Thursday, 10 April 2014

பிஜேபியால் ஒரு நிலையான ஆட்சியை தரமுடியுமா?

இப்போது இந்தியாவில் நடைபெற்றுவருகின்றன நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்று இந்தியாவை அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு ஆளப்போவது யார் என்ற மிகப்பெரிய கேள்வி நம்முன் உள்ளது. பொதுமக்கள் மிகத்தெளிவாக அதை தங்களின் வாக்குகள் மூலம் தீர்ப்பு கூறிவிடுவார்கள்.  ஆனால் அதற்குமுன் நம்மில் பலர், முக்கியமாக பதிவர்கள், ஃபேஸ்புக் மற்றும் டிவிட்டர்களில் விளையாடுபவர்கள்/நேரம் கடத்துபவர்கள் ஒரு மாயையை உருவாக்க எண்ணி, பிஜேபியால் மட்டுமே ஒரு நிலையான ஆட்சியை கொடுக்க முடியும் என்று ஏக்காளமிடுகின்றனர். இதற்காக ஒரு நிறுவனத்தை கூலிக்கமர்த்தியும் கூப்பாடு. போடுகிறார்கள்.

அவர்கள் கூறும் காரணங்கள்:
1. துணிச்சல் மிக்க தலமை
2. கட்டுக்கோப்பான கட்சி பிஜேபி
3. காங்கிரஸ் ஒரு ஊழல் கட்சி
4. மோடி அலை

ஆறு மாதங்கள் முன்பே பிரதம வேட்பாளர் என்று பகிரங்கமாக அறிவிக்கப்பட்டவர் குஜராத் மாநில முதல்வர் மோடி.  எதிர்க்கட்சிக்கு "கேப்டனே " இல்லை என்று துணிச்சலாக கூறும் இவர்கள் ஏன் மோடியை முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய சொல்லவில்லை?  நான்கு முறை முதல்வராக இருந்துவிட்டவர், அப்பதவியை அடுத்தவரிடம் ஒப்படைத்துவிட்டு, துணிந்து பிரதமராக களமிறங்க வேண்டியதுதானே?
துணிச்சல் மிக்கவர் தன் திருமணத்தையே மறைத்ததேன்?
எதற்கும் துணிந்தவர்கள் வரலாற்று பக்கங்களில் ஹிட்லர் என்றும் சதாம் என்றும் கிம் ஜாங் உன் என்றும் அறியப்படுகிறார்கள்.  நமக்கு வேகம் மட்டும் போதாது, விவேகமும் தேவை.

அடுத்து கட்டுக்கோப்பான கட்சியை வழி நடத்துபவர்கள் யார் என்பதை தேர்தல் அன்று வெளியிடப்பட்ட அக்கட்சியின் தேர்தல் அறிக்கையில் அச்சிடப்பட்ட ஆர் எஸ் எஸ் தலைவரின் படத்திலிருந்து புரிந்து கொள்ளலாம்.  அதுமட்டுமின்றி கட்டுக்கோப்பான கட்சியில் உபி முன்னாள் முதல்வர் கல்யாண் சிங் நீக்கப்பட்டு பின்னர் சேர்த்துக்கொள்ளப்பட்டது, டெல்லி முன்னாள் முதல்வர் மதன்லால் குராணா நீக்கப்பட்டு பின்னர். சேர்த்துக்கொள்ளப்பட்டது, கர்னாடக முன்னாள் முதல்வர் எடியூரப்பா நீக்கப்பட்டு பின்னர் சேர்த்துக்கொள்ளப்பட்டது, ஜஸ்வந்த் சிங் நீக்கப்பட்டு பின்னர் சேர்ந்து இப்போது மீண்டும் நீக்கப்பட்டது என்று பட்டியல் நீண்டு கொண்டே போகிறது.  அதேபோல மோடியை பிரதம வேட்பாளராக அறிவித்ததுடன் மூத்த தலைவர் அத்வானி நடந்துகொண்டவிதமும், கட்சியிலிருந்து தன்னை முழுவதுமாக விடுவித்து கொண்ட விதமும் பின்னர் மீண்டும் அடித்த அன்தர் பல்டியையும் யாரும் மறந்துவிடவில்லை. அதுமட்டுமின்றி காந்திநகர் தொகுதியை தக்கவைத்துக்கொள்ள அவர் செய்த பிரயத்தனமும் இக்கட்சி மற்ற எந்த கட்சியைவிடவும் சற்றும் குறைந்ததல்ல என்பதை மீண்டும் நிரூபித்தது.  கடைசியாக நீலகிரி தொகுதி வேட்பாளர் நடந்துகொண்ட விதமும் கட்சியின் கட்டுப்பாட்டை நன்றாக பறைசாற்றியது.  அதேபோல இக்கட்சி தமிழக - புதுவையில் ஏற்படுத்திய கூட்டணி என்பது ஒரு சந்தர்ப்பவாத கூட்டணியாகவே உள்ளது.   எட்டு தொகுதிகளை பெற்றுக்கொண்ட கட்சியின் ஒரு வேட்பாளர் ஓடிவிட்டார்.    இப்போது வெறும் ஏழு வேட்பாளர்கள் மட்டுமே களத்தில் உள்ளனர்.   அதேபோல் எட்டு தொகுதிகளை பெற்றுக்கொண்ட பமக ஒன்பது தொகுதிகளில் போட்டியிடுகின்றது.  புதுவையில் கூட்டணி கட்சிகளான என் ஆர் காங்கிரஸும் போட்டியிலுள்ளது பமகவும் தன் பங்குக்கு வேட்பாளரை நிறுத்தியுள்ளது.  தங்கள் வேட்பாளரையே கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்ள முடியாத இவர்கள், புதுவையில் கூட்டணியை கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்ளாத இவர்கள் மற்ற கட்சிகளைவிட எந்த வகையிலும் சளைத்தவர்களில்லை!

