Saturday, 1 August 2015

அப்படி என்ன செய்துவிட்டார் இந்த அப்துல் கலாம்?

ஒரு மனிதர் இவ்வுலகில் தோன்றினால், அவனைக்கொண்டு மற்றவர்களுக்கு ஏதேனும் பிரயோஜனம் இருக்க வேண்டும் என்பது எல்லோரும் எதிர்பார்ப்பது. அப்படிப்பார்த்தால் மறைந்த திரு அப்துல் கலாம் அவர்களால் யாருக்கு என்ன நன்மை பயத்துள்ளது இந்த உலகிற்கு?

ஒருவர் பிரபலமடைந்தால் அதைக்கொண்டு தனக்கும் தன்னை சார்ந்தவர்களுக்கும் முடிந்தவரை ஏதேனும் செய்து கொள்வது என்பது மனித இயல்பு.  பொதுவாக பிரபலமானவர்கள் தன் புகழ்ச்சியை பயன்படுத்தி ஒரு தொழிற்சாலையையோ அல்லது திரையரங்கையோ கட்டி ஊர் மக்களை சந்தோஷமடைய வைத்தது அந்தக்காலம்.

இந்தக்காலத்தில் தன்னுடைய புகழ்ச்சியை உயயோகப்படுத்தி ஊரில் கல்வி நிறுவனத்தையோ, மருத்துவமனையையோ அல்லது மேம்பாலங்களை கட்டியோ ஊரை முன்னேற்றுகிறார்கள்.  இப்படி எதையுமே செய்யாத திரு அப்துல் கலாம் அவர்களை இந்த உலகம் அவரின் மறைவின்போது, தானாகவே முன்வந்து, தன் வீட்டில் ஒரு துக்க நிகழ்ச்சி ஏற்பட்டதை போன்று வருந்தியுள்ளது என்றால் அதற்கான காரணம் என்ன?

தன் தாய்மொழியில் ஆரம்ப கல்வி பயின்று பார் போற்றும் அணு வஞ்ஞானியானதால் இந்த பெருமை கிடைத்திருக்"கலாமோ?"

இந்தியாவின் கடைக்கோடி கிராமத்தில் பிறந்து நாட்டின் முதல் குடிமகனாக உயர்ந்ததால் கிடைத்திருக்"கலாமோ?"

தனக்குப்பிடித்த ஆசிரியர் பணியை தன் கடைசி மூச்சுவரை செய்து மாணவர்களின் முன்னேற்றத்துக்கு வழிகாட்டியதால் கிடைத்திருக்"கலாமோ?"

தான் பதவியிலிருப்பதால் தனக்கு கிடைத்த பரிசுப் பொருளுக்கும் விலை கொடுத்து வாங்கி, அந்த காசோலை பணமாக மாற்றப்படவில்லை என்பதை அறிந்து, பரிசு கொடுத்தவருக்கு கடிதம் எழுதி, "பணம் பெற்றுக்கொள்ளுங்கள். இல்லையெனில் உங்களின் பொருளை திருப்பி அனுப்பிவிடுவேன்" என்று கூறிய கண்டிப்பும் எளிமையும் இருக்"கலாமோ?"

இப்படி எத்தனையோ இருக்கலாமோ? என்று பல கேள்விகளை கேட்டுக்கொண்டே போகலாம்.

இவரைவிட மிகச்சிறந்த விஞ்ஞானி இருந்திருக்"கலாம்"
இவரைவிட மிகச்சிறந்த முதல் குடிமகன் இருந்திருக்"கலாம்"
இவரைவிட மிகச்சிறந்த ஆசிரியரும் இருக்"கலாம்"
இவரைவிட மிகவும் கண்டிப்பானவரும் இருக்"கலாம்"
இவரைவிட மிகவும் எளிமையானவரும் இருக்"கலாம்"

பிறகு எதற்கு இவருக்காக ஒரு தேசமே வருந்தியது?
விழிக்"கலாம்"
படிக்"கலாம்"
உழைக்"கலாம்"
சிந்திக்"கலாம்"
படைக்"கலாம்"
பறக்"கலாம்"
ஜெயிக்"கலாம்"
சாதிக்"கலாம்"
என்று நம் சந்ததியரின் எண்ணங்களை மாற்றியவர்.

