Monday, 30 December 2013

நாம நல்லா வருவோம்

'கிராமம் தோறும் காங்கிரஸ் வீடு தோறும் கை'
அடுத்து கையில் திருவோடுதாண்டீ!

'டெல்லி முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவாலுக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டு உள்ளதால் இன்று சட்டப் பேரவை செல்லவில்லை'
இப்ப அவர் அரசு அதிகாரி இல்லையென்று யாராவது அவருக்கு எடுத்து சொல்லுங்க! அதான்யா அரசியல்வாதிக்கும் அரசு அதிகாரிக்கும் உள்ள வித்தியாசம்!

'நிதி நிலைமை நிலையான தன்மை பெற மத்தியில் நிலையான அரசு அமைவது முக்கியம்'
அப்போ கடந்த பத்தாண்டுகளா நிலையான அரசு அமையவில்லையா அல்லது அரசே அமையவில்லையா?  என்ன கொடும சார் இது!

'சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி புதிய கட்சியை வரும் பொங்கல் அன்று தொடங்கவுள்ளார்'
சைதாப்பேட்டையும் வரும் தென்சென்னை தொகுதியில் போட்டியிடுவதால் எதிர்த்து போட்டியிடும் அனைவரும் டெபாசிட் இழப்பார்கள் என்பதை "மக்கள் பாதுகாப்பு கழகம்" சார்பாக இப்போதே பதிகிறேன்.

'அரசுத் துறைகளில் லஞ்சம் வாங்கும் ஊழல் அதிகாரிகள் மற்றும் அலுவலர்களில் 15 பேர் கொண்ட பட்டியல் வெளியீடு'
பட்டியலில் இடம்பெறாதவர்களின் வீட்டம்மணிகள் வெகுண்டெழுந்து கணவர்களை "நீ அதற்கும் லாயக்கில்லையா" என்று சொல்லியிருப்பார்களோ?

'போதி தர்மருக்கு காஞ்சியில் நினைவிடம்'
இதற்கும் அன்னிய முதலீடு தேவைப்படுவதால் சீனா-ஜப்பான் உதவுகிறது போல!


தமிழன் என்று சொல்லடா...

அரசு என்பது தன்னலமற்று பொதுநலத்துக்காக செயல்படக்கூடிய ஒரு அமைப்பு. அனால் இன்றைய அரசுகளோ குறுகிய சிந்தனைகளோடு ஒரு ஐந்தாண்டுகளில் தன்னால் முடிந்தளவு நாட்டை சூரையாடிவிட கிடைத்த வாய்ப்பாகவே கருதி செயல்படுகின்றன.

சில நூறு ஆண்டுகளுக்கு முன் வந்த முகலாயர்கள் குட்டி குட்டி ராஜ்ஜியங்களாக இருந்தவற்றை ஒன்றாக்கி அகண்ட பாரதத்தை படைத்தனர். பின்னர் வந்த ஆங்கிலேயர்கள் நம்மை அடிமைப்படுத்தி இங்கிருந்த வளங்களை கொண்டு சென்றனர்.  ஆனாலும் அவர்கள் இந்தியாவில் பலப்பல கட்டுமான வசதிகளை உருவாக்கித்தந்தனர் என்பதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை.  நாட்டை விட்டு வெளியேறும் போது இந்தியாவை துண்டாக்கிவிட்டு, இனி இந்தியா எப்போதும் தனக்குள்ளே அடித்துக்கொண்டேயிருக்க வேண்டும் என்று ஒரு விதையையும் மிகவும் ஆழமாக ஊன்றிவிட்டு சென்றனர்.

விடுதலை அடைந்த இந்தியாவானது தன்னைத்தானே உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடாக முன்நிறுத்திக்கொண்டது.  காலப்போக்கில் மத்தியிலும் மாநிலத்திலும் ஆள்பவர்களின் தகுதிகள் என்பது மிகவும் கேலிக்குறியதாகி போனது.  பொதுநலம் என்பது காணாமல் போய் சுயநலம் மட்டுமே இப்போது எஞ்சியுள்ளது.

ஒரு காலத்தில் தனியார்வசம் இருந்த போக்குவரத்து துறை மிகவும் இலாபகரமாக நடைபெற்றுக்கொண்டிருந்தது.  பின்னர் அரசு அத்துறையை அரசுடைமை ஆக்கியது.  ஆனால் அதற்குபின் அது ஒரு ஊழல் நிறைந்த, நஷ்டத்தில் இயங்கும் துறையானது.  அதே போல அரசு நூற்பாலைகளில் தன் கை வைத்தது.  எவ்வளவு சுட்டுக்கொள்ள வேண்டுமோ அவ்வளவு காயம் ஏற்படுத்திக்கொண்டது.  இவை சில உதாரணங்கள் மட்டுமே!  இதே போல அனைத்து துறைகளும் வீழ்ந்தே கிடக்கின்றன.

பொதுவாக நாம் ஒரு தொழில் செய்தால் அதை நிச்சயமாக லாபத்திற்காகவே செய்வோம்.  தொழில் நஷ்டத்திலோ அல்லது போதிய அளவு லாபமோ இல்லாதபட்சத்தில் நிச்சயமாக நாம் அதை சீர்படுத்த எண்ணுவோம் அல்லது அத்தொழிலை தலைமுழுகிவிட்டு  உருப்படியாக ஏதாவது வேறு வேலை செய்ய சென்றுவிடுவோம்.  ஆனால் அரசு என்பது அப்படி செய்யாது அல்லது செய்யவும் கூடாது.  ஆனால் அதே நேரத்தில் செய்பவற்றை தெளிவாக செய்ய வேண்டாமா? நம் நாட்டில் என்ன குறை உள்ளது?  மெத்தப்படித்தவர்களுக்கு குறையா இல்லை மனித வளம்தான் குறைவாக உள்ளதா அல்லது மற்ற வளங்கள்தான்  குறைவாக உள்ளனவா இல்லையென்றால் கட்டுமான வசதிகளில்தான் குறைச்சலா?  என்னை பொருத்தவரையில் ஆள்பவர்களின் மனநிலையிலும் எண்ணங்களிலும்தான் குறை தெரிகிறது.

