அரசு என்பது தன்னலமற்று பொதுநலத்துக்காக செயல்படக்கூடிய ஒரு அமைப்பு. அனால் இன்றைய அரசுகளோ குறுகிய சிந்தனைகளோடு ஒரு ஐந்தாண்டுகளில் தன்னால் முடிந்தளவு நாட்டை சூரையாடிவிட கிடைத்த வாய்ப்பாகவே கருதி செயல்படுகின்றன.
சில நூறு ஆண்டுகளுக்கு முன் வந்த முகலாயர்கள் குட்டி குட்டி ராஜ்ஜியங்களாக இருந்தவற்றை ஒன்றாக்கி அகண்ட பாரதத்தை படைத்தனர். பின்னர் வந்த ஆங்கிலேயர்கள் நம்மை அடிமைப்படுத்தி இங்கிருந்த வளங்களை கொண்டு சென்றனர். ஆனாலும் அவர்கள் இந்தியாவில் பலப்பல கட்டுமான வசதிகளை உருவாக்கித்தந்தனர் என்பதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை. நாட்டை விட்டு வெளியேறும் போது இந்தியாவை துண்டாக்கிவிட்டு, இனி இந்தியா எப்போதும் தனக்குள்ளே அடித்துக்கொண்டேயிருக்க வேண்டும் என்று ஒரு விதையையும் மிகவும் ஆழமாக ஊன்றிவிட்டு சென்றனர்.
விடுதலை அடைந்த இந்தியாவானது தன்னைத்தானே உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடாக முன்நிறுத்திக்கொண்டது. காலப்போக்கில் மத்தியிலும் மாநிலத்திலும் ஆள்பவர்களின் தகுதிகள் என்பது மிகவும் கேலிக்குறியதாகி போனது. பொதுநலம் என்பது காணாமல் போய் சுயநலம் மட்டுமே இப்போது எஞ்சியுள்ளது.
ஒரு காலத்தில் தனியார்வசம் இருந்த போக்குவரத்து துறை மிகவும் இலாபகரமாக நடைபெற்றுக்கொண்டிருந்தது. பின்னர் அரசு அத்துறையை அரசுடைமை ஆக்கியது. ஆனால் அதற்குபின் அது ஒரு ஊழல் நிறைந்த, நஷ்டத்தில் இயங்கும் துறையானது. அதே போல அரசு நூற்பாலைகளில் தன் கை வைத்தது. எவ்வளவு சுட்டுக்கொள்ள வேண்டுமோ அவ்வளவு காயம் ஏற்படுத்திக்கொண்டது. இவை சில உதாரணங்கள் மட்டுமே! இதே போல அனைத்து துறைகளும் வீழ்ந்தே கிடக்கின்றன.
பொதுவாக நாம் ஒரு தொழில் செய்தால் அதை நிச்சயமாக லாபத்திற்காகவே செய்வோம். தொழில் நஷ்டத்திலோ அல்லது போதிய அளவு லாபமோ இல்லாதபட்சத்தில் நிச்சயமாக நாம் அதை சீர்படுத்த எண்ணுவோம் அல்லது அத்தொழிலை தலைமுழுகிவிட்டு உருப்படியாக ஏதாவது வேறு வேலை செய்ய சென்றுவிடுவோம். ஆனால் அரசு என்பது அப்படி செய்யாது அல்லது செய்யவும் கூடாது. ஆனால் அதே நேரத்தில் செய்பவற்றை தெளிவாக செய்ய வேண்டாமா? நம் நாட்டில் என்ன குறை உள்ளது? மெத்தப்படித்தவர்களுக்கு குறையா இல்லை மனித வளம்தான் குறைவாக உள்ளதா அல்லது மற்ற வளங்கள்தான் குறைவாக உள்ளனவா இல்லையென்றால் கட்டுமான வசதிகளில்தான் குறைச்சலா? என்னை பொருத்தவரையில் ஆள்பவர்களின் மனநிலையிலும் எண்ணங்களிலும்தான் குறை தெரிகிறது.
