முதலில் ஒரு விஷயத்தை சொல்லிவிடுகின்றேன். 120 கோடி மக்கள் தொகை கொண்ட ஒரு ஜனநாயக நாட்டில், அதிலும் பாதிக்கு மேல் கல்வியறிவு இல்லாத நாட்டில், இப்படி ஒரு அதிரடியான/துணிச்சலான முடிவு எடுத்த பாரதப்பிரதமர் அவர்களையும் அவர் சார்ந்த கட்சிக்கும் எனது நன்றியை கூறிக்கொள்கிறேன். சுதந்திர இந்தியாவின் வரலாற்றில் இப்படி ஒரு துணிச்சலான முடிவு எடுத்ததை நாம் மனதார பாராட்டியே ஆகவேண்டும். இந்த முடிவால் நன்மை/இலாபம்/வெற்றி ஏற்படுமானால் அது நாட்டுக்கு நல்லதே! அதே சமயம் இந்த முடிவு தோல்வியை தழுவினால் அதனால் முதலில் பாதிக்கப்படும் நபர் நிச்சயமாக பாரத பிரதமர் திரு மோடியே! எனவேதான் நான் இந்த முடிவை... துணிச்சலை...அதிரடியை பாராட்டுகிறேன்."
இதை எழுதும்போது ஒரு சம்பவம் என் ஞாபகத்தில் வருகிறது. சென்னை ரிசர்வ் வங்கி அருகில் ஒரு பாலம் கட்டவேண்டும் என்று அன்றைய முதல்வர் காமராஜுக்கு ஒரு எண்ணம் தோன்றியது. சம்பத்தப்பட்ட அதிகாரிகளை அழைத்து அதற்காக அலோசனை செய்யப்பட்டது. அனால் வந்த அனைத்து அதிகாரிகளும் அது முடியாத காரியம் என்று பலப்பல காரணங்களை அடுக்கியதாகவும் அதை கேட்ட காமராஜ் "முடியாது" என்பது தனக்கும் தெரியும். அதை சொல்ல இந்த கூட்டம் கூட்டப்படவில்லை. இங்கு ஏற்படும் போக்குவரத்து நெரிசலை குறைக்க வழி கண்டுபிடிப்பதற்கே இக்கூட்டம். அதற்கான ஆலோசனையை கூறுங்கள் என்று கடிந்துகொண்டாராம். அக்கூட்டத்தில் பிறந்ததே, இன்றைக்கும் போக்குவரத்துக்கு பயன்பட்டு கொண்டிருக்கும் சுரங்கப்பாதை! அதேபோலத்தான் ரகுராம் ராஜன் முடியாது என்றதால் அவரை மாற்றிவிட்டு உர்ஜீத் பட்டேல்-ன் ஆலோசனையை பிரதமர் ஏற்றுக்கொண்டு இந்த காரியத்தை துவக்கியுள்ளார் என்று நினைக்கிறேன்.
வாழ்த்துகள் திரு மோடிஜீ!
இத்திட்டத்திற்கு பின்னால் இருக்கும் லாஜிக்:
கள்ளப்பணம்/கருப்புப்பணம்: அரசாங்கம் அச்சடித்தால் அது நல்ல பணம். அதைத்தவிர மற்றவர் யார் அச்சடித்தாலும் அது கள்ளப்பணம்! தன்வசம் வைத்திருக்கும் பணத்திற்கு அரசாங்கத்திடம் கணக்கு காட்டிவிட்டு அதற்கான வரியை கட்டிவிட்டால் அது நல்ல பணம். அதுவன்றி தன் வருமானத்தை மறைத்து/பதுக்கி வைத்துக்கொண்டால் அது கருப்புப்பணம்!
நம் நாட்டிற்கு கள்ளப்பணம் பாகிஸ்தானிலிருந்து வருகிறது... பங்களா தேசத்திலிருந்து வருகிறது என்று நம் அரசாங்கங்களே கூறுகின்றன. அதேபோல கருப்பு பணம் என்பது பெரும்பெரும் பணக்கார முதலைகள்வசம் இருப்பதாகவும் அரசாங்கமே கூறுகின்றது.