கல்வி சுகாதாரம் விவசாயம் போன்ற துறைகளை இப்போது அரசாங்கம் தன்னால் நடத்த முடியாமல் தனியாரிடம் ஒப்படைக்கிறது.  சுதந்திரம் அடைந்து 65 ஆண்டுகள் கழிந்தும் நம்மால் ஒரு முடிவுக்கு வர முடியாமல், தனியாரிலிருந்து பொதுத்துறையென்றும் பின் மீண்டும் தனியார்வசம் என்றும் அரசு குழப்பிக்கொண்டிருக்கிறது.  எந்தக்கட்சி ஆட்சிக்கு வந்தாலும் ஊழல் துறை மட்டுமே முன்னேறி வருகிறது.  கடைசியில் இப்போது இத்துறை அரசியல் வாதிகளிடமிருந்து சாதாரண மக்கள் வரை பரவிவிட்டது.  இப்போது மக்களும் தெளிந்துவிட்டார்கள் என்றே சொல்லவேண்டும்.  ஒவ்வொரு தேர்தலின்போதும் பணம் அல்லது பொருள் பெற்றுக்கொண்டே வாக்கு அளிக்கின்றனர்.  நல்ல வளர்ச்சிதான்!

என்னுடைய குறையெல்லாம் ஒன்றே ஒன்றுதான்.  டாஸ்மாக்-ல் மட்டும் இலக்கு வைத்து லாபம் பார்க்க முடிகின்ற அரசால் ஏன் கல்வி சுகாதாரம் மற்றும் விவசாயம் போன்ற துறைகளில் வெற்றிகரமாக செயல்பட முடிவது இல்லை?

சில மாதங்களுக்கு முன் சத்தியமே ஜயதே எனும் நிகழ்ச்சியில் ஒரு ரூபாய்க்கான மாத்திரை, முப்பது ரூபாய் முதல் 300 ரூபாய் வரை விற்பதாக சொல்லப்பட்டது. மருந்துகளின் விலையை கட்டுப்படுத்தி அதை அனைவருக்கும் கிடைக்கச்செய்ய முடியவில்லையென்றால் பின் அந்த சுகாதாரத்துறை இருந்து என்ன பயன்?

திரு சகாயம் சொல்வது போல ஒரு நாள் முழுவதும் துணி நெய்யும் நெசவாளிக்கு ஒரு நாள் கூலியாக 75 ரூபாய் கிடைக்கிறது.  அதை கவனிக்கும் துறையில் வேலைபார்ப்பவர்களுக்கு ரூபாய் 300 முதல் 3000 வரை ஒரு நாள் சம்பளம்.  அது போக லஞ்சம் தனி.  நெசவாளர்களுக்கு வாரியம் அமைத்து அதில் சுருட்டியவர்கள் எத்தனை எத்தனை பேர்?

நாட்டில் கருப்புப்பணம் என்பது நாளொருமேனியும் பொழுதொரு வண்ணமுமாய் அதிகரித்துக்கொண்டே செல்லும் போது, வருமான வரித்துறையை இழுத்து மூடிவிட வேண்டியதுதானே?  பாவம் மாதச்சம்பளம் வாங்குபர்களாவது நிம்மதியாக இருப்பார்கள்.

வேற்றுமையில் ஒற்றுமையை காணும் நாம் ஏன் பயன்படுத்தும் தண்ணீருக்காக வேறுபட்டு இருக்கின்றோம்?

சாதிகளில்லையடி பாப்பா என்று முழங்கிய பாரதியை மறந்து இன்று ஜாதிகளை கணெக்கெடுத்தால் வரும் விழுக்காடு நூறைத்தாண்டுகிறதேன்? சுதந்திரமடைந்த இந்த 65 ஆண்டுகளில் ஜாதிகளை வளர்த்தல்லவா இருக்கின்றோம்.

விவசாயிகளின் தற்கொலைகள், பெண்கள்/குழந்தைகளுக்கான பாதுகாப்பின்மை, குழந்தை தொழிலாளிகள், மின்சாரம், குடிக்க நல்ல தண்ணீர் இல்லாமை என்று பிரச்சனைகள் ஆயிரம் இருக்கும்போது சாராயத்திற்கு மட்டும் இலக்கு நிர்ணயித்து அரசு கல்லா கட்டுகிறது.  ஒரு காலத்தில் ராஜாஜி வரி அறிமுகப்படுத்திய போது அரசு நலத்திட்டங்களுக்கு நிதி திரட்டவே, வரி விதிக்கப்படுகிறது என்று கூறி வழிகாட்டினார்.  இப்போதும் சாராயம் விற்பதில் வரும் வருமானம் இல்லையெனில் அரசு நடத்துவது இயலாத காரியம் என்று மக்களை ஏமாற்றுகின்றனர்.   எந்த போதையாக இருந்தாலும் அது கேட்டையே விளைவிக்கும்.  ஆனால் இன்றோ நம் நாட்டு மக்கள் மதுவின் போதையில் சிக்கி சீரழிந்துக்கொண்டுள்ளனர்.

நாம் எப்போது தலை நிமிர்ந்து நடப்பது?

மது இல்லாமல் புத்தாண்டை இனிதே கொண்டாடுவோம்.
இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

Friday, 27 December 2013

எனக்கு ஒரு சந்தேகமுங்க!

எழுவதுக்கு 28 மதிப்பெண்கள் பெற்ற ஆம் ஆத்மி கட்சியின் தலைவர் கேஜ்ரிவால் முதல்வர் பதவியேற்றது முதல், ஏழு நாட்களில் தன்னுடைய பெரும்பான்மையை நிரூபிக்கவேண்டுமாம்.
ஒரு மனுஷனுக்கு எப்படியெல்லாம் விதி விளயாடுதுன்னு பாருங்க!

திமுக கூட்டணியில் தேமுதிக வந்தால் தனக்கு மகிழ்ச்சியே என்று டமில் வாட்ச்மேன் கூறியுள்ளார்.  கருப்பு எம்ஜியார அப்படியே ஓய்ச்சுடலாம்னு செமயா ப்ளான் பண்றாருன்னு நினைக்கேன்!  சகலகலாவல்லவர் டி ஆர் திமுக-வில் இணைந்தார்.  சட்டசபைக்கு ஒரு வடிவேலு என்றால் பாராளுமன்றத்துக்கு டி.ஆர்!
என்னங்க நான் சொல்றது சரிதானே?