மதத்தின் பெயரால், ஜாதிகளின் பெயரால், கட்சிகளின் பெயரால், படிப்பு மற்றும் பணத்தைக்கொண்டு பிறிந்திருந்த நம் எண்ணங்களை மாற்றி நாம் எல்லோரும் இந்தியர் என்ற எண்ணத்தை நம் மனதில் ஆழமாக விதைத்தவர்.
நம் தேசத்தை வல்லரசாக்க கனவு காணுங்கள் என்று நமக்கு உத்வேகம் ஊட்டியவர்.
"ராஜாவின் பார்வை ராணியின் பக்கம்" என்று பாடி தனது எதிர்காலத்தை பாழடித்துக்கொண்டிருந்த இளைய சமூதாயத்திற்கு கனவின் இலக்கணத்தை மாற்றி புரிய வைத்த மாமேதை திரு அப்துல் கலாம் அவர்கள்.

மீனை கொடுப்பதைவிட மீன் பிடிப்பதை கற்றுக்கொடுப்பது சிறந்தது என்று ஒரு சீனப்பழமொழி இருக்கிறது.  அதைவிட சிறந்தது, துறுபிடித்துப்போன நம் எண்ணங்களை மாற்றி நம்மை தன்னம்பிக்கை கொண்ட மனிதனாக மாற்றிய...
நமது காலத்தில் தோன்றிய ஒரு ஞானிதான்
உயர்திரு APJ அப்தும் கலாம் அவர்கள்.

ஹதீஸ் எனும் நபிமொழிகள் அடங்கிய புகாரி எனும் புத்தகத்தின் முதல் நபிமொழி "உன் எண்ணங்களை போன்றே உன் செயல்கள் அமையும்" என்ற நபிமொழிக்கு ஏற்ப தன்னுடைய வாழ்நாள் முழுவதும் எண்ணங்களையும் செயல்களையும் ஒருமுகப்படுத்தியவர்.  சொன்னதை செய்தவர்.  செய்தவற்றையே கூறிக்கொண்டிருந்தவர்.  மேலும் நம் அனைவரின் எண்ணங்களையும் மாற்ற கடைசி மூச்சு உள்ளவரை முயன்றுகொண்டே இருந்தவர்.  எனவேதான் அவருடைய இழப்பு என்பது நம் ஒவ்வொருவரும் தன் வீட்டில் நேர்ந்த ஒரு பேரிழப்பு என்று எண்ணி கலங்கி வருந்தியது.

தேசத்தந்தை காந்தியையும் ஒருவனுக்கு பிடிக்காமல் சுட்டு கொன்றான்.
கர்ம வீரர் காமராஜும் தன் சமுதாயத்துக்காக ஒரு பிடி அதிகமாக செய்தார்.
அன்னை தெரஸாவையும் பணம்படைத்த ஒரு கோமான் பிடிக்காமல் விரட்டிய கதைகளை கேட்டுள்ளோம்.

ஆனாலும் உங்களை பிடிக்காதவர் என்று யாருமே இவ்வுலகில் இல்லையே ஐயா!

ஐயா நீங்கள் மனிதரில் புனிதர் ஐயா!
டிஸ்கி1:  இந்த இடுக்கையை இப்போது எழுத முக்கிய காரணம், AQ கான் என்று பாக்கிஸ்தானியர்களால் அறியப்பட்ட ஒரு பக்கி (ஹிந்துஸ்தானி=ஹிந்தி என்றால் பாக்கிஸ்தானி=பக்கி) திரு அப்துல் கலாம் ஒரு சாதாரண விஞ்ஞானிதான்.  அவர் எதையும் பெரிதாக சாதிக்கவில்லை என்று கூறியதை கேட்ட ஆத்திரத்தில் எழுத தூண்டியது.  இந்த கானின் இலட்சணத்தை அறிந்துதான் அந்த நாடே அவரை வீட்டுக்காவலில் வைத்தது.  ஏனெனில் இவர் தன் நாட்டு ராணுவ ரகசியங்களை வேறு நாட்டுக்கு கடத்தியவர் என்ற குற்றச்சாட்டுக்கு உள்ளானவர்.  இவனுக்கு அப்துல் கலாம் பெயரை உச்சரிக்கவும் அறுகதை கிடையாது.

