Thursday, 18 December 2014

அஞ்சலி


உங்கள் வழக்குகளின்
தீர்ப்பினை ஏன் பூக்களிடம்
படிக்கிறீர்கள் தீவிரவாதிகளே...?
உங்கள் யுத்தங்களை மேற்கில்
வைத்துக் கொண்டு.. ஏன்
கிழக்கு நோக்கி குண்டெறிகிறீர்கள்...?

ப்ரியத்தை விதைக்கச் சொன்ன
வழிமுறையைகளை கையிலேந்திக் கொண்டு
நீங்கள் ரத்த சகதியில் சிறு பிள்ளைகளின்
இதயங்களை நட்டுக் கொண்டிருக்கிறீர்களே
இது என்ன நியாயம்...?

கடவுளை வழிபடுவதாய்ச்
சொல்லிக் கொண்டு...
சைத்தானுக்கு கைங்கர்யம்...
செய்து கொண்டிருக்கிறீர்களே மனிதர்களே...
வெட்கமாயில்லை உங்களுக்கு...?

பாலகர்களின் ரத்தம் குடிக்கின்ற உங்களுக்கு
அப்பாவிகளின் உயிரை யுத்தமென்ற பெயரில்
நித்தம் பறித்தெடுக்கும் உங்களுக்கு
எந்த சுவர்க்கத்தின் கதவுகள் திறக்குமென்று
கனவு காண்கிறீர்கள்...சைத்தானின் சைதன்யங்களே...?

நரகத்தின் நெருப்பிலிட்டாலும் பொசுங்காத
இதயம் கொண்ட நயவஞ்சகர்களே...
நரகத்தின் கதவுகூடத் திறக்காது
என்பது உங்களுக்குத் தெரியுமா?

எந்த தீர்க்கதரிசிகளாலும் உரைக்கப்படாததை
எந்தக் கற்பனைக் கடவுளர்களும்
பொய்யாகக் கூட கைக்காட்ட முன் வராத
அழுகிப் போன சித்தாந்தங்களை
எங்கிருந்து பெற்றீர்கள் பிசாசுகளே...?

பூமியைக் குழிதோண்டி புதைத்து விட்டு
எந்த கிரகத்தில் வாழப் போகிறீர்கள்...
சித்தாந்தங்களை ஏந்திப் பிடித்திருக்கும்....
சைத்தானின் சித்திரங்களே...?

சித்தாந்தங்களின் பெயரால், கொள்கைகளின் பெயரால், ஆதிக்க உணர்வின் பெயரால், கொலைகள் செல்லும் அமைப்புகள், தேசங்கள்....மனிதர்கள் அத்தனை பேரையும் ஒழிந்தே போகட்டும்...

அடுத்த தலைமுறைகளை அரவணைத்துச் செல்ல வேண்டிய மனிதர்களே...அவர்களை கொன்றழிக்கும் கொடுமையை, வலியை அதனால் ஏற்படும் வேதனையை எப்படி பதிவு செய்வதென்றே தெரியவில்லை....
மனிதர்களுக்கான பூமில் மனிதம் மட்டுமே முன்னிறுத்தப்பட வேண்டும்.

மனித நேயத்தை முன் வைத்து நகரமுடியாத சித்தாந்தங்களை நவீன காலத்தின் மானுடர்கள் தங்களின் ஞானத்தால் எரித்து போட்டு அன்பு நிறைந்த பூமியை உருவாக்க முன் வரவேண்டும்...!!!!!

பாகிஸ்தானில் கொல்லப்பட்ட பிஞ்சுகளுக்கு எனது அஞ்சலிகள்...!!!!


கதை சொல்கிறேன், கேளுங்க!

பொதுவாக ஒரு கதை சொல்லுவாங்க!

ஒரு ஊர்லே ஒரு ராஜா இருந்தானாம்.  அவன்மிகவும் கொடுங்கோலனாக ஆட்சி புரிந்துவந்தான்.  மக்கள் மீது அனைத்துவிதமான துயரங்களையும் செய்துக்கொண்டிருந்தான்.  ஒரு நாள் உடல்நிலைகுன்றி படுத்த படுக்கையாகி உயிர் பிரிகின்ற நேரத்தில் தன் மகனை அழைத்து அவனுக்கு பட்டம் சூட்டிவிட்டு “மகனே! என்னை இந்த நாட்டு மக்கள் நல்ல அரசன் என்று கூற வேண்டும்.  அப்படி நீ நடந்துகொள்ள வேண்டும்” என்று கூறி இறந்துவிடுகின்றான்.  புதிய அரசனாக தேர்வு பெற்ற மகன் யோசித்து ஒரு முடிவு செய்கிறான்.  “நாட்டில் தினமும் பத்து பேரை கொல்வது” என்பதே அவன் எடுத்த முடிவு.  சில நாட்களிலேயே மக்கள் அனைவரும் “இந்த ராஜாவுக்கு பழைய ராஜாவான இவனுடைய அப்பன் எவ்வளவோ நல்லவன்” என்று கூறலாயினர்.

இந்த கதையைதான் இன்று நடக்கும் மத்திய ஆட்சி நினைவுபடுத்துகிறது.  கடந்த தேர்த்தலில் பிரசாரம் செய்த பாஜக-வானது குஜராத்தில் பாலாறும் தேனாறும் ஓடிக்கொண்டிருக்கிறது.
மோடி பிரதமரானால் அந்த ஆறுகளெல்லாம் இந்தியா முழுவதும் ஓடச்செய்வோம்....
தாங்கள் அனைத்து மதத்தினருக்கும் பொதுவானவர்கள்....
ந்த மதச்சார்பாகவும் குஜராத்தில் ஆட்சி செய்யவில்லை என்று கோர்ட் தீர்ப்பு வாயிலாகவும் ஊடகப் பிரசாரங்கள் மூலமும் உறுதியளித்தும் வாக்கு சேகரித்தனர்.  