பத்தாவது மற்றும் பன்னிரெண்டாம் வகுப்புக்கான தேர்வில் புதிய பார்கோடுடன் கூடிய விடைத்தாளை அறிமுகப்படுத்துவதால் தேர்வின் போது மாணவர்களோ அல்லது விடைத்தாள் திருத்தும்போது ஆசிரியர்களோ செய்யும் முறைகேட்டை முற்றிலுமாக தடுக்க முடியுமாம்.  அதைவிட எக்ஸாமே இல்லேன்னா முறைகேடே நடக்காதேங்க!
அல்லாரும் ஆல் பாஸ்!  நோ சூஸைட்ஸ்!  கரீட்டாப்பா?

மோடிக்கு செக் வைக்க காங்கிரஸ் சைபர் படை அமைக்க திட்டமிட்டுள்ளதாக நம்பகமான செய்திகள் கூறுகின்றன.  அதை நடைமுறை படுத்துவதற்காக ஒரு திட்டம் வரும் 2025-ற்குள் தயாரிக்கப்பட்டு அதில் உறுப்பினர்களை 2052-க்குள் சேர்த்துவிடுவார்கள்.  உறுப்பினர்களின் முக்கிய தகுதியாக அவர்களின் வயது இன்றோடு 60 பூர்த்தியாகி இருக்கவேண்டும்.  அப்போதுதானே துள்ளிகுதித்து ஒரு உத்வேகத்துடன் செயல்படமுடியும்!
என்ன, நான் சொல்றது சரிதானே?

மூத்த குடிமக்களுக்கு ரயிலில் இலவச புனிதப் பயணம்: தமிழக அரசு பரிசீலனை

திருச்சி சந்திப்பில் காஃபி வாங்க நின்றிருந்தவரிடம் ஒரு பெண் வந்து தனக்கு தலை சுற்றுகிறது. நின்று காஃபி வாங்க முடியவில்லை! எனக்கும் ஒரு காஃபி வாங்கித்தாருங்கள் என்று கூறியுள்ளார்.  பாவம் என்று நினைத்து காஃபி வாங்கிதந்தவரை வாருங்கள் உட்கார்ந்து பேசலாம் என்றழைத்தவர் தனக்கு பணப்பிரச்சனை உள்ளது.  எனவே எனக்கு உதவிசெய்தால் உங்களோடு உல்லாசமாக இருக்க நான் தயார் என்று வெளிப்படையாகவே கூறியுள்ளார். இதை கேட்டு திடுக்கிட்ட அவர் ஒரு காஃபியோடு சனியன் தொலையட்டும் என்று ஓடி ஒளிந்துவிட்டார்.
நாட்டில் ஆண்களுக்குத்தான் எவ்வளவு சிரமங்கள்?!

நேற்றைய தினத்தந்தியில் ஒரு செய்தி புகைப்படத்துடன் வந்துள்ளது.  அதில் லிபியாவின் தலைநகர் பெய்ருட்டில் நடந்த குண்டுவெடிப்பு என்று குறிப்பிடப்பட்டுள்ளது.  நான் படித்த பூகோளத்தில் லிபியாவின் தலைநகரம் திருப்போலி என்று ஞாபகம்.  பெய்ருட் என்பது லெபனான் நாட்டின் தலைநகரம். வாழ்க தமிழ் பத்திரிக்கைகள்!

மதுரை சட்டக்கல்லூரி மாணவி, தமிழகத்தில் மதுவிலக்கை கோரி உண்ணாவிரதம் இருப்பதை எந்த பத்திரிக்கை/தொலைகாட்சிகளும் வெளிச்சம் போட்டு காட்டாமல் புறக்கணிப்பதாக எனக்குப்படுகிறது. நாமதாம்பா அந்த பொண்ணுக்கு ஆதரவு கொடுக்கணும்!

வரும் தேர்த்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றால் நான் பிரதமராகமாட்டேன், ராகுலுக்கு வழிகாட்டுவேன் என்று தொடர்ந்து பத்து ஆண்டுகள் இந்த தேசத்தை ஆண்ட, நேரு குடும்பத்திலிருந்து வராத, பாராளுமன்ற தேர்த்தலை சந்திக்காத மாபெரும் சாதனையாளர் திரு மன்மோகன் சிங் சூளுரைத்துள்ளார்.
எஸ்கேப்டா சாமி

வாங்க பழகலாம்

நேர்மையான அதிகாரிகள் மற்றும் நேர்மையாக இருந்த காரணத்தினால் சஸ்பெண்ட் செய்யப்பட்ட அதிகாரிகள், மேலும் ஒய்வூதியம் வழங்கப்படாமல் இழுத்தடிக்கப் படும் அதிகாரிகள் தங்களை எஸ் எம் எஸ் அல்லது இ மெயில் மூலம் தொடர்பு கொண்டால், அவர்களுக்கு நல்ல தீர்வு தமது ஆட்சியில் கிடைக்கும் என்றும், நேர்மையான அதிகாரிகளுக்கு நல்ல பதவி வழங்கப்படும் என்றும் கெஜ்ரிவால் அழைப்பு விடுத்துள்ளார்.

இன்று நித்யானந்தாவுக்கு 37வது பிறந்தநாள் ஆகும். இந்நிலையில் ரஞ்சிதாவுக்கு நித்தியானந்தா இன்று தீட்சை வழங்கினார். பிடதி ஆசிரமத்தில் உள்ள புனித குளத்தில் குளித்து, காவி உடை அணிந்த ரஞ்சிதா, நித்யானந்தாவிடம் சென்று தீட்சை பெற்றார். தொடர்ந்து ரஞ்சிதாவுக்கு மா ஆனந்தமாயி என்று பெயர் சூட்டப்பட்டது.

தகவல் அறியும் சட்டத்தின் கீழ் ராஜஸ்தானில் தானமாக பெற்ற கண்களை பயன்படுத்தாமல் வீணடிக்கப்பட்டது அறியப்பட்டுள்ளது.இப்பிரச்னை குறித்து மாநில சுகாதாரத்துறை அமைச்சர் ராஜேந்திர ரத்தோர் தலைமையில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. மாநிலத்தில் உள்ள ஏழு கண் வங்கிகளில் ஆய்வு நடத்தி ஒரு வார காலத்திற்குள் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என உத்தரவு பிறப்பித்துள்ளார்.


Wednesday, 25 December 2013

எலெக்ஷன் வருதுங்கோ - 1

ஆல்ரெடி பாஜக-வினர் வல்லபாய் படேலுக்கு சிலை வைக்க நடவடிக்கை எடுத்துக்கொண்டிருக்கும் இவ்வேளையில் இப்போது காங்கிரஸ், ஷத்ரப்தி சிவாஜிக்கும் சட்டமாமேதை அம்பேத்கருக்கும் மகாராஷ்டிராவில் சிலை அமைக்க முயன்றுகொண்டிருக்கிறது.