டிஸ்கி2: காந்தியவாதி சசி பெருமாளின் மரணமும் என்னை மிகவும் பாதித்தது. அவர் கேட்டது உயர்நீதிமன்றத்தின் ஆணையை அமுல்படுத்த வேண்டும் என்பதே.  

Saturday, 11 April 2015

"தருத"லை-க்கு ஒரு விளக்கம்

கடந்த சில நாட்களாக தமிழ் வலைத்தளங்களில் எங்கெல்லாம் திரு நரேந்திர மோடி அவர்களை பற்றி "உண்மையான" விஷயங்கள் வெளிவருகின்றனவோ அங்கெல்லாம் ஒரு போலி பெயருடன் வந்து பின்னூட்டம் எனும் பெயரில் விஷத்தை கக்கிவிட்டு செல்வதை வழக்கமாக வைத்துள்ளனர் மோடிஜியின் ஆதரவாளர்கள்.  இதில் முக்கிய பங்களிப்பை கொடுப்பது taruada/taru என்கின்ற fake id.  இது தனி நபரா அல்லது ஒரு குழுவா என்பதை ஆராய்ந்து கொண்டிருக்கிறோம்.


கடந்த பாராளுமன்ற தேர்தலின் போது இண்டெர்நெட்டை மிகவும் துல்லியமாக பயன்படுத்தி படித்தவர்களின் மத்தியில் ஒரு மாயையை ஏற்படுத்தி தாங்களே எதிர்ப்பார்க்காத ஒரு அசுர வெற்றியை பெற்று ஆட்சியை பிடித்தது பாஜக.  இப்போது ஆட்சிக்கு வந்து பத்து மாதங்கள் ஆன பிறகு "பல் இளிக்குமாம் பித்தளை" என்பதை போன்று, நடப்பது ஒரு காங்கிரஸ் பினாமி ஆட்சி என்பதை நிரூபித்துக்கொண்டுள்ளனர்.
மோடி ஆட்சிக்கு வந்தால் இந்தியா வல்லரசாகிவிடும்.  வெளிநாடுகளில் பதுக்கப்பட்ட கருப்பு பணம் இந்தியாவிற்கு திருப்பி கொண்டுவரப்பட்டு, இந்தியர் அனைவருக்கும் பல லட்சங்கள் பகிர்ந்தளிக்கப்படும் என்றெல்லாம கூறிவிட்டு, இப்போது மானியத்தை விட்டு கொடுங்கள், பௌர்ணமியன்று விளக்குகளை அணைத்துவிடுங்கள், நாங்கள் விவசாயிகளின் நண்பன் என்று சொல்லிக்கொண்டு நில அபகரிப்பு மசோதாவை அவசரச்சட்டமாக பிறப்பிப்பது, பதவியேற்ற பத்து மாதங்களில் மோடி மற்றும் மந்திரிகளின் பயணச்செலவு மட்டும் 300 கோடிகளுக்கும் மேல், இப்படி அடுக்கிக்கொண்டே போகலாம் இவர்களின் சாதனைகளை.  அது போக  இப்போது தாஜ்மகாலை இடிக்க வேண்டுமாம்.  அங்கே சிவன் கோயிலை கட்டப்போறாங்களாம். டேய்... அது மயானம்டா... ரெண்டு பேர புதைத்த இடம்டா...
பழைய ஹோட்டல்களில் "இது இந்த ஹோட்டலில் திருடியது" என்று தங்களின் பாத்திரங்களில் பொறித்து வைத்திருந்தார்கள்.  அதுபோல இப்போது மோடி அவர்கள் தான் அணியும் கோட்டில் தன்னுடைய பெயரை போறித்துக்கொண்டு அணிந்துகொள்கிறார்.  நேற்று ஃப்ரான்ஸுக்கு சென்றபோதும் தன்னுடைய ஷாலில் தன் பெயரை NM என்று பொறித்துள்ளார்.

டோல் ஃப்ரீ நம்பருக்கே மிஸ்டு கால் கொடுக்க கற்றுத்தந்த இவர்களால்தான் நாம வல்லரசாகப்போறோமா?

எனவே வலைத்தள நண்பர்களே, தரு அல்லது தருட அல்லது தருதலை என எந்த பெயரிலும் வரும் பின்னூட்டங்களை நாம் புறக்கணிப்போம்.  இது அவர்களாகவே தங்களின் மீது வீசிக்கொள்ளும் சேறு என்பதை நாம் புரிந்துக்கொள்வோம்.