மேலும் ஆட்சி அமைக்கும்பட்சத்தில் வெளிநாட்டிலிருக்கும் கருப்புப் பணத்தை இந்தியா கொண்டு வந்து, ஒவ்வொரு தனிநபருக்கும் ரூ பதினைந்து இலட்சங்களை தருவோம்!  ஆதார் அட்டை என்பது சுத்த மோசடி திட்டம்.  இதன் மூலம் ஒவ்வொரு இந்தியனின் தனிப்பட்ட விவரங்களை அமேரிக்கா சேகரிப்பதை தடுப்போம்!  டீசல் பெட்ரோல் விலையை கச்சா எண்ணெய் விலையை கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சிக்கு ஏற்ப குறைப்போம்!  கடந்த ஐமு ஆட்சியில் ஊழல் மலிந்துவிட்டது!  விலைவாசி உயர்ந்துவிட்ட்து!  தொழில் வளர்ச்சி இல்லை!  நிர்வாகம் சீர்கெட்டுவிட்டது! என்றெல்லாம் முழங்கி ஓட்டு வாங்கி, தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அதிகாரத்தில் அமர்ந்துவிட்டு, கடந்த ஆறு மாதங்களாக தங்களுக்கு ஓட்டளித்த மக்களே வெட்கி தலை குனியுமளவுக்கு நடந்து கொள்கின்றனர்.

   தேசத்தந்தை மகாத்மா காந்தியை கொன்ற கோட்சே ஒரு தேசியத்தலைவன் என்றது
·         காந்தி ஜெயந்தியன்று அனைவரும் அலுவலகத்திற்கு வந்து கக்கூஸ் கழுவவேண்டும் என்ற அறிவிப்பு
·         தாங்கள் ஆர் எஸ் எஸ்-சினால் வளர்க்கப்பட்டவர்கள் என்பதில் பெருமையடைகிறேன் என்று பாராளுமன்றத்திலேயே வெங்கையா நாயுடு மூலமாக அறிவிப்பு செய்வது
·         சமஸ்கிருதத்தை பள்ளிகளில் கட்டாயமாக்க நினைப்பது, ஹிந்தியை வலுக்கட்டாயமாக திணிப்பது
·         பகவத் கீதையை தேசிய நூலாக்க நினைப்பது
·         “ஈஷ்வர் அல்லாஹ் தேரோநாம்” என்று கூறிக்கொண்டே ஆதார் அட்டைக்காகவும் ரேஷன் கார்டுக்காகவும் கட்டாய மதமாற்றம் செய்வது 

·         தாஜ்மஹால் கோயிலிடத்தில் கட்டப்பட்டது என்று கூறி மற்றுமொரு “இடிப்பு” விழாவுக்கு(?) அச்சாரம் போடுவது
·         சுதந்திர இந்தியாவில் எந்த அரசும் யாருக்கும் காட்டாத ஒரு சலுகையை அதானிக்கு கொடுத்து, இந்தியப் பணத்தை ஆஸ்திரேலிய சுரங்கங்களில் கொட்டியது
·         கச்சா எண்ணெய் விலை கடந்த ஆறு மாதங்களில் பேரல் 110 டாலரில் இருந்து 60 டாலராக, கிட்டத்தட்ட 40% குறைந்தும் பெட்ரோல் டீசல் விலையை வெறும் 10% அளவில் மட்டும் குறைத்துவிட்டு, அதன் கலால் வரியை உயர்த்தியது 

·         ஏப்ரல் 2015 முதல் ரேஷன் கடைகளில் மண்ணெண்ணை முழுவதுமாக நிறுத்தும் உத்தரவு பிறப்பித்தது
·         க்றிஸ்மஸுக்கு பள்ளிகளுக்கு விடுமுறை கிடையாது என்று ஒரு புது வெடியை கொளுத்திப்போட்டது
·         டிசம்பர் 25 அன்று 4000 கிறிஸ்துவர்களையும் 1000 முஸ்லிம்களையும் மதமாற்றம் செய்யப்போகிறோம் என்று அறிவித்தது
...... இப்படி சொல்லிக்கொண்டே போகலாம்.

உங்களுக்கு ஓட்டளித்தவர்கள் ஏமாளிகளாகவே இருந்துவிடுவார்கள் என்று எண்ணிக்கொண்டிருக்காதீர்கள்.  உங்களுக்கு அளிக்கப்பட்ட ஐந்து ஆண்டு அவகாசத்தில் முதல் ஆறு மாதங்களிலேயே
“பழைய ஆட்சியே எவ்வளவோ மேல்”
என்று மக்கள் எண்ண ஆரம்பித்துவிட்டனர் என்பதை இன்றைய ஆட்சியாளர்களே மறந்துவிடாதீர்கள்!!!


Sunday, 18 May 2014

டெல்லி சட்டசபை தேர்தலில் கெஜ்ரிவால் பெற்ற வெற்றிக்கு சமமானது மோடியின் பாராளுமன்ற தேர்தல் வெற்றி

கடந்த சில மாதங்களுக்கு முன் டெல்லி சட்டசபைக்கு நடந்த தேர்தலில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை.  நீண்ட இழுபறிக்குப்பின் ஆம் ஆத்மி கட்சி, ஆட்சி அமைக்க கவர்னர் அழைப்பை கெஜ்ரிவால் ஏற்று டில்லியின் முதல்வரானார்.

எப்படி டெல்லியின் முதல்வருக்கு, டெல்லி காவல்துறையை சேர்ந்த ஒரு ஏட்டை பணி நீக்கவோ, பணியிடை நீக்கவோ அதிகாரமில்லையோ....
லோக்பால் சட்டத்தை இயற்ற முடியவில்லையோ....இதே நிலைதான் மோடிக்கும் இந்த தேர்தல் வெற்றி கொடுக்கப்போகிறது.

பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் வெளிவந்து, வெற்றிக்களிப்பில் திளைத்திறுக்கும் பிஜேபியினர் ஒரு விஷயத்தை புரிந்துகொள்ளவில்லை. ஏன் கெஜ்ரிவால் பதவியேற்ற ஐம்பது நாட்களுக்குள் முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார்?

நம் சட்டவிதிகளின் 'விதி' அப்படி.

கடந்த இருபத்தைந்து ஆண்டுகளாக பாராளுமன்றத்தில் எந்த கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை கிடையாது.  பிச்சைக்காரன் வாந்தி போல, சேர்ந்தவர் அனைவரும் பதவிக்கு ஆசைப்பட்டனரே தவிர, கொள்கைகளுக்கோ... நாட்டு வளர்ச்சிக்கோ... வறுமை ஒழிப்பிற்கோ கவலைப்படவில்லை.  இந்நிலையில் மோடியின் தலைமையில் பிஜேபி தனிப்பெரும்பான்மையை இந்த தேர்தலில் பெற்றிருக்கிறது.  ஆனால் இதனால் ஏதாவது பிரயோஜனம் மோடிக்கோ, பிஜேபிக்கோ அல்லது நாட்டுக்கோ கிடைக்குமா என்றால், இல்லையென்பதே நிதர்சனம்.