சிலை வைப்பது ஒரு ட்ரெண்ட் என்றால் இன்னொரு டிரெண்ட் சிறுபான்மை மதத்தினரை குளிரவைப்பது.  நேற்று க்றிஸ்மஸ்ஸை முன்னிட்டு தலைவர்கள் வாழ்த்துக்கள் தெரிவிக்கும்போது பல அறிய தகவல்களை அறிய முடிந்தது.

இத்தாலி நாட்டில் இருந்து வந்து தமிழ்த்துறவியாக வாழ்ந்து, "தத்துவ போதகர்" எனத் தம் பெயரையே மாற்றிக்கொண்டு தமிழ் மொழியின் உரைநடைக்கு உயிர் தந்த இராபர்ட் டி நொபிலி! அதே இத்தாலியில் இருந்து வந்து கிருத்தவத் தொண்டுகளுடன் ஏசுநாதரின் வரலாறு கூறும், "தேம்பாவணி" தமிழுக்கு அகராதிக் கலையை அறிமுகப்படுத்திய, "சதுரகராதி" உள்ளிட்ட பல்வேறு நூல்களையும் படைத்த வீரமாமுனிவர்!
செர்மானிய நாட்டிலிருந்து வந்து தரங்கம்பாடியில் முதன்முதல் அச்சுக்கூடத்தையும், பொறையாற்றில் காகித ஆலையையும் நிறுவி "தமிழ் – இலத்தீன் அகராதி", "பைபிள்" தமிழ் மொழிபெயர்ப்பு முதலான நூல்களையும் படைத்த சீகன் பால்க் அய்யர்!
இங்கிலாந்து நாட்டில் இருந்து வந்து சமயப் பணிகள் ஆற்றியதுடன், "திருக்குறள்", "திருவாசகம்", "நாலடியார்" ஆகியவற்றை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்ததோடு; தம் தாயகம் திரும்பிய பின் வெளியுலகுக்குத் தமிழின் மேன்மையைப் புலப்படுத்தி, "நான் ஒரு தமிழ்மாணவன்" எனத் தம் கல்லறையில் எழுதச் செய்த ஜி.யு.போப்!
அயர்லாந்து நாட்டில் பிறந்து, தமிழகம் வந்து நெல்லைச் சீமையில் தங்கி, "திருநெல்வேலி சரித்திரம்"" எனும் ஆங்கில நூலுடன் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், துளு உள்ளிட்ட திராவிட மொழிகள் அனைத்தையும் ஆய்வு செய்து, "திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம்" எனும் அரிய நூலையும் படைத்து; தமிழ் மொழியின் மேன்மையை மேதினியில் நிலைநாட்டியதுடன் தமிழைச் செம்மொழி என முதன்முதல் பறைசாற்றிய மாமேதை கால்டுவெல்!

இப்படி பலரை நாம் இப்போது மீண்டும் தூசி தட்டி நினைவுபடுத்திக்கொண்டிருப்பதற்கு மிக முக்கிய காரணம் எலெக்ஷன் வருதுங்கோ!  உங்க ஓட்டு எங்களுக்கேங்க!

Tuesday, 24 December 2013

அறிவோம்

சூரிய மின்சக்தியை பயன்படுத்தி பம்ப்செட் மோட்டாரை இயக்கி விவசாயம் செய்கிறார் திரு மாரியப்பன்.  சேலம் மாவட்டம் தார்க்காடு கிராமத்தை சேர்ந்த இவர் சில மாதங்களுக்கு முன் தன் வீட்டின் கூரையில் சூரிய மின் தகடுகளை பொருத்தி 7.5 குதிரைத்திறன் கொண்ட மோட்டரை இயக்கி தனது பத்து ஏக்கர் நிலத்துக்கு நீர் பாசனம் செய்கிறார்.   இதற்கு ஏழரை இலட்சம் செல்வானது என்றும் அதில் அரசு மானியமாக இரண்டேகால் இலட்சம் கிடைத்தது என்கிறார், திரு மாரியப்பன்.  கன் ஸ்பிரே மூலம் நீர் பாய்ச்சி சோளம் மற்றும் கரும்பு விளைவிக்கும் இவர் கூறும்போது அடுத்த இருபது ஆண்டுகளுக்கு இனி தனக்கு மின்சார தேவை ஏற்படாது என்றும் நீரும் குறைந்த அளவே பயன்படுத்தப்படுகிறது என்றும் நம்பிக்கையோடு தெரிவித்தார்.
வாழ்த்துக்கள் திரு மாரியப்பன்!

டில்லி முதல்வராக பதவி ஏற்க உள்ள ஆம் ஆத்மி கட்சியின் தலைவர் திரு அர்விந்த் கேஜ்ரிவால் தனக்காக ஒதுக்கப்பட்ட அரசு வீட்டை ஏற்க மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது.  அதே போல தனக்கு தரப்பட இருந்த இசட் பிரிவு பாதுகாப்பையும் தேவையில்லை என்றும் கூறிவிட்டார்.  தனக்கு பொதுமக்களும் கடவுளுமே பாதுகாப்பார்கள் என்றும் கூறிவிட்டார்.  பொதுவாக ஒரு முதல்வரை சந்திக்க பொதுமக்கள் பலரும் வந்து செல்வார்கள்.  மேலும் பல முக்கியஸ்தர்கள் அவரை சந்திக்க வருவார்கள்.  அப்படி இருக்கும்போது தன்னுடைய வீட்டில் இவரை சந்திக்க வருபவர்களுக்கும் சவுகரிய குறைபாடு ஏற்பட வாய்ப்புள்ளது.  மேலும் அங்கு அவரை சுற்றியுள்ள மற்ற குடும்பத்தினருக்கும் பல இன்னல்கள் ஏற்பட வாய்ப்புள்ளது.  எனவே திரு கேஜ்ரிவால் முதல்வருக்காக அரசு அமைத்துள்ள வீட்டில் தங்குவதே அவருக்கும் சவுக்கரியம்.  அவரை தேர்ந்தெடுத்த மக்களுக்கும் சவுக்கரியமாக இருக்கும்.  தேவையில்லாத ஸ்டண்ட் வேண்டாம் கேஜ்ரிவால்ஜி!

