Thursday, 18 December 2014

அஞ்சலி


உங்கள் வழக்குகளின்
தீர்ப்பினை ஏன் பூக்களிடம்
படிக்கிறீர்கள் தீவிரவாதிகளே...?
உங்கள் யுத்தங்களை மேற்கில்
வைத்துக் கொண்டு.. ஏன்
கிழக்கு நோக்கி குண்டெறிகிறீர்கள்...?

ப்ரியத்தை விதைக்கச் சொன்ன
வழிமுறையைகளை கையிலேந்திக் கொண்டு
நீங்கள் ரத்த சகதியில் சிறு பிள்ளைகளின்
இதயங்களை நட்டுக் கொண்டிருக்கிறீர்களே
இது என்ன நியாயம்...?

கடவுளை வழிபடுவதாய்ச்
சொல்லிக் கொண்டு...
சைத்தானுக்கு கைங்கர்யம்...
செய்து கொண்டிருக்கிறீர்களே மனிதர்களே...
வெட்கமாயில்லை உங்களுக்கு...?

பாலகர்களின் ரத்தம் குடிக்கின்ற உங்களுக்கு
அப்பாவிகளின் உயிரை யுத்தமென்ற பெயரில்
நித்தம் பறித்தெடுக்கும் உங்களுக்கு
எந்த சுவர்க்கத்தின் கதவுகள் திறக்குமென்று
கனவு காண்கிறீர்கள்...சைத்தானின் சைதன்யங்களே...?

நரகத்தின் நெருப்பிலிட்டாலும் பொசுங்காத
இதயம் கொண்ட நயவஞ்சகர்களே...
நரகத்தின் கதவுகூடத் திறக்காது
என்பது உங்களுக்குத் தெரியுமா?

எந்த தீர்க்கதரிசிகளாலும் உரைக்கப்படாததை
எந்தக் கற்பனைக் கடவுளர்களும்
பொய்யாகக் கூட கைக்காட்ட முன் வராத
அழுகிப் போன சித்தாந்தங்களை
எங்கிருந்து பெற்றீர்கள் பிசாசுகளே...?

பூமியைக் குழிதோண்டி புதைத்து விட்டு
எந்த கிரகத்தில் வாழப் போகிறீர்கள்...
சித்தாந்தங்களை ஏந்திப் பிடித்திருக்கும்....
சைத்தானின் சித்திரங்களே...?

சித்தாந்தங்களின் பெயரால், கொள்கைகளின் பெயரால், ஆதிக்க உணர்வின் பெயரால், கொலைகள் செல்லும் அமைப்புகள், தேசங்கள்....மனிதர்கள் அத்தனை பேரையும் ஒழிந்தே போகட்டும்...

அடுத்த தலைமுறைகளை அரவணைத்துச் செல்ல வேண்டிய மனிதர்களே...அவர்களை கொன்றழிக்கும் கொடுமையை, வலியை அதனால் ஏற்படும் வேதனையை எப்படி பதிவு செய்வதென்றே தெரியவில்லை....
மனிதர்களுக்கான பூமில் மனிதம் மட்டுமே முன்னிறுத்தப்பட வேண்டும்.

மனித நேயத்தை முன் வைத்து நகரமுடியாத சித்தாந்தங்களை நவீன காலத்தின் மானுடர்கள் தங்களின் ஞானத்தால் எரித்து போட்டு அன்பு நிறைந்த பூமியை உருவாக்க முன் வரவேண்டும்...!!!!!

பாகிஸ்தானில் கொல்லப்பட்ட பிஞ்சுகளுக்கு எனது அஞ்சலிகள்...!!!!


No comments:

Post a Comment