ஏனெனில் நம் அரசியலமைப்பின்படி எந்தவொரு கொள்கை முடிவும் நாடாளுமன்றத்தில் முன்மொழிந்து வாக்கெடுப்பில் வெற்றி பெற வேண்டும். இதற்கு பாராளுமன்றத்தில் பிஜேபி கட்சியின் உறுப்பினர்கள் எண்ணிக்கை கை கொடுக்கும்.  சந்தேகமில்லை.  இதற்குபின் அந்த கொள்கை முடிவு ராஜ்யசபா எனும் மேலவையில் முன்மொழியப்பட்டு அங்கேயும் வாக்கெடுப்பில் வெற்றிபெற வேண்டும்.  அதற்கும் பிறகு ஜனாதிபதியின் ஒப்புதல் பெற்ற பின்னரே அந்த கொள்கை முடிவு சட்டமாக அறிவிக்கப்படும்.

எனவே பாராளுமன்றத்தில் இருபத்தைந்தாண்டுக்கு பிறகு தனிப்பெரும்பான்மை பெற்ற மோடியின் பிஜேபி அரசானது எடுக்கும் எந்தவொரு முடிவும் ராஜ்ய சபாவில் வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு மிகமிக குறைவு.  கடந்த ஆட்சியில் மொத்தமுள்ள 250 உறுப்பினர்களில் காங்கிரஸ் கூட்டணிக்கு 107 உறுப்பினர்கள் மட்டுமே இருந்ததால் ஒவ்வொரு முறையும் வாக்கெடுப்பின்போது எவ்வளவு அமளி ஏற்பட்டது? இப்போது பிஜேபி கூட்டணிக்கு மேலவையில் வெறும் 67 உறுப்பினர்களே இருப்பதால் வாக்கெடுப்பில் வெற்றி என்பது முடியாத ஒன்று.

அதாகப்பட்டது, மோடி என்ன செய்ய முயற்சித்தாலும் கடைசியில் அவருக்கும் அவர் சார்ந்த கட்சிகளுக்கும் மிஞ்சப்போவது ஏமாற்றமும் எரிச்சலுமே!  ஆகையால் கெஜ்ரிவாலுக்கு ஏற்பட்ட நிலைமையே இவருக்கும்.  கைகள் கட்டப்பட்ட தர்மசங்கடம்.கைக்கு எட்டியது வாய்க்கு எட்டாதது ஒருபுறமிருக்க,
"கை"க்கு எட்டாததும் வாய்க்கு எட்டாமல் போகும்!!

டிஸ்கி: தமிழகத்தில் நடந்த நாடாளுமன்ற தேர்தல் முடிவுகளை ஒட்டி எனக்குள் சில கேள்விகள், பதில்களின்றி...

1) காங்கிரசின் தோல்விக்கு காரணம் தமிழின அழிப்பு எனில், வைகோவின் தோல்விக்கு என்ன காரணம்?

2) திமுகவின் தோல்விக்கு ஊழல், குடும்பம் என்று பல காரணம் கூறினாலும் அதிமுகவின் வெற்றிக்கு ஞாயமான ஒரேயொரு காரணம்?

3) டாக்டர் அன்புமணி மற்றும் பொன் ராதாகிருஷ்ணன் ஆகியோரின் வெற்றிக்கு மோடியலை காரணமெனில் பாரிவேந்தரும் AC ஷண்முகமும் டெபாசிட் இழந்ததற்கு யார் காரணம்?

4) இரண்டாயிரம் நாட்களுக்கும் மேலாக உதயகுமார் தலைமையில் பல கிராம மக்கள் ஊண் உறக்கமின்றி போராடும்போதும் ஏன் அவரால் தன் சொந்த தொகுதியில் டெபாஸிட்கூட பெற முடியவில்லை?

Saturday, 19 April 2014

மதசார்பற்ற ஹிந்து சகோதரர்களுக்கு

இந்தியாவில் வாழும் மதசார்பற்ற ஹிந்து சகோதர சகோதரிகளுக்கு ஒரு வேண்டுகோளாக இந்த பதிவை வைக்கிறேன்.  இதிலுள்ள வீடியோவானது சென்னை அண்ணா சாலையில் உள்ள மக்கா மசூதியின் இமாம் அவர்களின் தெளிவான பேச்சால் யாருக்கு 2014-ல் நடக்கவிருக்கும் பாராளுமன்ற தேர்த்தலில் வாக்கு(ஓட்டு) போய் சேரக்கூடாது என்பதை குறிப்பிடுகிறது.


பாபர் மசூதி இடிப்பு வழக்கில் உச்சநீதிமன்றம் ஒரு கட்டப்பஞ்சாயத்து தீர்ப்பை அளித்தபின்னும், அதையும் ஏற்றுக்கொள்ளாமல் தனது தேர்த்தல் அறிக்கையில் மசூதியை இடித்த இடத்தில் ராமர் கோயிலை கட்டுவோம் என்றும்
இந்திய அரசாணைக்கு எதிராக, பொது சிவில் சட்டம் இயற்றுவோம் என்றும்
பகிரங்கமாக அறைகூவலிடும் இந்த ஆன் எஸ் எஸ்-கா உங்கள் வாக்கு போய் சேரவேண்டும் என்பதை மீண்டும் ஒருமுறை சிந்தித்து வாக்குச்சாவடிக்கு சென்று வாக்களிப்பீர்.Thursday, 10 April 2014

பிஜேபியால் ஒரு நிலையான ஆட்சியை தரமுடியுமா?

இப்போது இந்தியாவில் நடைபெற்றுவருகின்றன நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்று இந்தியாவை அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு ஆளப்போவது யார் என்ற மிகப்பெரிய கேள்வி நம்முன் உள்ளது. பொதுமக்கள் மிகத்தெளிவாக அதை தங்களின் வாக்குகள் மூலம் தீர்ப்பு கூறிவிடுவார்கள்.  ஆனால் அதற்குமுன் நம்மில் பலர், முக்கியமாக பதிவர்கள், ஃபேஸ்புக் மற்றும் டிவிட்டர்களில் விளையாடுபவர்கள்/நேரம் கடத்துபவர்கள் ஒரு மாயையை உருவாக்க எண்ணி, பிஜேபியால் மட்டுமே ஒரு நிலையான ஆட்சியை கொடுக்க முடியும் என்று ஏக்காளமிடுகின்றனர். இதற்காக ஒரு நிறுவனத்தை கூலிக்கமர்த்தியும் கூப்பாடு. போடுகிறார்கள்.