ஆங்கில புத்தாண்டு அன்று டாஸ்மாக்-ல் நூறு கோடி ரூபாய்க்கு மது விற்பனைக்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.  நாடு விளங்கிடும்!
க்றிஸ்மஸ் நல்வாழ்த்துக்கள்
Monday, 23 December 2013

நாம நல்லா வருவோம்

ஆம் ஆத்மி கட்சித் தலைவரின் எம் எல் ஏ பதவி பறிக்கப்படுமா?
டெல்லியில் நாளை ஆட்சியை அமைக்க உள்ள ஆம் ஆத்மி கட்சியின் தலைவர் அர்விந்த் கேஜ்ரிவால்.  இவர் வேட்புமனு தாக்கல் செய்தபோது அதில் தான் பிறந்த இடத்தை மாற்றி குறிப்பிட்டுள்ளார்.  இதை இப்போது மதுரை மாநகராட்சி துறையினர் "கேஜ்ரிவால் மதுரையில் பிறந்தார்" என்ற சான்றிதழ் கொடுத்துள்ளனர்.  எனவே தேர்தல் கமிஷன் அவசரமாக கூடி ஒரு நல்ல முடிவெடுக்கும் என்று நம்புவோமாக.  வாழ்க மதுரை மாநகராட்சியின் சேவைகள்!

வயது மூப்பு காரணமாக ஓய்வு பெற்ற செக்ஸ் தொழிலாளிகளுக்கு நிவாரண மையம் அமைக்க மேற்கு வங்க அரசு முடிவெடுத்துள்ளது.  அவர்களை மதிப்பு மரியாதையோடும் வசதியோடும் ஒரு கூறையின் கீழ் வாழவைப்பதே இத்திட்டத்திற்கான காரணம் என்று பெண்கள் மற்றும் சமூக நல மேம்பாட்டு துறையின் செயலாளர் ஷஷி பாஞ்சா PTI-க்கு தெரிவித்தார்.

அமெரிக்காவிலுள்ள லூசியானா மாகாணத்தின் கவர்னராக இரு முறை தேர்ந்தெடுக்கப்பட்ட இந்திய வம்சாவளியை சேர்ந்த பேபி ஜிண்டால் 2016-ல் நடக்கவுள்ள அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடுவார் என்று செனட்டர் டேவிட் விட்டர் தெரிவித்தார்.  தனது பெயரிலேயே ஜோக்காளி (விட்டர்) என்று உள்ளதால் இப்படி சொல்லியிருப்பாரோ?

ஆம் ஆத்மி கட்சியின் பிகார் கிளை திறப்பு:
டெல்லியில் ஆட்சி அமைக்க தேவையான எண்ணிக்கையில் எம் எல் ஏ-க்கள் இல்லாதபோதும் முக்கிய கட்சிகள் ஆட்சி அமைக்க மறுத்ததாலும் வேறு வழியின்று மாட்டிக்கொண்ட ஆம் ஆத்மி கட்சியின் பிகார் கிளை நேற்று கோலாகலமாக ஆரம்பிக்கப்பட்டது.  பீகாரின் பெகுசராய் பகுதியில் முதல்வர் நிதிஷ்குமார் பேசிய கூட்டத்தில் அவர் மீது செருப்பு வீசி கட்சி வேலையை ஆரம்பித்துள்ளனர்.  எனினும் செருப்பு வீசியவர் யார் என்பது இன்னும் தெரியாது இருப்பதால் எம் எல் ஏ பதவி யாருக்கு கொடுப்பது என்பதில் மிகப்பெரிய சிக்கல் ஏற்பட்டுள்ளது.


எம் எல் ஏ பதவியை முதல்வர் ராஜினாமா செய்தார்!

இன்றைய சிந்தனை:
நீந்தும் போது ஆழம் என்பது ஒரு பொருட்டே அல்ல.
தொடர்ந்து நீந்தும் போது, கரை தொட்டுவிடும் தூரமே!மத்திய பிரதேச முதல்வர் ஷிவ்ராஜ் சிங் சௌஹான் தன்னுடைய இரண்டு எம் எல் ஏ பதவிகளில் ஒன்றான விதிஷா தொகுதி எம் எல் ஏ பதவியை நேற்று ராஜினாமா செய்தார்.

டிஸ்கி:
இப்படி தலைப்பை போட்டு தானே பல பத்திரிக்கைகளும் பதிவர்களும் பிரபலமடைகின்றன.  எனவே ஏன் நாமும் ட்ரை பண்ணக்கூடாது என்று ஒரு சின்ன நப்பாசை.


Sunday, 22 December 2013

நாம் மாங்காயா இல்லை (வாழைப்)பழமா?

திமுக-வின் ஊழலால் காங்கிரஸுக்கு அவப்பெயர் என்று மத்திய அமைச்சர் சுதர்சன நாச்சியப்பன் கூறியுள்ளார்.  அதாவது ஊழல் என்றாலே காங்கிரஸ்தான் என்று இருக்கும்போது திமுக ஊழல் செய்ததால் அது காங்கிரஸுக்கு அவப்பெயர்தானே!  முதல் முறை மனசாட்சிக்கு பயந்து உண்மையை பேசியுள்ள அமைச்சருக்கு காமன்வெல்த்தில் ஆரம்பித்து ஆதர்ஷ் வரையிலான ஒரு லட்சத்து எழுபத்தாயிரம் கோடி நன்றிகள்.

கட்சிக்காக இல்லாமல் நாட்டுக்காக ஓட்டளியுங்கள் என்று மோடி மும்பை மாநாட்டில் மக்களிடம் கேட்டுக்கொண்டார்.  அப்போ அந்த மோடி அலையெல்லாம் சும்மா டூப்பா?  வீடுதோறும் தாமரை என்றது கப்ஸாவா?

ஏமன் நாட்டில் தன் மகளை திருமணம் செய்ய ஃபேஸ்புக்கில் பத்து லட்சம் லைக்ஸ் வாங்கிவந்தால்தான் சம்மதிப்பேன் என்று ஒரு ஹை-டெக் தந்தை அறிவித்துள்ளதால் மணமகன் பாடு படு திண்டாட்டமாகிவுள்ளது.  செத்தாண்ட சுகுமாரு!