கள்ள நோட்டு அச்சடிப்பவர்கள் மற்றும் கருப்பு பணம் பதுக்குபவர்கள் 5,10,50,100 ரூபாய் நோட்டுகளை பய்ன்படுத்துவதைவிட சுலபமானது 500,1000 ரூபாய் தாள்களை பயன்படுத்துவது. எனவே ஐநூறு ஆயிரம் ரூபாய் தாள்களை மதிப்பிழக்க செய்தால் பதுக்கப்பட்ட பணத்தில் அதிகபட்சம் புழக்கத்தில் வந்து வெள்ளையாகிவிடும். அதேபோல தீவிரவாதத்திற்கு ஊக்கமளிக்கும், வெளி நாடுகளிலிருந்து கடத்தி வரும் பணத்தாள்களின் வரத்து குறைந்துவிடும். அதனால் எல்லையோரங்களில் நடக்கும் தேசத்துரோக செயல்கள் தன்னால் முடிவுக்கு வந்துவிடும்.
எனவே இந்த காரணங்களுக்காகத்தான் நம் பாரத பிரதமர் திரு மோடி அவர்கள் இந்த முடிவை எடுக்க துணிந்துள்ளார். இந்த துணிச்சலுக்கு மீண்டும் ஒருமுறை அவருக்கு பாராட்டுகள். ஆடிட்டர் திரு குருமூர்த்தி அவர்களின் பேட்டியை
இங்கே சொடுக்கி பாருங்கள்.
09-11-2016 00:00 மணியிலிருந்து ஐநூறு ஆயிரம் ரூபாய் தாள்கள் செல்லுபடியாகாது என்று அறிவிக்கப்பட்ட பின் இந்திய பிரஜைகளுக்கு கிட்டத்தட்ட 50 நாட்கள் அவகாசம் தந்து, தங்களிடம் உள்ள 500, 1000 ரூபாய் தாள்களை வங்கியில் சென்று மாற்றிக்கொள்ளலாம் என்று பிரகடணம் செய்யப்படுகிறது. அதோடுமட்டுமல்லாமல் 9.11.16 & 10.11.16 ஆகிய இரு நாட்களுக்கு வங்கிகள் செயல்படாது என்றும் அறிவிப்பு வெளியாகிறது. ஏனென்றால் வங்கிகளுக்கு புதிய ரூபய் நோட்டுகளை கொண்டு சேர்க்க வேண்டியுள்ளதால் இந்த விடுமுறை தரப்பட்டது.
அதற்குள்ளாகவே நமது தகவல் தொடர்பு சாதனங்கள் (தமிழில் கூறுவதானால் "மீடியாக்கள்") தங்கள் மனம் போன போக்கில் கிசுகிசுக்களை பரப்ப ஆரம்பித்துவிட்டனர். நடுநிசியிலிருந்து பணம் செல்லாது என்று கூறிவிட்டு, இரண்டு நாட்கள் வங்கிகளை மூடிவிட்டனர். இதனால் நாடே ஸ்தம்பித்துவிடும். நாளை காலை முதல் பால்வாங்க முடியாது... மருந்து மாத்திரை வாங்க முடியாது.... பெட்ரோல் ஊற்ற முடியாது... இப்படி பலப்பல முடியாதுகளை அவரவர் இஷ்டம்போல பரப்பிவிட்டனர்.
இதோ கிட்டத்தட்ட 13 நாட்கள் (22/11/2016) இன்றோடு ஆகிவிட்டன. இங்கொன்ரும் அங்கொன்றுமாக சிலபல சலசலப்புகள் ஏற்பட்டாலும் பொதுவாக மக்களின் ஆதரவு இந்த கள்ள/கருப்பு பணத்தை ஒழிப்பதற்கு கிடைத்துள்ளது!
இந்த மக்கள் ஆதரவு மேலும் பெருக வேண்டும் என்றால், இனி அரசின் நடைமுறைகள் மேலும் வெளிப்படைத்தன்மையுடன் இருக்க வேண்டும் என்பதே என் கருத்து. ஒவ்வொரு குடிமகனும் தான் கஷ்டப்பட்டு சம்பாதித்த சிலபல தாள்களை சங்கடங்கள் ஏற்பட்டாலும் அதை பொருத்துக்கொண்டு நம் நாடு இந்த திருட்டு பேர்வழிகளிடமிருந்து தப்பித்து செழிப்புமிக்க நாடாக வேண்டும் என்று ஆசைப்படுவது கண்கூடாக தெரிகிறது.