அவர்கள் கூறும் காரணங்கள்:
1. துணிச்சல் மிக்க தலமை
2. கட்டுக்கோப்பான கட்சி பிஜேபி
3. காங்கிரஸ் ஒரு ஊழல் கட்சி
4. மோடி அலை

ஆறு மாதங்கள் முன்பே பிரதம வேட்பாளர் என்று பகிரங்கமாக அறிவிக்கப்பட்டவர் குஜராத் மாநில முதல்வர் மோடி.  எதிர்க்கட்சிக்கு "கேப்டனே " இல்லை என்று துணிச்சலாக கூறும் இவர்கள் ஏன் மோடியை முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய சொல்லவில்லை?  நான்கு முறை முதல்வராக இருந்துவிட்டவர், அப்பதவியை அடுத்தவரிடம் ஒப்படைத்துவிட்டு, துணிந்து பிரதமராக களமிறங்க வேண்டியதுதானே?
துணிச்சல் மிக்கவர் தன் திருமணத்தையே மறைத்ததேன்?
எதற்கும் துணிந்தவர்கள் வரலாற்று பக்கங்களில் ஹிட்லர் என்றும் சதாம் என்றும் கிம் ஜாங் உன் என்றும் அறியப்படுகிறார்கள்.  நமக்கு வேகம் மட்டும் போதாது, விவேகமும் தேவை.

அடுத்து கட்டுக்கோப்பான கட்சியை வழி நடத்துபவர்கள் யார் என்பதை தேர்தல் அன்று வெளியிடப்பட்ட அக்கட்சியின் தேர்தல் அறிக்கையில் அச்சிடப்பட்ட ஆர் எஸ் எஸ் தலைவரின் படத்திலிருந்து புரிந்து கொள்ளலாம்.  அதுமட்டுமின்றி கட்டுக்கோப்பான கட்சியில் உபி முன்னாள் முதல்வர் கல்யாண் சிங் நீக்கப்பட்டு பின்னர் சேர்த்துக்கொள்ளப்பட்டது, டெல்லி முன்னாள் முதல்வர் மதன்லால் குராணா நீக்கப்பட்டு பின்னர். சேர்த்துக்கொள்ளப்பட்டது, கர்னாடக முன்னாள் முதல்வர் எடியூரப்பா நீக்கப்பட்டு பின்னர் சேர்த்துக்கொள்ளப்பட்டது, ஜஸ்வந்த் சிங் நீக்கப்பட்டு பின்னர் சேர்ந்து இப்போது மீண்டும் நீக்கப்பட்டது என்று பட்டியல் நீண்டு கொண்டே போகிறது.  அதேபோல மோடியை பிரதம வேட்பாளராக அறிவித்ததுடன் மூத்த தலைவர் அத்வானி நடந்துகொண்டவிதமும், கட்சியிலிருந்து தன்னை முழுவதுமாக விடுவித்து கொண்ட விதமும் பின்னர் மீண்டும் அடித்த அன்தர் பல்டியையும் யாரும் மறந்துவிடவில்லை. அதுமட்டுமின்றி காந்திநகர் தொகுதியை தக்கவைத்துக்கொள்ள அவர் செய்த பிரயத்தனமும் இக்கட்சி மற்ற எந்த கட்சியைவிடவும் சற்றும் குறைந்ததல்ல என்பதை மீண்டும் நிரூபித்தது.  கடைசியாக நீலகிரி தொகுதி வேட்பாளர் நடந்துகொண்ட விதமும் கட்சியின் கட்டுப்பாட்டை நன்றாக பறைசாற்றியது.  அதேபோல இக்கட்சி தமிழக - புதுவையில் ஏற்படுத்திய கூட்டணி என்பது ஒரு சந்தர்ப்பவாத கூட்டணியாகவே உள்ளது.   எட்டு தொகுதிகளை பெற்றுக்கொண்ட கட்சியின் ஒரு வேட்பாளர் ஓடிவிட்டார்.    இப்போது வெறும் ஏழு வேட்பாளர்கள் மட்டுமே களத்தில் உள்ளனர்.   அதேபோல் எட்டு தொகுதிகளை பெற்றுக்கொண்ட பமக ஒன்பது தொகுதிகளில் போட்டியிடுகின்றது.  புதுவையில் கூட்டணி கட்சிகளான என் ஆர் காங்கிரஸும் போட்டியிலுள்ளது பமகவும் தன் பங்குக்கு வேட்பாளரை நிறுத்தியுள்ளது.  தங்கள் வேட்பாளரையே கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்ள முடியாத இவர்கள், புதுவையில் கூட்டணியை கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்ளாத இவர்கள் மற்ற கட்சிகளைவிட எந்த வகையிலும் சளைத்தவர்களில்லை!

அடுத்து இவர்கள் பயன்படுத்தும் அஸ்திரம், காங்கிரஸ் ஒரு ஊழல் கட்சி என்பது.  பங்காரு லக்‌ஷ்மணனிலிருந்து நிதின் கட்காரிவரை கட்சித்தலைவர்கள் செய்யாத ஊழலா?
எடியூரப்பா செய்யாததா  ஊழல்?
அல்லது கார்கில் போரில் மரணமடைந்த வீரர்களின் சவப்பெட்டி தயாரிப்பில் செய்யாத ஊழலா?
கிட்டத்தட்ட ஆறு ஆண்டுகள் ஆண்ட இவர்கள் தங்களால் முடிந்தவரை செய்ததுதான் இந்த ஊழல்கள்.  பாவம் பெரியவர் வாஜ்பாய் "உங்களின் சங்காத்தமே தேவையில்லை" என்று ஒதுங்கியேவிட்டார்.
அப்படியிருக்கும்போது, இவர்களுக்கு மற்ற கட்சியை ஊழல் கட்சி என்று கூற எந்த அருகதையும் கிடையாது என்பதே என் வாதம்!

கடைசியாக மோடி அலை:
அப்படி ஒரு அலை இருந்திருக்குமேயானால், அத்வானியிடமிருந்து வலுக்கட்டாயமாக காந்தி நகரை பிடுங்க எத்தனித்தது ஏன்?
இப்போதும் இரண்டு தொகுதிகளில் போட்டியிடுவது ஏன்?
மோடி அலைமீது மோடிக்கே அவநம்பிக்கையா?
பிறகு ஏன், "தயவுசெய்து எங்களை 300 தொகுதிகளில் வெற்றி பெறச்செய்யுங்கள்" என்று கதறவேண்டும்?