Friday, 3 April 2015

BIG JOKERS PARTY எனும் பிஜேபி!

ஏப்ரல் 1, 2015 முதல் சிகரேட் பாக்கெட்டுகளில் புகை பிடிப்பதால் ஏற்படும் பக்க விளைவுகளை படங்களாகவும் எழுத்து மூலமாகவும் பிரசுரித்து விற்கவேண்டும் என்று சட்டம் இயற்றப்பட்டது.  ஆனால் மார்ச் 31-ஆம் நாள் பிஜேபியின் மக்களவை உறுப்பினர் "புகை பிடிப்பதால் கேன்சர் ஏற்படுகிறது என்று இந்தியாவில் எந்தவிதமான ஆராய்ச்சிகளும் செய்து நிரூபிக்கப்படாத நிலையில், சிகரேட் பாக்கெட்டுகளில் பிரசுரிக்கப்படும் படங்கள் பற்றி ஆராய்ந்துகொண்டிருக்கிறோம்" என்று கூறுகிறார்.

பின்னர் இரண்டு நாட்கள் கழிந்து மற்றொரு எம் பி "சர்க்கரை நோய் ஏற்பட முக்கிய காரணமான சர்க்கரையை தடை செய்ய கோருவார்களா?" என்று மிகவும் அறிவுப்பூர்வமான வாதத்தை வைத்து சிகரேட் பாக்கெட்டில் படங்களை பிரசுரிக்க தேவையில்லை என்று மறைமுகமாக தெளிவுபடுத்துகிறார்.

இன்று மற்றுமொரு பிஜேபி எம்பி  தனக்குத்தெரிந்த ஒருவர் தினமும் ஒரு பாட்டில் மதுவும் 60 சிகரேட்டும் ஊதித்தள்ளுகிறார்.  அவருக்கு கேன்சரோ அல்லது வேறு கோளாறோ ஏற்படவில்லை. எனவே புகைபிடித்தால் கான்சர் ஏற்பட வாய்ப்புள்ளது என்று லூஸுத்தனமாக யாரும் பேசவேண்டாம் என்று சொல்லவருகிறார்.

வரும் நாட்களில் இன்னும் யார்யார் என்னென்ன வியாக்கியானம் சொல்ல இருக்கின்றார்களோ தெரியவில்லை.  இந்தியர்களாகிய நாம் இவர்களை ஆட்சியில் அமர்த்தியதன் நோக்கம் இப்படி பெரும் முதலாளிகளுக்கு தொண்டு செய்து தங்களை வளர்த்துக்கொள்ளவா?

எனக்குத்தெரிந்து ஒருவர் விஷம் சாப்பிட்டும் சாகாமல் உயிரோடிருக்கிறார். எனவே விஷம் அறிந்தினால் யாரும் சாகமாட்டார்கள் என்று சொல்லிவிடலாமா?

அதேபோல் மாட்டுக்கறி சாப்பிடும் யாரும் இறந்துவிடவில்லை.  பின்னர் ஏன் பிஜேபி ஆளும் மாநிலங்களில் அவற்றை அறுத்து விற்க தடை செய்து உள்ளார்கள்?

நாள் தவறாமல் சாராயம் குடித்து உயிரோடிருந்து, தன் குடும்பத்தினரை தினம் தினம் கொன்றுக்கொண்டிருக்கும்போது, ஏன் மதுவிலக்கை குஜராத்தில் அமுல்படுத்தியுள்ளார்கள்?

இப்படியெல்லாம் கேணத்தனமாக பேசியதாலேயே மத்தியில் ஆட்சிக்கு வந்த ஆறே மாதங்களில் டில்லி மற்றும் கஷ்மீர் மக்கள் இவர்களை கை விட்டுவிட்டனர்.  மேலும் இப்படியே உளறிக்கொண்டிருந்தால் வரும் ஆண்டு நடக்கவிருக்கும் மாநில தேர்தல் அனைத்திலும் சங்குதான் போல!

Monday, 23 March 2015

மேகதாது - புதிய அணை - முழு அடைப்பு

வரும் சனிக்கிழமை, 28-03-2015 அன்று தமிழகம் முழுவதும் முழு அடைப்பு செய்யவேண்டும் என்று தமிழக அனைத்து விவசாயிகள் பேரவை வேண்டுகோள் விடுத்துள்ளது.  இதற்கு பல்வேறு கட்சியினரும் ஆதரவு தெரிவிக்கின்றனர்.