அண்மையில் தென்னாப்ரிக்கா மற்றும் கென்யா பயணம் செய்த இலங்கை அதிபர் தன் சகாக்களுடன் துபாய் வழியாக இலங்கைக்கு பயணம் செய்தபோது துபாய் ட்யூட்டி ஃப்ரீ-யிலிருந்து ஒரு CCTV காமெராவை திருடியவரை காவலர்கள் பிடித்து விசாரித்ததில் அவர் ராஜபக்சேவின் குழுவில் இடம்பெற்ற காமெராமேன் என்பது தெரியவந்துள்ளது.  அவரை எச்சரிக்கை செய்து துபாய் விமான நிலைய அதிகாரிகள் அனுப்பியுள்ளனர்.  ரத்தவெறி பிடித்த திருட்டு பயல்கள்போல!

தமிழர் வரலாற்றில் பிரணாப் முகர்ஜிக்கு மன்னிப்பே கிடையாது என்று "அரசியல் திலகம்" வைகோ கூறியுள்ளார்.  எனவே இவர் பாஜக-வோடு கூட்டணி வைத்து பாவமன்னிப்பு தேடுகிறாரோ?
இப்படிக்கு
அரசியல் திலகம் வைகோ பாசறை

Saturday, 21 December 2013

நாம் மாங்காயா இல்லை (வாழைப்)பழமா?

தேவ்யானிக்கு நீதி கிடைக்கும் வரை போராடுவோம் என்று இந்திய வெளியுறவுத்துறை அறிவித்துள்ளது.  அப்படியென்றால் அவர் வீட்டுக்கு வீட்டு வேலைக்காக வந்து ஏமாற்றப்பட்ட பெண்ணுக்கு போராட செவ்வாய் கிரகத்திலிருந்து தான் யாரையாவது அழைத்துவர வேண்டும்போல!
தலைப்பை மீண்டும் ஒரு முறை வாசித்துக்கொள்ளுங்கள்.

கட்சி பணியாற்ற பல அமைச்சர்கள் முடிவெடுத்துள்ளனர்.  திருமதி ஜெயந்தி நடராஜன் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்து பிள்ளையார் சுழி போட்டுள்ளார்.  அப்போ இத்தனை நாட்களாக யாரும் கட்சிக்காக வேலை செய்யவில்லையா?  அப்போ ராகுல் காந்தி இத்தனை நாட்களாக செய்துகொண்டிருந்தது எல்லாம் சும்மா டூப்பா?
எங்கேயோ கேட்கும் குரல்...

கட்டக்கடசியாக லோக்பால் சட்டம் நிறைவேறிவிட்டது.  ஆனால் உங்கள் புகார் உண்மை என்று நீங்கள் நிரூபிக்கவில்லையென்றால் உங்களுக்கு ஓராண்டு சிறைத்தண்டனை கிடைக்கும். புகார் செய்ய நீங்க தயாரா?
அவங்கயெல்லாம் என்ன நம்மை போன்று மாங்காயா அல்லது பழமா?


Friday, 20 December 2013

நாம் மாங்காயா இல்லை (வாழைப்)பழமா?

போன முறை ஆட்சியில் இருக்கும் போது பிடித்த எண் 9.
ஆனால் இம்முறை பிடித்தது 7ஆம் எண்.
அப்போ 40 இடங்களில் எப்படி போட்டியிடுவது?
34, 25, 16 அல்லது 7-ல் அல்லவா போட்டியிடவேண்டும்?
அல்லது தமிழகத்தை 43 தொகுதிகளாக்கப்பட்ட பின் போட்டியிடவேண்டும்.
இப்படிக்கு
நாங்க அப்பவே அப்படி, இப்ப...? குழுவினர்
மற்றும்
ஏழறை மட்டுமே பிடித்த மாக்கள்

உலகிலேயே கணணி மென்பொருட்கள் தயாரிப்பில் முக்கிய இடத்தில் இருப்பவர்கள் இந்தியர்கள், அதிலும் குறிப்பாக தமிழர்கள்.  அப்படி இருக்கும்போது கடந்த இரண்டு ஆண்டுகளாக ஒரு ரேஷன் கார்ட் renewal பண்ண முடியாமல் காலம் தாழ்த்துகிறது தமிழக அரசு.  இதுவும் மத்திய அரசின் சதித்திட்டமாக இருக்கமோ?
இப்படிக்கு
ஒரு அதிமுக மாங்கா

கணவருக்கு எம் ஆர் ஐ ஸ்கேன் செய்வதற்காக மரத்தான் ஓட்டத்தில் கலந்து ரூபாய் ஐந்தாயிரம் பரிசை தட்டிச்சென்ற அறுபத்தியாறு வயது லட்சியப்பெண். நாம எல்லாம் வலைத்தளங்களில் ஸ்டேடஸ் அப்டேட் செய்யவும் லைக் போடவுமே பிறந்தவர்கள்.  எனவே நாங்கள் மாங்காவும் இல்லை (வாழைப்)பழமுமில்லை.  களிமண்கள்!

அமலாகிறது கஸ்தூரிரங்கன் அறிக்கை: நடவடிக்கையை துவக்கியது மத்திய அரசு - இது தினமலர் செய்தி
கஸ்தூரிரங்கன் குழு பரிந்துரைக்கான ஒப்புதல் ரத்து - இது தி இந்து செய்தி
யாருக்கு எது வேணுமோ அதை எடுத்துக்கொள்ளவும்.  அனைத்துதரப்பு மக்களையும் திருப்திபடுத்துவது "ஊடகத்துறை"
இப்படிக்கு
நான் படித்ததே சரி என்று வாதாடுவோர் சங்கம்

Thursday, 19 December 2013

நாம் மாங்காயா இல்லை (வாழைப்)பழமா? பகுதி2

தமிழகத்திற்கு பாதகமான மத்திய அரசை தூக்கியெறிய வேண்டும்!
பக்கத்திலுள்ள சீனா போன்ற பெரிய நாடுகள் மட்டுமின்றி மியான்மர் போன்ற சிறிய நாடுகளின் மிரட்டலைகூட சமாளிக்க முடியாத மத்திய அரசை தூக்கியெறியவேண்டும்!
கடந்த இரண்டரை ஆண்டுகளில் தன் தலைமையில் தமிழகத்தில் நடக்கும் நல்லாட்சி செய்த ஏறாளமான சாதனைகளை பட்டிதொட்டியெங்கும் பரப்பினால் அடுத்த தேர்த்தலில் இந்த மத்திய அரசை தூக்கியெறியமுடியும் என்று அதிமுக பொதுக்குழுவில் பேசிய முதல்வர் ஜெயலலிதா கடைசியாக அதிமுக செங்கோட்டை அடைவதை யாராலும் தடுக்க முடியாது என்றும் சூளுரைத்துள்ளார்.  இப்போது மீண்டும் தலைப்பை வாசித்துக்கொள்ளுங்கள்!