இறுதியாக, தமிழகத்திற்கு அல்லது தமிழர்களுக்கு இவர்களால் என்ன செய்ய முடியும் என்று எதையாவது தங்களின் தேர்தல் அறிக்கையில் கூறியுள்ளார்களா?
மீனவர் பிரச்சனை
கச்சத்தீவு
சேது சமுத்திர திட்டம்
அணு உலை நிலைப்பாடு
காவிரி நீர் பங்கீடு
முல்லை பெரியாறு அணை
ராஜிவ் கொலையாளிகள் என்று கூறப்படும் மூவரின் விடுதலை
ஈழத்தமிழரின் அழிப்பு
இந்த மாதிரி ஏகப்பட்ட பிரச்சனைகளுக்கு ஏதேனும் துணிச்சலான தீர்வு கூறுகின்றதா பிஜேபி? அல்லது தேர்தல் முடிவுகள் அறிவிப்புக்குப்பின் தமிழகத்தில் இதே கூட்டணியை தொடர்வோம்.... அதிமுக அல்லது திமுகவின் ஆதரவை கோறமாட்டோம் என்று துணிச்சலுடன் உறுதியாக அறிவிக்கத்தான் முடியுமா?

கட்டக்கடசியாக, காமராஜ் கூறியது போல இவர்களும்
"ஒரே குட்டையில் ஊறிய மட்டைகளே"
மற்ற அரசியல் கட்சிக்கும் பிஜேபிக்கும் எந்தவொரு வித்தியாசமுமில்லை!!

Wednesday, 19 March 2014

தேர்த்தல் 2014 - தமிழகம் - ஒரு அலசல்

தமிழகத்தில் இதுவரை நடந்த தேர்த்தல்களிலேயே இந்த தேர்த்தல் ஒரு புதிய சகாப்தத்தை ஏற்படுத்தும் என்பது மட்டும் உண்மை.

பொதுவாக பாராளுமன்றத்துக்கு நடக்கும் தேர்தலில் தேசிய கட்சிகளின் கை ஓங்கியிருப்பது மாறி மாநில கட்சிகள் அவர்களை ஒரு பொருட்டாக மதிக்காமல் செய்துவிட்டன.

* பாஜக + பமக + தேமுதிக + மதிமுக
* காங்கிரஸ்
* கம்யூனிஸ்ட்
* அதிமுக
* திமுக + விடுதலை சிறுத்தைகள் + புதிய தமிழகம் + இந்திய தேசிய முஸ்லீம் லீக்   + மனிதநேய மக்கள் கட்சி
* ஆம் ஆத்மி கட்சி

பொதுவாகவே காங்கிரஸ்ஸோடு கூட்டணி வைத்துக்கொள்ள யாருமே தயாராக இல்லை என்பதே நிதர்சன உண்மையாகி உள்ளது.  இதற்கு முக்கிய காரணம், அதை தலைமையேற்க ஒரு கவர்ந்திழுக்கும் தலைமை இல்லாததே. அடுத்து இக்கட்சியில் யாரும் தன்னை தொண்டனாக கருதாமல் அனைவரும் தன்னையே தலைவனாக கருதுவதுதான்.

தமிழகத்தில் தமிழருவி மணியன் ஏற்படுத்திய ஒரு அணிதான் "பாஜக + பமக + தேமுதிக + மதிமுக".  இந்த கூட்டணியில் யாருக்குமே ஒருமித்த கருத்தோ கொள்கையோ இல்லை. மதிமுகவுக்கு இலங்கை தமிழர்களை விட்டால் வேறு ஏதும் கொள்கை இருப்பதாக தெரியவில்லை.  ஆனால் இலங்கை தமிழர் விவகாரத்தில் பாஜகவின் நிலையோ நேரெதிரானது.  இதிலுள்ள தேமுதிகவுக்கோ தங்களுடைய எம்.எல்.ஏ-க்களையே பாதுகாக்க முடியவில்லை.  இனி எம்.பி-க்களை வைத்துக்கொண்டு என்ன பாடுபடப்போகிறாரோ?  ராமதாஸ் விஜயகாந்தையும் அவரின் படங்களையும் எதிர்த்ததுபோல அம்மாவும் செய்யவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.  இவர்கள் அனைவரும் ஒரே மேடையில் தோன்றி கை குலுக்குவதே நடக்காத ஒன்றாகும் போது இவர்கள் எப்படி ஜெயிப்பது?

அடுத்து தனித்துவிடப்பட்ட கம்யூனிஸ்ட்.  இவர்களில் எல்லோருமே அடிமட்ட தொண்டர்களாகவே இருந்துவிட்டதால் இவர்களை யாருமே தலைவர்களாக ஏற்றுக்கொள்வதில்லை.  பாவம் அவர்களும் விரட்டி அடித்தவர்களை பற்றி ஒரு வார்த்தையும் பேசமாட்டேங்கிறார்கள்.

தன்னம்பிக்கைக்கும் தலைக்கனத்துக்கும் ஒரு சிறு கோடே எல்லையென்பதை இன்றும் புரிந்துக்கொள்ள மறுக்கும் ஒரு தலைமையை கொண்ட அதிமுக.  அம்மா பிரதமரானால் இந்தியா முழுவதும் "அம்மாஜி" மெஸ் ஆரம்பித்து பூரி பாஜி சப்ளை நடக்கும்.  உலக வங்கி அதிகாரி "mammy" காலில் விழ பன்னீர்செல்வத்திடம் ட்யூஷன் போகவேண்டும். இல்லையென்றால் விமான நிலையத்தில் பெண்கள் பிறிவின் குத்தாட்டம் பார்க்கவேண்டியிருக்கும்.  அதுவும் இல்லையென்றால் ஆசிட் முகத்தில் வீசப்படும், ஜாக்கிரதை!

வந்தாரை வாழவைக்கும் அல்லது வந்தாரை வைத்து வாழ நினைக்கும் நிலையில் அடுத்த கூட்டணி.  இதுவரை வந்தவரனைவருக்கும் அவர்கள் மனம் குளிரும்படி சீட் ஒதுக்கி மேலும் யாருடனும் "கை" கோர்த்து "உண்டி" குலுக்க தயார் நிலையில் இருக்கிறது இந்த அணி.