கல்வி சுகாதாரம் விவசாயம் போன்ற துறைகளை இப்போது அரசாங்கம் தன்னால் நடத்த முடியாமல் தனியாரிடம் ஒப்படைக்கிறது. சுதந்திரம் அடைந்து 65 ஆண்டுகள் கழிந்தும் நம்மால் ஒரு முடிவுக்கு வர முடியாமல், தனியாரிலிருந்து பொதுத்துறையென்றும் பின் மீண்டும் தனியார்வசம் என்றும் அரசு குழப்பிக்கொண்டிருக்கிறது. எந்தக்கட்சி ஆட்சிக்கு வந்தாலும் ஊழல் துறை மட்டுமே முன்னேறி வருகிறது. கடைசியில் இப்போது இத்துறை அரசியல் வாதிகளிடமிருந்து சாதாரண மக்கள் வரை பரவிவிட்டது. இப்போது மக்களும் தெளிந்துவிட்டார்கள் என்றே சொல்லவேண்டும். ஒவ்வொரு தேர்தலின்போதும் பணம் அல்லது பொருள் பெற்றுக்கொண்டே வாக்கு அளிக்கின்றனர். நல்ல வளர்ச்சிதான்!
என்னுடைய குறையெல்லாம் ஒன்றே ஒன்றுதான். டாஸ்மாக்-ல் மட்டும் இலக்கு வைத்து லாபம் பார்க்க முடிகின்ற அரசால் ஏன் கல்வி சுகாதாரம் மற்றும் விவசாயம் போன்ற துறைகளில் வெற்றிகரமாக செயல்பட முடிவது இல்லை?
சில மாதங்களுக்கு முன் சத்தியமே ஜயதே எனும் நிகழ்ச்சியில் ஒரு ரூபாய்க்கான மாத்திரை, முப்பது ரூபாய் முதல் 300 ரூபாய் வரை விற்பதாக சொல்லப்பட்டது. மருந்துகளின் விலையை கட்டுப்படுத்தி அதை அனைவருக்கும் கிடைக்கச்செய்ய முடியவில்லையென்றால் பின் அந்த சுகாதாரத்துறை இருந்து என்ன பயன்?
திரு சகாயம் சொல்வது போல ஒரு நாள் முழுவதும் துணி நெய்யும் நெசவாளிக்கு ஒரு நாள் கூலியாக 75 ரூபாய் கிடைக்கிறது. அதை கவனிக்கும் துறையில் வேலைபார்ப்பவர்களுக்கு ரூபாய் 300 முதல் 3000 வரை ஒரு நாள் சம்பளம். அது போக லஞ்சம் தனி. நெசவாளர்களுக்கு வாரியம் அமைத்து அதில் சுருட்டியவர்கள் எத்தனை எத்தனை பேர்?
நாட்டில் கருப்புப்பணம் என்பது நாளொருமேனியும் பொழுதொரு வண்ணமுமாய் அதிகரித்துக்கொண்டே செல்லும் போது, வருமான வரித்துறையை இழுத்து மூடிவிட வேண்டியதுதானே? பாவம் மாதச்சம்பளம் வாங்குபர்களாவது நிம்மதியாக இருப்பார்கள்.
வேற்றுமையில் ஒற்றுமையை காணும் நாம் ஏன் பயன்படுத்தும் தண்ணீருக்காக வேறுபட்டு இருக்கின்றோம்?
சாதிகளில்லையடி பாப்பா என்று முழங்கிய பாரதியை மறந்து இன்று ஜாதிகளை கணெக்கெடுத்தால் வரும் விழுக்காடு நூறைத்தாண்டுகிறதேன்? சுதந்திரமடைந்த இந்த 65 ஆண்டுகளில் ஜாதிகளை வளர்த்தல்லவா இருக்கின்றோம்.
விவசாயிகளின் தற்கொலைகள், பெண்கள்/குழந்தைகளுக்கான பாதுகாப்பின்மை, குழந்தை தொழிலாளிகள், மின்சாரம், குடிக்க நல்ல தண்ணீர் இல்லாமை என்று பிரச்சனைகள் ஆயிரம் இருக்கும்போது சாராயத்திற்கு மட்டும் இலக்கு நிர்ணயித்து அரசு கல்லா கட்டுகிறது. ஒரு காலத்தில் ராஜாஜி வரி அறிமுகப்படுத்திய போது அரசு நலத்திட்டங்களுக்கு நிதி திரட்டவே, வரி விதிக்கப்படுகிறது என்று கூறி வழிகாட்டினார். இப்போதும் சாராயம் விற்பதில் வரும் வருமானம் இல்லையெனில் அரசு நடத்துவது இயலாத காரியம் என்று மக்களை ஏமாற்றுகின்றனர். எந்த போதையாக இருந்தாலும் அது கேட்டையே விளைவிக்கும். ஆனால் இன்றோ நம் நாட்டு மக்கள் மதுவின் போதையில் சிக்கி சீரழிந்துக்கொண்டுள்ளனர்.
நாம் எப்போது தலை நிமிர்ந்து நடப்பது?
மது இல்லாமல் புத்தாண்டை இனிதே கொண்டாடுவோம்.
இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.
No comments:
Post a Comment