உலகிலுள்ள நாடுகளில் சிங்கப்பூர் என்பது பாதுகாப்பு விஷயத்தில் முக்கிய இடம் பிடித்துள்ள நாடு.  நாம் ஒரு நாட்டுக்கு சென்றால் அந்த நாட்டின் விதிமுறைகளை கண்டிப்பாக பின்பற்றவேண்டும்.  ஒருவர் விபத்தில் மரணமடைந்தார் என்றால் அதில் தவறிழைத்தவருக்கு கண்டிப்பாக தண்டனை கிடைக்கவேண்டும் என்பதில் மாற்றுக்கருத்து கிடையாது.  ஆனால் சினிமாவையும் மதுவையும் வாழ்க்கையாக கொண்ட நாம் செய்த கலவரத்தால் ஐம்பத்திரண்டு பேர்களை சிங்கப்பூர் தாய் நாட்டிற்கு திருப்பியனுப்புகிறது.  பிழைக்கச்சென்ற இடத்தில் நமக்கு இதெல்லாம் தேவையா? நாம் மாங்காயா இல்லை (வாழைப்)பழமா?

ஏற்கனவே ஏகப்பட்ட சட்ட விதிமுறைகள் இருந்தும் லோக்பால் வந்துவிட்டால் யாருமே தவறிழைக்கமாட்டார்கள் என்று நம்பும் நாம் மாங்காயா இல்லை (வாழைப்)பழமா?

Wednesday, 18 December 2013

நாம் மாங்காயா இல்லை (வாழைப்)பழமா? பகுதி1

கடந்த செப்டம்பர் 9ஆம் தேதி அன்னை அமேரிக்க ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற அனுமதிக்கப்பட்ட போது அங்கேயே SFJ போட்ட வழக்கில் சம்மன் கொடுக்கப்பட்டது.  அப்போதே தில்லாலங்கடி செய்து எஸ்ஸாகி வந்துவிட்டார். இப்போது மூன்று நாட்களுக்கு முன், அதாவது 16 டிஸம்பரில் மீண்டும் அந்த கேஸில் உடனடியாக ஜனவரி 2ஆம் தேதிக்குள் பதிலளிக்கும்படி அமேரிக்க கோர்ட் மீண்டும் கேட்டுக்கொண்டதை அடுத்து உடனடியாக களத்தில் குதித்த இந்திய அரசு, தேவ்யானி விவகாரத்தை ஊதி பெரிதுபடுத்திவருகிறது.  கடந்த பல நிகழ்வுகளில் முன்னாள் ஜனாதிபதிகளிலிருந்து பல முக்கிய பிரமுகர்களையும் அமேரிக்கா அவமானப்படுத்தியபோது ஏற்படாத வன்மம்/கோபம் இந்திய அரசுக்கும் நமது மீடியாவுக்கும் இப்போது மட்டும் ஏன்?  (இங்கு மீண்டும் தலைப்பை ஒரு முறை வாசித்துக்கொள்ளவும்)

கடந்த வார இறுதியில் ஒரு கார் விபத்து ஏற்பட்டது.  இதில் இருவர் கொல்லப்பட்டனர்.  இது எந்த இந்திய செய்தித்தாள்களிலும் வரவில்லை. ஏனெனில் விபத்து ஏற்படுத்திய கார் இந்தியாவின் மிகப்பெரிய புள்ளிக்கு சொந்தமானது என்பதால்.  ரிலையன்ஸ் போர்ட் & டெர்மினல்ஸ் லிட். எனும் நிறுவனத்தின் பெயரில் பதிவு செய்யப்பட்ட அந்த வாகனத்தை அன்று ஓட்டியது அந்நிறுவனத்தின் ஒரு தொழிலாளி தான்தான் என்று ஒரு ஆடு போலீஸில் சரணடைந்துள்ளது.   (இங்கு மீண்டும் தலைப்பை ஒரு முறை வாசித்துக்கொள்ளவும்)

ஆம் ஆத்மி பார்ட்டி என்பதன் உண்மையான அர்த்தம் ஆமாஞ்சாமி கட்சியா இல்லை "மாங்கா" மக்கா கட்சியா (आम = ஆம் = மாங்காய்) அல்லது பொது மக்கள் கட்சியா என்பது இன்னும் சில நாட்களில் தெரிந்துவிடும்.  அதுவரை மீண்டும் தலைப்பை ஒரு முறை வாசித்துக்கொண்டிருக்கவும்.

Tuesday, 10 December 2013

தமிழ் "படுத்தல்"

முன் டிஸ்கி :  இந்த பதிவில் உள்ள வேற்று மொழி வார்த்தைகள் எத்தனை என்பதை சரியாக பின்னூட்டத்தில் சொல்பவர்களுக்கு "தமிழ் பதிவர் சுடர்" என்ற பட்டம் தரப்படும்....

கரெக்ட்டா காலை ஏழு மணிக்கு அலாரம் அலறியதை தொடர்ந்து நான் எழுந்தேன். எழுந்ததும் எனது முதல் வேலை ப்ரஷ் செய்வது.  அது முடிந்ததும் வைஃப் ரெடியாக போட்டுக்கொடுக்கும் டீயை குடித்துதான் அவுட்சைட் போய் ஃப்ரீ ஆவது. இவையெல்லாம் முடிய ஒரு பதினைந்து நிமிடங்கள் ஆகிவிடும்.