ஆம் ஆத்மி கட்சியை பற்றி பேசவேண்டுமானால் அதன் தலைவருக்கு மற்ற கட்சி தலைவர்களை எதிர்த்து போட்டியிடுவதே வேலையாகிவிட்டது. டெல்லியில் கிடைத்த வாய்ப்பை நல்ல முறையில் பயன்படுத்திக்கொள்ள தெரியாமல் "விலகி ஓடியதை" யாரும் மறக்காத நிலையில்,  ஞானியையும் உதயகுமாரையும் வைத்துக்கொண்டு எத்தனை சதம் ஓட்டுக்களை பிரிக்கப்போகின்றனர் என்பதை பொருத்திருந்துதான் பார்க்கவேண்டும்.

இந்த தேர்த்தலில் ஊழல் என்பதை அளவுகோலாக வைத்துப்பார்த்தால் நாம் யாருக்கும் வாக்களிக்க முடியாது.  ஏனெனில் எந்த கட்சிக்கும் அடுத்தவரை ஊழல் குற்றம் சாட்ட எந்த வித தார்மீக பொருப்புமில்லை.

இந்த தேர்த்தலில் மதசார்பின்மை என்பதை அளவுகோலாக வைத்து பார்த்தால் அனைவருக்கும் வாக்களிக்க வேண்டும்.  ஏனெனில் அனைவரும் தங்களை மதசார்பற்றவராகவே காட்டிக்கொள்கின்றனர்.

வளர்ச்சி என்று பார்த்தால், விலைவாசிதான் வளர்ந்துள்ளது.  அதைத்தவிர மற்ற வளர்ச்சியெல்லாம் அதுவாக வளர்ந்ததுதான்.  இதற்கு யாரையும் பொருப்பேற்க சொல்ல முடியாது.  மறைந்த பிரதமர் நரசிம்ம ராவால் அறிமுகப்படுத்தப்பட்ட நம் இன்றைய பிரதமர் தன்னுடைய குருவைப்போலவே வாய் மூடி மௌனம் காத்துக்கொண்டிருக்கின்றார். எதிர்கட்சிகளோ வெரும் சத்தம் மட்டும் போட்டுக்கொண்டிருக்கின்றனர்.  இந்த சத்தத்தில் யாருக்கும் எதுவும் கேட்கவேயில்லை என்பதுதான் உண்மை. நான் சும்மா கத்துவது போல நடிக்கிறேன் நீ செய்ய வேண்டியதையெல்லாம் செய்து எனக்கு சேரவேண்டியதை சரியாக கணக்கு பார்த்து செட்டில் செய்துவிட்டால் போதும் என்றே எதிர்கட்சிகள் நடந்துகொள்கின்றன.

Tuesday, 25 February 2014

உங்கப்பா அவ்ளோ பெரிய அப்பாடக்கரா?

நம் தேசத்தந்தை மகாத்மா காந்தியை கொன்ற நாதுராம் கோட்சேவின் சகோதரர் கோபால் கோட்ஸேவை நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.  (he was found guilty of conspirancy and sentenced to jail for life) பின்னர் 1965ல் அவர் நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டு 2005ல் பூனாவில் இயற்கை எய்தினார்.

தெலுகு தேசக்கட்சியின் முன்னாள் அமைச்சர் பரிதலா ரவியை கொல்ல முயன்ற வழக்கில் "இனி வாழ்நாள் முழுவதும் சிறையில் வாழ வேண்டும்" என்று தீர்ப்பளிக்கப்பட்ட காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சூரிய நாராயண ரெட்டி, சிறையில் இருந்தபடியே மீண்டும் ரவியை கொன்ற வழக்கில் முதல் குற்றவாளியாக சேர்க்கப்பட்டு அவ்வழக்கு இன்றுவரை நிலுவையில் உள்ளது. அப்படிப்பட்ட சூரியை 2009 அக்டோபர் 2, காந்தி ஜெயந்தியை முன்னிட்டு ஆந்திர அரசு விடுதலை செய்தது.

மதுரை வில்லாபுரம் கம்யூனிஸ்ட் கட்சியின் பெண் கவுன்சிலர் லீலாவதியை கொன்ற  வழக்கில் ஆயுள் தண்டனை அளிக்கப்பட்ட முருகன் எனும் சொங்கு முருகன், மீனாட்சிசுந்தரம், மருது எனும் நல்லமருது ஆகியோரை அண்ணா பிறந்த நாளான 12-09-2008ல் அன்றைய திமுக அரசு விடுவித்தது.

இது போன்ற பற்பல வழக்குகளில் தீர்ப்பு வழங்கப்பட்டிருக்கும்போதெல்லாம் பொங்காத ராகுல் காந்தி, இப்போது ராஜிவ் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு 23 ஆண்டுகள் தண்டனையை அனுபவித்தவர்களை சுப்ரீம் கோர்ட் உத்தரவுப்படி விடுவிப்பதை

முன்னாள் பிரதமரும், என்னுடைய தந்தையுமான ராஜீவ் காந்தி கொலை வழக்கின் குற்றவாளிகளை விடுதலை செய்வது என்ற தமிழக அரசின் முடிவுஎனக்கு கவலை அளிக்கிறது.  பிரதமரைக் கொலை செய்த சில நபர்களே விடுதலை செய்யப்படுகிறார்கள் என்றால், சாமானிய மனிதர்களுக்கு எப்படி நீதி கிடைக்கும்?  இந்த நாட்டில், பிரதமருக்குக் கூட நீதி கிடைக்கவில்லை.  இது என் மனதின் குரல்.  நான் மரண தண்டனை மீது நம்பிக்கை கொண்டிருக்கவில்லை.  அது, என் தந்தையை மீண்டும் கொண்டுவந்து கொடுக்காது.  ஆனால், இது என் தந்தையோ அல்லது குடும்பமோ சம்பந்தப்பட்ட விஷயம் அல்ல.  இது, ஒரு நாட்டின் விவகாரம்
என்றெல்லாம் வசனம் பேசும் வருங்கால பிரதமரே,  முதலில் உங்களின் சட்ட அமைச்சர் "நோ லாஸ்" கபில் சிபல் அவர்கள் கூறுவதை பொருமையாக கேட்டு பின்னர் பொங்குங்கள்!
“ராஜீவ் காந்தி கொலையில் ஈடுபட்டவர்களுக்கு எவ்வித சலுகையும் அளிக்கப்படக் கூடாது என்பதே அட்டர்னி ஜெனரலின் வாதமாக இருந்தது.   ஆனால் தற்போது நீதிமன்றம் ஒரு முடிவை எடுத்து தீர்ப்பை அறிவித்துள்ளது.  விருப்பம் இருக்கிறதோ இல்லையோ நீதிமன்ற தீர்ப்பை மதித்து நடந்தாக வேண்டும். எனவே மத்திய அரசு உச்சநீதிமன்ற தீர்ப்பை ஏற்று நடக்கும்.”