முழு அடைப்பு செய்வதால் என்ன நன்மை விளையப்போகிறது என்பதை நம்மால் புரிந்துக்கொள்ள முடியவில்லை.  கடந்த பல ஆண்டுகளாக பல்வேறு விதமான தீர்ப்புகள் வந்தும், பல ஆட்சிகளும் கட்சிகளும் மாறியும் இன்னும் காவிரியில் தண்ணீர் திறந்துவிடமாட்டேங்கிறவர்களை இந்த முழு அடைப்பு எப்படி பாதிக்கும்?  மேலும் இந்த முழு அடைப்பினால் மேகதாதுவில் கர்நாடக அரசு கட்ட இருக்கும் அணையை நிறுத்திவிடுமா?  அரசியல் கட்சிகளுக்கு இது இன்றைய காலத்தின் கட்டாயமாக உள்ளது.  இன்னும் சில மாதங்களில் மாநில தேர்தல் நடக்க இருப்பதால்  அதற்குள் தங்களின் இருப்பை பறைசாற்ற இது ஒரு வாய்ப்பு என்பதாலேயே இவர்களின் நீலிக்கண்ணீர்!

இன்று தமிழகம் சார்பாக மக்களவையில் 39 உறுப்பினர்களும் மாநிலங்களவையில் 18 உறுப்பினர்களும் இருக்கின்றனர்.

அதிமுகதிமுககாங்கிரஸ்பாஜககம்யூனிஸ்ட்பமக
மாநிலங்களவை1141-2-
மக்களவை37--1-1
இந்த 57 உறுப்பினர்களும் என்றைக்காவது/எதற்காகவாவது ஒன்றாக நின்று குறல் எழுப்பியிருக்கின்றார்களா என்றால் இல்லை என்பதே பதில்.  அதுவே கர்நாடகாவாகட்டும் கேரளாவாகட்டும் அல்லது ஆந்திராவாகட்டும், தங்கள் மாநில பிரச்சனையென்றால் அனைத்து கட்சியினரும் ஒன்றாக கூடி தங்களின் ஒட்டுமொத்த ஆதரவையோ அல்லது எதிர்ப்பையோ காட்ட தயங்குவதில்லை. அப்பேர்பட்ட ஒரு ஒற்றுமை ஏன் நம் தமிழக கட்சிகளிடையே இல்லை?  ஒன்று பட்டால் உண்டு வாழ்வு என்பதை ஏன் இவர்கள் மறந்துவிட்டனர்.
அதுபோக விட்டுக்கொடுக்கும் மனப்போக்கும் நம்மில் யாருக்குமில்லாமல் போனதேன்?  அண்டை மாநிலம் பாலைவனமானால் நமக்கு என்ன என்ற மனோபாவம் வந்ததற்கு யார் காரணம்?

பிரம்மபுத்ரா நதியின் நீரை சீனாவும் இந்தியாவும் பங்களாதேசமும் பகிர்ந்துகொள்கின்றன!

ஜீலம் நதியின் நீரை இந்தியாவும் பாகிஸ்தானும் பகிர்ந்துகொள்கின்றன!

நைல் நதியின் நீரை எகிப்தும் சூடானும் எத்தியோப்பியாவும் பகிர்ந்துகொள்கின்றன!

ஆனால் காவிரியையோ பெரியாரையோ ஒரு நாட்டின் இரு மாநிலங்கள் பகிர்ந்துகொள்ள எத்தனை தடைகள்!  இதற்கு காரணமென்ன?  அரசியல்... வாக்கு அரசியல்!  இந்த பிரச்சனையை தீர்த்துவிட்டால் பின்னர் எதை கூறி தங்களின் கடையை விரிப்பது?  எனவேதான் இதுபோன்ற கடையடைப்பு கோரிக்கைகள். இந்த கடையடைப்பினால் பாதிக்கப்படுவது அன்றாடம் சம்பாதித்தே ஆகவேண்டிய கட்டாயத்தில் உள்ளவர்களேயன்றி இந்த கேடுகெட்ட அரசியல்வாதிகளல்லவே!