பிறகு நியூஸ் பேப்பர் எடுத்துக்கொண்டு ஒரு அரை மணி நேரம் வாசித்துவிட்டு குளிக்க செல்வேன்.  குளிக்கும் போது எனக்கு சுடுதண்ணி கண்டிப்பாக தேவை. இளஞ்சூட்டில் சோப்பு போட்டு குளித்து டவல் கட்டிக்கொண்டு வெளியில் வந்து கண்ணாடியில் என்னையே பார்த்து "போடா மாதவா... நீ ரொம்பத்தான் அழகு" என்று என்னையே பாராட்டிக்கொண்டு இன்று என்ன ட்ரஸ் போடலாம் என்று எண்ணி எனக்கு பிடித்த டீஷர்ட் எடுத்து போட்டதுமே, உள்ளேயிருந்து ஒரு சத்தம். "என்னங்க... இன்னிக்கு மண்டே. நோ டீஷர்ட்.  ஒன்லீ ஃபார்மல்ஸ்" என்று ஒரு வார்னிங் வந்ததை கேட்டு "என்ன லைஃப்டா மாதவா இது?  நமக்கு பிடித்த டிரஸ்ஸைகூட போட முடியாமல்" என்று எனக்கு நானே சொல்லிக்கொண்டு இளம்பச்சையில் ஒரு ஷர்ட் எடுத்து போட்டுக்கொண்டு டக்-இன் செய்து வெளியில் வந்தால், அந்த குட்டி பிசாசு இருக்கே, அதாங்க அந்த பேய் பெத்ததுங்க... எம் பொண்ணு, "ராமராஜன் ரீஎன்ட்ரீ" என்று என் காதுபடவே சொல்லுதுங்க.  "மாதவா... எல்லாருக்கும் பொறாமைடா உன்ன பார்த்து" என்று மைண்ட் வாய்ஸ் சொல்றதை புரிந்து கொண்டு லேசாக எனக்குள் சிரித்துக்கொண்டேன்.

அடுத்து டிஃபன் சாப்பிட்டுவிட்டு ஆஃபிஸுக்கு கிளம்ப வேண்டியதுதான். என்னம்மா இன்னிக்கு டிஃபன் என்று கேட்டதற்கு "ஃப்ரிட்ஜில் ப்ரெட் இருக்கு எடுத்துக்குங்க" என்று பதில் வந்தது.   "ஏம்ப்பா அந்த இட்லி தோசைன்னெல்லாம் சொல்லுவாங்களே அதெல்லாம் உனக்கு தெரியாதா?" என்றால் "அதுக்கு பலகாரம் என்று சொல்லுவாங்க, அதானே?  அது விசேஷத்துக்கு செய்வது.  ஹீம்... நம்ம வீட்லேதான் எந்த எழவு விசேஷமும் நடப்பதில்லையே" என்று ஒரு பெருமூச்சு பதில் வந்தது.  "இதுக்கு மேலே எதாவது கேட்டால் இன்று நமக்குதான்டா மாதவா எழவு" என்று ப்ரெட் எடுத்து டமேட்டோ சாஸ் தடவிக்கொண்டிருந்த பதினைந்து செகண்டுக்குள் ஒரு ஆம்லெட்டோடு என் முன்னால் மனைவி ஆஜர்.  இதுதாங்க அவங்ககிட்டே எனக்கு பிடித்தது.  ஒரே நேரத்தில் மல்டிபிள் டாஸ்க்.  "தாங்க்ஸ்" என்று சொல்லி ஆம்லெட்டை பிரட்டுக்கு நடுவில் வைத்து வேகமாக சாப்பிட்டுவிட்டு ஷூ போடலாம் என்று பார்த்தால் அது பாலீஷ் இல்லாமல் "ங்கே" என்று என்னை பார்த்து இளித்தது.  சரி என்று வேகமாக ஷூவை பாலீஷ் போட்டுவிட்டு பார்த்தால் சாக்ஸை காணவில்லை.  மண்டே என்றாலே இதே அக்கப்போர்தான்.  "சாக்ஸ் எங்கேப்பா"ன்னு கேட்க வாய் திறக்கும் முன்பே "அதோ அங்கே டீபாயில் சாக்ஸ் இருக்கு எடுத்துக்கோங்க. அப்புறம் என்னையும் எங்கப்பாம்மாவையும் திட்டாதீங்க" என்று என் உள்மனதை அறிந்து ஒரு பதில் வந்தது.  "டேய் மாதவா... உன் பொண்டாட்டீ ரொம்ப நல்லவடா" என்று எனக்குள் கேட்கும் வாய்ஸ் உங்களுக்கும் கேட்குதா?

"ஓகே... அப்பா போய்ட்டு வரேன்டா" என்று பொண்ணுகிட்டே சொல்வது போல சொல்லிவிட்டு வைஃப பார்த்து "பாய்" என்று கண்ணாலேயே சொல்லிவிட்டு வெளியே வந்தால், தேவுடா! ரோடு பூரா டிரைனேஜ் பைப் லீக்காகி சாக்கடை தண்ணி.  எப்படியோ அட்ஜஸ்ட் பண்ணி, போய் பஸ் ஸ்டாப்லே நின்னா, ஒரு பஸ்ஸாவது ஸ்டாப்லே நின்னாதானே?  அதுக்குள்ளே ஏதோ ஆக்ஸிடெண்டாகி ஒரே ட்ராஃபிக் ஜாம்.  "என்னடா மாதவா... வாரத்தின் முதல் நாளிலேயே... அந்த மானேஜர் வேற... நாய் போல கத்துவானே" என்று மைண்ட்வாய்ஸ் சொல்ல, சரி ஆட்டோ புடிச்சு போய் சேருவோம் என்று ஒரு ஆட்டோவை நிறுத்தினால் "மீட்டருக்கு மேலே முப்பது ரூபா கொடு சார்" என்றவனை பார்த்து அப்படியே ஜகாவாங்கி பின்னாலே வந்த ஷேர் ஆட்டோவில் டிரைவருக்கு பக்கத்தில் உட்கார்ந்து ஆஃபீஸுக்கு பக்கத்திலிருந்த ஸ்டாப்பில் இறங்கி ஐம்பது ரூபாய் நோட்டை கொடுத்தேன். அதற்கு அந்த டிரைவர் "சார், பத்து ரூவா சேஞ்சா கொடு சார்" என்றவனை பார்த்து "சேஞ்ச் இல்லையேப்பா" என்று நான் சொல்ல, அவன் என்னை டாட்டாவுக்கும் பில்லாவுக்கும் பிறந்தேன் என்று ஏதேதோ தனக்குள் முணுமுணுத்தபடி மீதி சில்லரையை எனக்கு கொடுக்க, நான் ஆஃபீஸ் வாசலில் என்டர் ஆகும்போதே மானேஜர் கோபத்தில் கத்துவது கேட்டது. "மாதவா... இதெல்லாம் நமக்கு புதுசா?" என்று உள்மனம் சொல்ல, பென்னெடுத்து அட்டெண்டன்ஸில் கையெழுத்து போட்டு என் சீட்டில் அமர்ந்தேன்.