இல்லே உங்கப்பா என்ன அவ்ளோ பெரிய அப்பாடக்கரா?
இந்திய மீனவரை கொன்ற இத்தாலிய படைவீரர்களை ஜாமினில் செல்ல அனுமதித்துவிட்டு, இப்போது "கடல் கொள்ளை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்படாது" என மத்திய அரசு, சுப்ரீம் கோர்ட்டில் தெரிவித்துள்ளது. இதன் மூலம், இத்தாலி வீரர்கள், மரண தண்டனையிலிருந்து தப்பியுள்ளனர். இதற்கு முதலில் ஒரு பதிலை சொல்லுங்கள் ராகுல்ஜீ!  பிறகு நாட்டின் விவகாரம் பற்றியும் தந்தை/குடும்ப விஷயம் பற்றியும் பேசலாம்.
இல்லே உங்கப்பா என்ன இந்த மீனவரைவிடவும், லீலாவதியைவிடவும், பரிதலா ரவியைவிடவும் இல்லையில்லை தேசத்தந்தை காந்தியைவிடவும் அவ்ளோ பெரிய அப்பாடக்கரா?

Saturday, 11 January 2014

தமிழகம்: அரசியல் - சினிமா - சாராயம் - இலவசம்

1916-ல் டாக்டர் அன்னி பெசண்ட் இந்திய ஹோம் ரூல் இயக்கத்தை சென்னையில் ஆரம்பித்தது...
1918-ல் திரு விக இந்தியாவின் முதல் தொழிலாளர் சங்கத்தை துவக்கியது...
1937-ல் நடந்த சட்டமன்ற தேர்தலில் சக்ரவர்த்தி ராஜகோபாலாச்சாரி (ரஜாஜி) சென்னை மாகாண முதல்வராக பதவியேற்றது...
உலகின் இரண்டாவது நீளமான கடற்கரையை கொண்ட சென்னை (மெரினா கடற்கரை)
இந்தியாவின் மான்செஸ்டர் என்றழைக்கப்படும் கோயம்பத்துர்
மலைகளின் ராணி என்று வர்ணிக்கப்படும் உதகமண்டலம்
கோயில் நகரமாம் மதுரை
தஞ்சை பெரிய கோயில்
இரண்டாம் நூற்றாண்டில் கட்டப்பட்ட கல்லணை
கிட்டத்தட்ட 100 அடி உயரமும் 300 டன் எடையும் கொண்ட திருவாரூர் தேர்
133 அடி உயர திருவள்ளுவர் சிலை
150 அடி உயர கொடி மரம் (புனித ஜார்ஜ் கோட்டை)
ஆசியாவின் மிகப்பெரிய பேருந்து நிலையம் (கோயம்பேடு)
ஆசியாவின் மிகப்பெரிய சிறைச்சாலை (புழல்)
கப்பலோட்டிய தமிழன்
கொடி காத்த குமரன்
காந்திக்கே அடையாளமாக மாறிய மதுரை விவசாயியின் ஆடை
கணிதமேதை ராமானுஜம்
இயற்பியலார் சர் சிவி ராமன்
விஞ்ஞானிகள் ஜிடி நாயுடு முதல் அப்துல்கலாம் வரை என்று

tamilnadu symbol

இப்படி நாம் அன்றைய சென்னை மாகாணத்தின், இன்றைய தமிழ் நாட்டின் பெருமையை பற்றி சொல்லிக்கொண்டே போகலாம்.

ஆனால் இன்று நம் தமிழகத்தின் நிலையை யோசித்துப்பார்த்தால்...

உலகிலுள்ள கிட்டத்தட்ட 7000 மொழிகளில் 700 மொழிகளில் மட்டுமே எழுதவும் பேசவும் முடியும்.  அதிலும் வெறும் 100 மொழிகளே சொந்த வரிவடிவம் கொண்டவை.  இவற்றுக்கெல்லாம் மூலமொழியாக திகழ்ந்து இன்றளவும் பேச்சு வழக்கில் உள்ள இரண்டு மொழிகளில் ஒன்றான தமிழ் மொழியை நாமே பேச வெட்கப்படுகின்றோம்.  ஆனால் மொழிக்கு மாநாடு நடுத்துவதும் "தமிழ் வாழ்க" என்ற கோஷம் போடுவதும் மட்டும் குறையவில்லை.
                                              
தமிழ் படித்தால் தமிழகத்தில் மதிப்பில்லை! தமிழில் படித்தவர்களுக்கு இங்கு வேலையுமில்லை!
நம் மீனவர்கள் மீன்பிடிக்க சென்றால், திரும்பி வருவது சந்தேகமாக உள்ளது.
நம் விவசாயிகளுக்கு பயிர் செய்ய நீர் கிடைப்பதில்லை.
நம் மக்களுக்கு குடிக்க நீரில்லை.
திடமாக இருக்கும் அணையையும் பலவீனமானதுதான் என்று நம்பவைக்கும் நம் அண்டைய சகோதரன்.
பாம்பன் பாலம் கட்டி சாதனை படைத்த நமக்கு சேது சமுத்திர திட்டம் நடைமுறைபடுத்த முடியவில்லை.
தொப்புள் கொடி உறவு என்று கூறிக்கொண்டே நம் இனம் அழிவதை வேடிக்கை மட்டுமே பார்க்கும் ஒரு இழி நிலை!
நம்மீது நம்பிக்கை வைத்து கடல் தாண்டி அடைக்கலம் தேடியவர்களை இன்றும் நாம் எப்படி நடத்திக்கொண்டிருக்கிறோம்?

மேலே உள்ள அனைத்து எதிர்மறையான வாக்கியங்களுக்கு காரணம் என்று பார்த்தால் அது வேறு எங்கோ இல்லை.  நம்மிடம்தான் குறையுள்ளது.  கூடி வாழ்ந்தால் கோடி நன்மை என்று அறிந்த நாம், நம் எதிர்கால சந்ததியர்களுக்கு பயன்தரக்கூடிய எந்த திட்டத்தை செய்ய நினைத்தாலும் அதற்கு ஒற்றுமையாக குரல் கொடுக்க மறந்துவிடுகின்றோம்.  இதையேதான் நம் தலைவர்களும் நமக்கு கற்று தந்துக்கொண்டிருக்கின்றனர்.

