Tuesday, 10 December 2013

தமிழ் "படுத்தல்"

முன் டிஸ்கி :  இந்த பதிவில் உள்ள வேற்று மொழி வார்த்தைகள் எத்தனை என்பதை சரியாக பின்னூட்டத்தில் சொல்பவர்களுக்கு "தமிழ் பதிவர் சுடர்" என்ற பட்டம் தரப்படும்....

கரெக்ட்டா காலை ஏழு மணிக்கு அலாரம் அலறியதை தொடர்ந்து நான் எழுந்தேன். எழுந்ததும் எனது முதல் வேலை ப்ரஷ் செய்வது.  அது முடிந்ததும் வைஃப் ரெடியாக போட்டுக்கொடுக்கும் டீயை குடித்துதான் அவுட்சைட் போய் ஃப்ரீ ஆவது. இவையெல்லாம் முடிய ஒரு பதினைந்து நிமிடங்கள் ஆகிவிடும்.

பிறகு நியூஸ் பேப்பர் எடுத்துக்கொண்டு ஒரு அரை மணி நேரம் வாசித்துவிட்டு குளிக்க செல்வேன்.  குளிக்கும் போது எனக்கு சுடுதண்ணி கண்டிப்பாக தேவை. இளஞ்சூட்டில் சோப்பு போட்டு குளித்து டவல் கட்டிக்கொண்டு வெளியில் வந்து கண்ணாடியில் என்னையே பார்த்து "போடா மாதவா... நீ ரொம்பத்தான் அழகு" என்று என்னையே பாராட்டிக்கொண்டு இன்று என்ன ட்ரஸ் போடலாம் என்று எண்ணி எனக்கு பிடித்த டீஷர்ட் எடுத்து போட்டதுமே, உள்ளேயிருந்து ஒரு சத்தம். "என்னங்க... இன்னிக்கு மண்டே. நோ டீஷர்ட்.  ஒன்லீ ஃபார்மல்ஸ்" என்று ஒரு வார்னிங் வந்ததை கேட்டு "என்ன லைஃப்டா மாதவா இது?  நமக்கு பிடித்த டிரஸ்ஸைகூட போட முடியாமல்" என்று எனக்கு நானே சொல்லிக்கொண்டு இளம்பச்சையில் ஒரு ஷர்ட் எடுத்து போட்டுக்கொண்டு டக்-இன் செய்து வெளியில் வந்தால், அந்த குட்டி பிசாசு இருக்கே, அதாங்க அந்த பேய் பெத்ததுங்க... எம் பொண்ணு, "ராமராஜன் ரீஎன்ட்ரீ" என்று என் காதுபடவே சொல்லுதுங்க.  "மாதவா... எல்லாருக்கும் பொறாமைடா உன்ன பார்த்து" என்று மைண்ட் வாய்ஸ் சொல்றதை புரிந்து கொண்டு லேசாக எனக்குள் சிரித்துக்கொண்டேன்.

அடுத்து டிஃபன் சாப்பிட்டுவிட்டு ஆஃபிஸுக்கு கிளம்ப வேண்டியதுதான். என்னம்மா இன்னிக்கு டிஃபன் என்று கேட்டதற்கு "ஃப்ரிட்ஜில் ப்ரெட் இருக்கு எடுத்துக்குங்க" என்று பதில் வந்தது.   "ஏம்ப்பா அந்த இட்லி தோசைன்னெல்லாம் சொல்லுவாங்களே அதெல்லாம் உனக்கு தெரியாதா?" என்றால் "அதுக்கு பலகாரம் என்று சொல்லுவாங்க, அதானே?  அது விசேஷத்துக்கு செய்வது.  ஹீம்... நம்ம வீட்லேதான் எந்த எழவு விசேஷமும் நடப்பதில்லையே" என்று ஒரு பெருமூச்சு பதில் வந்தது.  "இதுக்கு மேலே எதாவது கேட்டால் இன்று நமக்குதான்டா மாதவா எழவு" என்று ப்ரெட் எடுத்து டமேட்டோ சாஸ் தடவிக்கொண்டிருந்த பதினைந்து செகண்டுக்குள் ஒரு ஆம்லெட்டோடு என் முன்னால் மனைவி ஆஜர்.  இதுதாங்க அவங்ககிட்டே எனக்கு பிடித்தது.  ஒரே நேரத்தில் மல்டிபிள் டாஸ்க்.  "தாங்க்ஸ்" என்று சொல்லி ஆம்லெட்டை பிரட்டுக்கு நடுவில் வைத்து வேகமாக சாப்பிட்டுவிட்டு ஷூ போடலாம் என்று பார்த்தால் அது பாலீஷ் இல்லாமல் "ங்கே" என்று என்னை பார்த்து இளித்தது.  சரி என்று வேகமாக ஷூவை பாலீஷ் போட்டுவிட்டு பார்த்தால் சாக்ஸை காணவில்லை.  மண்டே என்றாலே இதே அக்கப்போர்தான்.  "சாக்ஸ் எங்கேப்பா"ன்னு கேட்க வாய் திறக்கும் முன்பே "அதோ அங்கே டீபாயில் சாக்ஸ் இருக்கு எடுத்துக்கோங்க. அப்புறம் என்னையும் எங்கப்பாம்மாவையும் திட்டாதீங்க" என்று என் உள்மனதை அறிந்து ஒரு பதில் வந்தது.  "டேய் மாதவா... உன் பொண்டாட்டீ ரொம்ப நல்லவடா" என்று எனக்குள் கேட்கும் வாய்ஸ் உங்களுக்கும் கேட்குதா?