அப்படி இருக்கும்பட்சத்தில் நம் அரசின் பொருப்பு இப்போது மேலும் கூடிவிடுகிறது. தங்களிடம் இருக்கும் சிலபல தாள்களை மாற்ற வரும் நபர்களுக்கு வங்கிகள் சங்கடம் ஏற்படுத்தாமல் சேவை செய்ய வேண்டும். அதே போல கள்ள/கருப்பு பணம் வைத்திருப்போர்களை கண்டறிந்து, குறைந்தது ஒரு பத்து நூறு பேரையாவது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். இதில் அரசியல் குறிக்கீடு இங்கித்தும் இருக்கக்கூடாது. ஏற்கனவே இப்படிப்பட்ட திருடர்களின் பெயர்களை நீதிமன்றங்களிடம் இருக்கின்றன. இரகசியமாக சீலிடப்பட்ட அந்த பெயர்களை பிரகடணப்படுத்தி,
வரி ஏய்த்தவர்கள்
இலட்சம் கோடிகளை வங்கியில் கடன் வாங்கி பதுக்கிக்கொண்டவர்கள்
ஷேர் மார்க்கெட்டில் மொள்ளமாரித்தனம் செய்தவர்கள்
ரியல் எஸ்டேட் என்ற பெயரில் ஏழை எளியோர் வயிற்றிலடித்தவர்கள்
இப்படி பலரை பிடித்து தக்க நடவடிக்கைகளை வரும் 30-12-2016-க்குள் எடுக்கும்பட்சத்தில், இப்போது பொருமையோடு இருக்கும் பொதுமக்கள் பிரதமரின் நடவடிக்கைகளுக்கு பேராதரவு தருவார்கள் என்பதில் எள்முனையளவும் சந்தேகமில்லை. இல்லையென்றால், இந்த பொருமை எல்லை மீறும்போது "சாது மிரண்டால் காடு கொள்ளாது" என்ற பழமொழி உண்மையாகும்.
கடந்த சில நாட்களாக நம் நாட்டில் நடக்கும் விஷயங்களை கவனித்தால் நம்பிக்கை ஏற்படுவதைவிட அவநம்பிக்கையே அதிகமாகிறது. 500,1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவிக்கப்பட்ட 8-11-16 அன்று இரவே கட்டுகட்டாக பணத்தை எடுத்துச்சென்று தங்கமாக மாற்றிக்கொண்டனர் பலர். அதாவது கருப்புப்பணம் மஞ்சளாக மாற்றப்பட்டுவிட்டது. அதுமட்டுமல்ல, இங்கு மனிதனின் ஒரு குரூர புத்தியும் வெளிச்சத்தில் வருகிறது. அதாவது என்னிடமுள்ள கருப்பு பணத்தை எதையாவது வாங்கி அடுத்தவன் தலையில் கட்டிவிடுவது. வாங்கியவன் எக்கேடும் கெட்டு போகட்டும் என்ற மனநிலை. இதை புறிந்து கொண்ட நகை வியாபாரி, தங்கத்தின் விலையை இர்வோடு இர்வாக ஏற்றிவிட்டான். மேலும் நான் தந்த பணத்திற்கும் மதிப்பை குறைத்தே வரவு வைத்தான். அதாவது ஒரே கல்லில் இரண்டு மாங்காய்கள்! இங்கே நகை வாங்கியவன் மற்றும் விற்றவன் இருவரிடமும் நான் கண்டது
"எரிகின்ற வீட்டில் பிடுங்கியவரை இலாபம்" எனும் மனப்பாண்மையை!
அடுத்து நடந்தது...
வங்கியில் வாராக்கடன் என்று சிலபல ஆயிரம் கோடிகளை தள்ளுபடி செய்தது. இதனால் அரசாங்கத்தின் மீது மக்கள் நம்பிக்கை இழந்தது. விவசாயி டிராக்டர் வாங்கி தவணை செலுத்தவில்லையென்றால் போலீஸை வைத்து அடித்து உதைத்து டிராக்டரை பறிமுதல் செய்ய தெரிந்த வங்கிகளுக்கு...
மாணவன் வாங்கிய கவிக்கடனை ஏஜெண்ட் என்ற பெயரில் அடியாட்களை அனுப்பி மிரட்டி தற்கொலை செய்ய தூண்டத்தெரிந்த வங்கிகளுக்கு...
இப்படி "வாராக்கடன்" என்று தள்ளுபடி செய்ய என்ன தார்மீக உரிமையுள்ளது?
அடுத்து நடந்தது...