அடுத்து இவர்கள் பயன்படுத்தும் அஸ்திரம், காங்கிரஸ் ஒரு ஊழல் கட்சி என்பது.  பங்காரு லக்‌ஷ்மணனிலிருந்து நிதின் கட்காரிவரை கட்சித்தலைவர்கள் செய்யாத ஊழலா?
எடியூரப்பா செய்யாததா  ஊழல்?
அல்லது கார்கில் போரில் மரணமடைந்த வீரர்களின் சவப்பெட்டி தயாரிப்பில் செய்யாத ஊழலா?
கிட்டத்தட்ட ஆறு ஆண்டுகள் ஆண்ட இவர்கள் தங்களால் முடிந்தவரை செய்ததுதான் இந்த ஊழல்கள்.  பாவம் பெரியவர் வாஜ்பாய் "உங்களின் சங்காத்தமே தேவையில்லை" என்று ஒதுங்கியேவிட்டார்.
அப்படியிருக்கும்போது, இவர்களுக்கு மற்ற கட்சியை ஊழல் கட்சி என்று கூற எந்த அருகதையும் கிடையாது என்பதே என் வாதம்!

கடைசியாக மோடி அலை:
அப்படி ஒரு அலை இருந்திருக்குமேயானால், அத்வானியிடமிருந்து வலுக்கட்டாயமாக காந்தி நகரை பிடுங்க எத்தனித்தது ஏன்?
இப்போதும் இரண்டு தொகுதிகளில் போட்டியிடுவது ஏன்?
மோடி அலைமீது மோடிக்கே அவநம்பிக்கையா?
பிறகு ஏன், "தயவுசெய்து எங்களை 300 தொகுதிகளில் வெற்றி பெறச்செய்யுங்கள்" என்று கதறவேண்டும்?

இறுதியாக, தமிழகத்திற்கு அல்லது தமிழர்களுக்கு இவர்களால் என்ன செய்ய முடியும் என்று எதையாவது தங்களின் தேர்தல் அறிக்கையில் கூறியுள்ளார்களா?
மீனவர் பிரச்சனை
கச்சத்தீவு
சேது சமுத்திர திட்டம்
அணு உலை நிலைப்பாடு
காவிரி நீர் பங்கீடு
முல்லை பெரியாறு அணை
ராஜிவ் கொலையாளிகள் என்று கூறப்படும் மூவரின் விடுதலை
ஈழத்தமிழரின் அழிப்பு
இந்த மாதிரி ஏகப்பட்ட பிரச்சனைகளுக்கு ஏதேனும் துணிச்சலான தீர்வு கூறுகின்றதா பிஜேபி? அல்லது தேர்தல் முடிவுகள் அறிவிப்புக்குப்பின் தமிழகத்தில் இதே கூட்டணியை தொடர்வோம்.... அதிமுக அல்லது திமுகவின் ஆதரவை கோறமாட்டோம் என்று துணிச்சலுடன் உறுதியாக அறிவிக்கத்தான் முடியுமா?

கட்டக்கடசியாக, காமராஜ் கூறியது போல இவர்களும்
"ஒரே குட்டையில் ஊறிய மட்டைகளே"
மற்ற அரசியல் கட்சிக்கும் பிஜேபிக்கும் எந்தவொரு வித்தியாசமுமில்லை!!

No comments:

Post a Comment