"ஓகே... அப்பா போய்ட்டு வரேன்டா" என்று பொண்ணுகிட்டே சொல்வது போல சொல்லிவிட்டு வைஃப பார்த்து "பாய்" என்று கண்ணாலேயே சொல்லிவிட்டு வெளியே வந்தால், தேவுடா! ரோடு பூரா டிரைனேஜ் பைப் லீக்காகி சாக்கடை தண்ணி.  எப்படியோ அட்ஜஸ்ட் பண்ணி, போய் பஸ் ஸ்டாப்லே நின்னா, ஒரு பஸ்ஸாவது ஸ்டாப்லே நின்னாதானே?  அதுக்குள்ளே ஏதோ ஆக்ஸிடெண்டாகி ஒரே ட்ராஃபிக் ஜாம்.  "என்னடா மாதவா... வாரத்தின் முதல் நாளிலேயே... அந்த மானேஜர் வேற... நாய் போல கத்துவானே" என்று மைண்ட்வாய்ஸ் சொல்ல, சரி ஆட்டோ புடிச்சு போய் சேருவோம் என்று ஒரு ஆட்டோவை நிறுத்தினால் "மீட்டருக்கு மேலே முப்பது ரூபா கொடு சார்" என்றவனை பார்த்து அப்படியே ஜகாவாங்கி பின்னாலே வந்த ஷேர் ஆட்டோவில் டிரைவருக்கு பக்கத்தில் உட்கார்ந்து ஆஃபீஸுக்கு பக்கத்திலிருந்த ஸ்டாப்பில் இறங்கி ஐம்பது ரூபாய் நோட்டை கொடுத்தேன். அதற்கு அந்த டிரைவர் "சார், பத்து ரூவா சேஞ்சா கொடு சார்" என்றவனை பார்த்து "சேஞ்ச் இல்லையேப்பா" என்று நான் சொல்ல, அவன் என்னை டாட்டாவுக்கும் பில்லாவுக்கும் பிறந்தேன் என்று ஏதேதோ தனக்குள் முணுமுணுத்தபடி மீதி சில்லரையை எனக்கு கொடுக்க, நான் ஆஃபீஸ் வாசலில் என்டர் ஆகும்போதே மானேஜர் கோபத்தில் கத்துவது கேட்டது. "மாதவா... இதெல்லாம் நமக்கு புதுசா?" என்று உள்மனம் சொல்ல, பென்னெடுத்து அட்டெண்டன்ஸில் கையெழுத்து போட்டு என் சீட்டில் அமர்ந்தேன்.

3 comments:

  1. நீங்க நம்பினாலும் நம்பாவிட்டாலும் இது போன்று நான் பதிவு எழுத வேண்டும் என்று நினைத்து இருந்தேன்.

    ReplyDelete
  2. ஆங்கில வார்த்தையை எண்ணவில்லை.ஆனால் சிரிப்பாக இருந்தது.
    நன்றி சகோ..!

    ReplyDelete