ஆறுமாதமாக இரகசியமாக நடந்த இந்த விஷயம் என்று கூறப்பட்டாலும் பல அரசியல் புள்ளிகளுக்கும், பெரிய வியாபாரிகளுக்கும் ஏற்கனவே இந்த விஷயம் தெரிந்து 8-11-16-க்கு முன்பே புதிய பணத்தை கட்டுகட்டாக பெற்றதற்கான செய்திகள் வெளிவந்துள்ளன. எப்படி கிடைத்தன அவர்களுக்கு இந்த புது நோட்டு கட்டுகள்? அரசின் கவனக்குறைவா அல்லது அரசே உடந்தையா? ஆதாரச் செய்திகள் வெளிவந்த பின்னும் இவர்களின் மீது இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாதது, இந்த கள்ள/கருப்பு பண ஒழிப்புத்திட்டம் வெற்றியடையாதோ என்ற சந்தேகம் ஏற்பட ஆரம்பித்துள்ளது.
அடுத்து நடந்தது...
பணத்தைக் கொடுத்து பணம் வாங்கியது. 10% என்று ஒருத்தன் கூற 20% அல்லது 25% என்று மற்றொருவன் கூற, அட ஏமாந்திட்டேயே 40% வரை போய்க்கொண்டிருக்கிறது என்று எதிர்பட்டவன் கடுப்பேத்திச்செல்ல, தலை சுற்றுகிறது. இதில் வெட்கக்கேடான விஷயம் என்னவென்றால் இப்படி பணத்துக்கு பணம் மாற்றியவர்களில் பிடிபட்டவர்கள் வங்கி மேலாளர்களும் ஊழியர்களும்தான். அடப்பாவிகளா!
பாரதி அன்றே கூற்ச்சென்றானே...
"படித்தவன் தவறு செய்தால் அய்யோ என்று போவான்"
அய்யய்யோ!!!
அடுத்து நடப்பது...
கள்ள/கருப்பு பணம் ஒழிப்பு திட்டத்தை ஆதரிப்பவர்கள் தேச பக்தி உடையவர்கள், மற்றவர்கள் தேசத்துரோகிகள் என்ற சாயம் பூசுகின்றனர். அடப்பாவிகளா! இன்றைக்கு ஒரு நாள் கூலி என்று கொத்தனார், கார்பெண்டர், எலக்ட்ரீஷியன், பெயிண்டர், சமையல் மாஸ்டர் வாங்குவதே 500-800 வரை இருக்கின்றது. பின்னர் தான் சம்பாதித்த காசு செல்லாது என்று இர்வோடு இரவாக கூறப்படும். அதை எதிர்ப்பவன் தேசத்துரோகியா? ஞாயவாங்களே... சற்று சிந்தித்து உங்களின் தீர்ப்பை கூறுங்கள்.
ஒரு உதாரணம் பாருங்கள்:
ஒரு பெண்ணுக்கு திருமணம். அவருக்கு 10 பவுன் நகை போட்டாலே
இரண்டரை இலட்சம் ஆகும். பின்னர் மண்டப செலவு, சாப்பாடு,
நகை நட்டு, துணிமணிகள், சீர் செனத்தி, இத்யாதி இத்யாதி. ஆனால்
திருமண செலவிற்கு அரசு நிர்ணயித்த செலவு வெறும் 2.5 இலட்சம்.
இதில் திருமணம் முடிக்க முடியுமா ஞாயவாங்களே?!? இதை எதிர்த்தால்
தேசத்துரோகியா?
வாழ வழி காட்டுங்கள் என்று கேட்டால் தேசத்துக்காக எல்லையோரத்தில் சாகும் ராணுவ வீரர்களை உதாரணத்திற்கு கூறுகிறீர்கள். இது அடுக்குமா?
கள்ளப்பணம் வெளிநாட்டில் அச்சடிக்கப்பட்டு இந்தியாவிற்குள் அனுப்பப் படுவதால், இனி இந்த பணத்திற்கு மதிப்பில்லை என்று கூறி இந்திய அரசு புது பணத்தை புழக்கத்தில் விட்டுள்ளது. இனி ஏன் பாகிஸ்தானோ பங்களாதேசமோ இந்த புதுப்பணத்தை அச்சடிக்காது? இதோ சீனா நாம் வங்கிகளில் மாற்றுவதற்கு முன்பே, நம் கைக்கு இந்த 2000 ரூபாய் நோட்டு கிடைப்பதற்கு முன்பே பர்ஸ்ஸில் அச்சடித்து வெளியிட்டுவிட்டது. இதைபோல அடுத்த சிலபல நாட்களில் வெளிநாட்டினர் இந்த பணத்தையும் அச்சடித்து வெளியிட்டுவிட்டால் பின்னர் மீண்டும் இதே மாதிரி புதிய நோட்டுகளும் செல்லாது... புத்தம்புதிய நோட்டுகள் வெளிவரும் என்று மீண்டும் மீண்டும் அறிவித்துக்கொண்டே இருக்குமா நம் பாரத அரசு?
