஒன்றும் செய்துவிட முடியாது.  நிச்சயமாக அல்லாஹ் நிர்ணயித்தது வந்தடைந்தே தீரும் என்பதில் எந்த சந்தேகமும் நமக்கு வேண்டாம்.  என்றாலும் நோய்க்கு நிவாரணம் செய்துகொள்வது என்பது எம்பெருமானார் நபிகள் நாயகம் ஸல்லாஹு அலைவஸல்லம் காட்டித்தந்த வழியாகும்.

இப்போது நமக்கு ஏற்பட்டுள்ள பிணி என்பது கரோனா வைரஸால் ஏற்படும் வியாதி.  இதற்கு தீர்வு என்பது சில பல நாட்கள் தனித்திருப்பது.  தனித்திருப்பது என்றால் முற்றிலுமாக தனித்திருப்பது.  அதாவது பொது இடங்களிலிருந்து தங்களைத்தானே விலக்கிக்கொண்டு தனித்திருப்பது.  இதில் நாம் இறை இல்லத்திற்கு சென்று இறைவனை வணங்குவதிலிருந்து விலகியிருப்பதும் சேரும்.  இந்த நோய் பரவாமல் இருக்க சிலபல நாட்கள் இறை இல்லங்களை மூடிவைப்பதில் தவறில்லை என்பதும் அடங்கும்.  இதை கூறும்போது எனக்கு ஒரு குர்ஆன் வசனமும் ஒரு ஹதீஸும் ஞாபகத்துக்கு வருகின்றது.

இன்னும், அல்லாஹ்வுடைய மஸ்ஜிதுகளில் அல்லாஹ்வின் பெயரைச் சொல்லித் துதிப்பதைத் தடுத்து, இவற்றைப் பாழாக்க முயல்பவனை விட, பெரிய கொடுமைக்காரன் யார் இருக்க முடியும்? இத்தகையோர் அச்சமுடனன்றி பள்ளிவாயில்களில் நுழைவதற்கு தகுதியே இல்லாதவர்கள், இவர்களுக்கு இவ்(வுலக) வாழ்வில் இழிவுதான்; மேலும், மறுமையில் இவர்களுக்குக் கடுமையான வேதனையும் உண்டு. 2:114

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறுகிறார்கள்விறகுக் கட்டுகளைத் திரட்டும்படி எனது இளைஞர்களுக்கு உத்தரவிட்டு எவ்விதக் காரணமும் இல்லாமல் வீடுகளில் தொழுகின்ற கூட்டத்தினரிடம் சென்று அவர்களுடைய வீடுகளைக் கொளுத்தி விட நான் எண்ணியதுண்டுஅறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி)

இவற்றை பார்க்கும்போது நாம் நிச்சயமாக இறை இல்லத்தில் தொழுவதை தவிர வேறு புகலிடம் நமக்கு கிடையாது என்று அறிய முடிகிறது.  ஆனால் அடுத்த ஒரு இறை வசனம்

தாமாகச் செத்தவை, இரத்தம், பன்றியின் மாமிசம், மற்றும் அல்லாஹ் அல்லாதவர்களுக்காக அறுக்கப்பட்டவை ஆகியவற்றையே அவன் உங்களுக்கு ஹராமாக்கி (விலக்கி) உள்ளான். யார் வலியச் செல்லாமலும் வரம்பு மீறாமலும் நிர்பந்திக்கப்படுகிறாரோ அவர் மீது எந்தக் குற்றமுமில்லை. நிச்சயமாக அல்லாஹ் மன்னிப்பவன். கருணையுடையவன். அல்குர்ஆன் 2:173

என்று விளக்குகிறது.  யார் வலியச்செல்லாமலும் வரம்பு மீறாமலும் நிர்பந்திக்க படுகிறாரோ அவர் செய்வதில் எந்த குற்றமுமில்லை.  நிச்சயமாக அல்லாஹ் மன்னிப்பவன் கருணையுடையவன்.  ஆகவே நாம் சில நாட்களுக்கு மஸ்ஜித் செல்லாமல் வீட்டிலேயே தொழுதுகொள்வோம்.

அதாவது மத்திய, மாநில அரசுகள் தமிழகத்தில் மார்ச் 24-ம் தேதி முதல் மார்ச் 31-ஆம் தேதி வரை 144 ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ளன.  இது ஐந்து நபர்களுக்கு மேல் கூடுவது தடை செய்கிறது.  இந்த நிர்பந்தமான சூழ்நிலையின் அடிப்படையில் தமிழகத்தில் உள்ள அனைத்து மசூதிகளிலும் கீழ்காணும் முறையை பின்பற்ற முயற்சிக்கலாமே.

24-3-2020 முதல் 31-3-2020 வரை மசூதிகளில் இமாம், முஅத்தின், ஊழியர்கள் அங்கு இருப்பவர்கள் தொழுது கொள்வது.  மற்ற மஹல்லா மக்கள் வீடுகளில் தொழுது கொள்வது.  இதில் ஜும்மா தொழுகையும் அடங்கும்.  அல்லாஹ் நம் எண்ணங்களின் அடிப்படையில் கூலி தரக்கூடியவன்.  பள்ளிவாசல்களோடு நம் உள்ளங்கள் பிண்ணிப் பிணைந்து கிடக்க கண்ணீரோடு நாம் வீட்டில் தொழும் தொழுகைக்கு மேலான கூலியை தர அல்லாஹ் போதுமானவன்.

இப்படி நாம் அல்லாஹ்வின் மீது நம்பிக்கை கொண்டு நமது அமல்களை தங்குதடையின்றி தவறாமல் செய்யும் பட்சத்தில் அல்லாஹ்வினால் இறக்கப்பட்ட இந்த பிணியிலிருந்து நாம் நம்மை தற்காத்துக்கொள்ளலாமே