 

நம் நாட்டை கடந்த நாற்பத்தைந்து ஆண்டுகளாக ஆண்டு கொண்டு இருப்பவர்கள் மற்றும் இனி ஆளவேண்டும் என்று கனவு காண்பவர்கள் என்று அனைவருக்கும் உள்ள ஒரே ஒற்றுமை, அவர்கள் வரும் துறை. கலைத்துறை! இதையே காரணம் காட்டி நம் இளைய சமுதாயத்தை நாமே சீரழித்து கொண்டிருக்கிறோம் என்பதே உண்மை.

மாணிக்க வாசகர் தனது 24வது வயதில் திருவாசகம் பாடினார்
தனது 26வது வயதில் ஏஆர் ரஹ்மான் இசையமைப்பாளரானார்
தன்னுடைய 19வது வயதில் விஸ்வநாதன் ஆனந்த், சதுரங்க உலகின் கிராண்ட் மாஸ்டர் என்ற அங்கிகாரம் பெற்றார்
தன்னுடைய 13வது வயதில் குற்றாலீஸ்வரன் கின்னஸ் உலக சாதனை படைத்தான்
தனது 22வது வயதில் சுதேஸமித்ரன் பத்திரிக்கையின் துணையாசிரியரான பாரதி தனது 38-ஆம் வயதில் தேசியக்கவியாக காலமானான்
தனது 24வது வயதில் திருவிக பெரியபுராணத்துக்கு குறிப்புரையும் வசனமும் இயற்றினார்
கணித மேதை ராமானுஜன் சாதித்ததும் தனது 27வது வயதிலேயே!

இப்படி சாதனையாளர்களை பட்டியலிட்டால் அதில் அனைவரும் இளைஞர்களாகவே இருப்பதை பார்க்கும் நம் இளைஞன், தன் பொழுதை வீணடிப்பது இதே சினிமாத்துறையாகத்தான் இருக்கிறது. இப்படி இன்றைய ஒவ்வொரு இளைஞனும் தன்னுடைய இளமையை வீணடித்து கொண்டிருப்பதற்காக யாரும் கவலையும்படவில்லை.  தமிழில் சினிமாவிற்கு பெயர் வைத்தால் வரிவிலக்கு என்று சொல்லும் அரசு, தமிழை மட்டுமே கற்றறிந்தவர்க்கு என்ன அளிக்கிறது என்று பார்த்தால் மிஞ்சுவது ஒன்றுமில்லை.
ரசிகர்கள் மொட்டையடித்து காவடி தூக்கி பாலாபிஷேகம் செய்கின்றனர்

சரி அடுத்ததாக நாம் பார்க்கும் கொடுமை என்றால் அது சாராயம்.  இன்று தமிழகத்தின் அடையாளமாக மாறிக்கொண்டிருப்பது டாஸ்மாக் கடைகள்! அரசு நடத்தும் எந்த துறையிலும் இலக்கு நிர்ணயிப்பதுமில்லை. ஒருவேளை இலக்கு நிர்ணயித்தாலும் அது வெறும் காகிதத்தில் மட்டுமே இருக்கும். ஆனால் டாஸ்மாக் இலக்கு மட்டும் குறிப்பிடுவதைவிட அதிகமாகவே எட்டப்படுகிறது.

எந்த ஒரு சமூகம் போதைக்கு அடிமைபட்டுகிடக்கிறதோ அது எப்போதும் தன்னை தொலைத்துவிடும் என்பது வரலாறு.  நம் தலைவர்கள் இதை நன்றாகவே உணர்ந்துள்ளனர்.  ஆனாலும் இவர்களுக்கு அரசு நடத்த இந்த பணம்தான் முக்கிய வருமானமாக இருக்கின்றது என்கின்றனர்.  கண்ணை விற்று ஓவியம் வாங்குவதற்கு ஒப்பானதாகும் இந்த கூற்று.  

"குடிமக்களை" காக்கும் தலைவர்


மூன்று தலைமுறைக்கும் பீடித்திருக்கிறது இந்த நோய்!!

2002-ல் 2000 கோடியாக இருந்து சாராய வருமானம் 2010-ல் 20,000 கோடியாக வளர்ந்துள்ளது.  கடந்த புத்தாண்டின் (01-01-14) ஒரு நாள் விற்பனை மட்டும் 250 கோடிகளை தாண்டியுள்ளதாம்!

சினிமாவினாலும் சாராயத்தாலும் கெடுவது போதாமல் இலவசங்களை கொண்டும் நம்மை ஏமாற்றுகின்றனர், நம் தலைவர்கள்!
மருத்துவம், கல்வி, மின்சாரம் போன்ற அத்தியாவசியங்களை விலைக்கு கொடுத்துவிட்டு, தொலைக்காட்சி பெட்டி, மிக்ஸி, கிரைண்டர் மற்றும் ஃபேன் ஆகியவற்றை விலையில்லாமலும் கொடுப்பதில் என்ன ஆளுமை தன்மை இருக்கிறது இவர்களுக்கு?  இப்போது செல் ஃபோன் தரப்போகின்றார்களாம். ரொம்ப முக்கியம்!!!


நாம் இருப்பது மக்களாட்சியில்தான் என்பதை மறந்துவிட்டிருக்கிறோம். மக்களுக்கு நன்மையை தராத எந்த அரசையும் எதிர்க்கும் நாம், மக்களுக்கு தீமையை தரும் அரசுகளுக்கே மீண்டும் வாய்ப்பளிக்கின்றோம்.

இந்தியாவிலுள்ள மாநிலங்களில் சாராய விற்பனையில் முதலிடத்தில் நம் தமிழகம்!
தமிழ் சினிமா, படத்தயாரிப்பில் இந்தியாவிலேயே முதல் மூன்று இடங்களுக்குள் இருக்கிறது!
இலவச திட்டங்களை அறிமுகப்படுத்தியதில் முதலில் நிற்பதும் நாமே!

குடிக்க நல்ல தண்ணீர் தரமுடியாத அரசு...
விவசாயத்திற்கு நீர் தரமுடியாத அரசு...
தொழிற்சாலைக்கு மின்சாரம் தரமுடியாத அரசு...
கல்வியை காசுக்கு விற்கும் அரசு...
மருத்துவத்தை வியாபாரமாக்கும் அரசு...

வாழ்க தமிழ் மாநில அரசியல்