இந்த நாடுகள்தான் கள்ள நோட்டுகள் அச்சடிக்கின்றன என்ற தகவல் நம்பத்தகுந்தது என்றால் இந்த நாடுகளுக்கு எதிராக என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது நம் அரசால்? இன்னும் பாகிஸ்தானிலிருந்து கப்பல் கப்பலாக சிமெண்ட்-ஐ இறக்குமதி செய்கிறோமே ஏன்? அதேபோல பங்களாதேசத்திற்கு நாம் மின்சாரம் அனுப்பிக்கொண்டிருக்கிறோமே ஏன்? ஏன்? இந்த நாடுகளின் மீது பொருளாதார தடை விதிப்பதை விட்டுவிட்டு இது என்ன சின்னப்புள்ளத்தனமான நடவடிக்கைகள்?
கருப்புப்பணம் என்பது பதுக்கப்பட்ட பணம் மட்டும்தானா? மேலோட்டமாக பார்த்தால் பண நோட்டுகள் மட்டுமே. ஆனால் தங்கமாகவும் வெள்ளியாகவும் மாறியுள்ளதே அவை எந்த கணக்கில் சேரும்? நிலம் அல்லது வீடு வாங்கும் போது மார்க்கெட் மதிப்பு, கவர்ன்மெண்ட் மதிப்பு என்று சொல்லித்தானே நானும் நீங்களும் பத்திரம் பதிவு செய்கின்றோம். அதுவும் கருப்பு பணம்தானே!
நாம் கடைக்கு சென்று ஒரு பொருளை வாங்கும் போது நம்மில் எத்தனை பேர் அதற்கான பில் (Bill) கேட்டு வாங்குகின்றோம்? அப்படியே நாம் பில் கேட்டாலும் கடைக்காரர் டாக்ஸ் (Tax) 5 முதல் 14 சதம் வரை அதிகமாக வரும் என்று கூறினால், நம்மில் எத்தனை பேர் டாக்ஸ் கொடுத்து பில் வாங்க தயாராக இருக்கின்றோம்? இதுவும் கருப்பு பணம் உருவாக காரணமே!
ஒரு சின்ன உதாரணம் பார்ப்போம்:
இன்றைக்கு வடமாநிலத்தவர் சிலர் Flask எடுத்துக்கொண்டு தெருத்தெருவாக சுற்றி டீ விற்பதை நாம் அனைவரும் பார்க்கின்றோம். அவர்களில் ஒருவரை நான் விசாரித்ததில் கிடைத்த தகவல். ஒருத்தர் ஒரு நாளில் ரூ.1300-1500 வரை டீ விற்கின்றார். இவரை போல 10-15 பேர் ஒரு வீட்டில் தங்கவைக்கப்பட்டு Flask-ல் டீ போட்டு அனுப்புகிறார் முதலாளி. சராசரியாக ரூ1000X10பேர்X30 நாள் என்று கணக்கிட்டாலும் மாதம் ஒன்றுக்கு அந்த முதலாளி 3 இலட்சம் ரூபாய்க்கு வியாபாரம் செய்கின்றார். குறைந்தது 10% இலாபம் என்றாலும் ஆண்டுக்கு 3.60 இலட்சம்! வருமானவரி செலுத்துகிறாரா இவர்?
இப்படி இந்தியாவில் Unorganized Sector-ல் பலர் பணம் சம்பாதிக்கின்றனர். உதாரணத்திற்கு மருத்துவர்கள்...இவர்களில் எத்தனை பேர் சரியான வருமானத்தை காட்டுகின்றனர்? பள்ளி/கல்லூரிகளில் சேர எவ்வளவு டொனேஷன் தருகின்றோம்? நம் வேலை வேகமாக நடக்க எவ்வளவு இலஞ்சம் தர தயாராக இருக்கின்றோம் நாம்? இப்படி தவறுகளை நம்மிடமே வைத்துக்கொண்டு கருப்பு பணத்தை ஒழிக்க பிரதமர் என்னத்தான் அதிரடி வைத்தியம் செய்தாலும் நம்மில் ஒவ்வொருவரும் திருந்தாதவரை அரசின் எந்த நடவடிக்கையும் எந்த பயனும் தராது!
கடைசியாக, திட்டம் அறிவிக்கப்பட்டு 13 நாட்கள் ஆனபின்னரும், நாட்டின் நான்கு மெட்ரோபாலிடன் நகரங்களில் ஒன்றான சென்னைக்கு இன்னும் 500 ரூபாய் நோட்டுகள் வந்து சேரவில்லை! மும்பைக்கு வந்த 500 ரூபாய் நோட்டுகளில் பிரிண்டிங் சரியாக இல்லை. பல ATM-களில் பணம் இல்லை. கூட்டுறவு வங்கிகள் ரிசர்வ் வங்கியில் கட்டுப்பாட்டில் வராது என்பதால் அவர்களுக்கு பணம் பட்டுவாடா செய்யப்படாததால் கூட்டுறவு வங்கிகள் முடங்கியுள்ளன!
பிரச்சனைக்கு தீர்வு கூறுங்கள் என்று பிரதமரை கேட்டால் அவர் பொதுவெளியில் அழுகிறார். நான் உங்களுக்காக உயிர் கொடுக்கவும் தயார் என்று வசனம் பேசி தன்னுடைய 93 வயது தாயை ATM வரிசையில் நிற்க வைத்து Stunt அடிக்கிறார்.
பிரதமர் மோடி அவர்களே, மக்கள் இதையெல்லாம் கேட்கவில்லை. பொது மக்கள் இன்றும் கருப்பு பணத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்க முழு ஒத்துழைப்பு கொடுத்துக்கொண்டிருக்கின்றனர்.
திருமணத்திற்கு 2.5 இலட்சம் மட்டுமே ரொக்கமாக வங்கியிலிருந்து எடுக்கலாம் என்று அரசு அறிவித்தபின் 600-700 கோடிகளில் ஒரு திருமணம் நடந்தது! அரசு என்ன நடவடிக்கை எடுத்தது?
இந்திய மெடிகல் கவுன்சிலின் முன்னால் தலைவர் கேதன் தேசாய் வீட்டில் வருமானவரித்துறையினர் பல ஆயிரம் கோடி ரொக்கமும் 1500 கிலோ (கிராம் இல்லைங்க... கிலோ... 1500 கிலோ) தங்கமும் பறிமுதல் செய்யப்பட்டதே, அவர் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது?
தமிழகத்தில் மூன்று கண்டெய்னர்களில் பணம் பறிமுதல் செய்யப்பட்டதே! அது என்னவானது?
பொதுவாக இந்தியாவில் 25-ஆம் தேதியிலிருந்து 5-ஆம் தேதிக்குள் அனேகமாக சம்பளம் போடப்பட்டுவிடும். அப்போதே நம்மில் பலரும் பால் அட்டை, காஸ் சிலிண்டர், மாத மளிகை சாமான், வீட்டிற்கு தேவையான மருந்துகள் என்று அனைத்தையும் வாங்கிவிடுவார்கள் அல்லது கடந்த மாதம் வாங்கிய பொருட்களுக்கு பணம் கொடுத்துவிட்டு இந்த மாதத்திற்கான பொருட்களை வாங்கிவிடுவார்கள். எனவே இதுவரை பெரிய அளவில் எந்த விபரீதமும் எந்த வீட்டிலும் ஏற்படவில்லை என்பதை நாம் கவனத்தில் கொள்ளவேண்டும். வரும் ஒன்றாம் தேதி, நம் கையில் பணம் புரளவில்லை என்றால், நிச்சயமாக ஒரு பிரளயம் நம் வீட்டில் வெடிக்கும். அது அடுத்த சில நாட்களுக்குள் வெளியில் வெடிக்க ஆரம்பிக்கும். எனவே அரசின் திட்டம் அதற்குள் சரியாக வரையரை செய்யப்பட்டுவிட்டால் எடுத்த காரியம் சுபமாக முடியும்.
இப்படி பல்வேறு விஷயங்களில் அரசால் எடுக்கப்படும் வெளிப்படையான நடவடிக்கைகளை பொருத்தே மக்களின் ஆதரவா அல்லது எதிர்ப்பா என்பதை காலம்தான் பதில் சொல்லும்.