Monday, 23 March 2015

மேகதாது - புதிய அணை - முழு அடைப்பு

வரும் சனிக்கிழமை, 28-03-2015 அன்று தமிழகம் முழுவதும் முழு அடைப்பு செய்யவேண்டும் என்று தமிழக அனைத்து விவசாயிகள் பேரவை வேண்டுகோள் விடுத்துள்ளது.  இதற்கு பல்வேறு கட்சியினரும் ஆதரவு தெரிவிக்கின்றனர்.

முழு அடைப்பு செய்வதால் என்ன நன்மை விளையப்போகிறது என்பதை நம்மால் புரிந்துக்கொள்ள முடியவில்லை.  கடந்த பல ஆண்டுகளாக பல்வேறு விதமான தீர்ப்புகள் வந்தும், பல ஆட்சிகளும் கட்சிகளும் மாறியும் இன்னும் காவிரியில் தண்ணீர் திறந்துவிடமாட்டேங்கிறவர்களை இந்த முழு அடைப்பு எப்படி பாதிக்கும்?  மேலும் இந்த முழு அடைப்பினால் மேகதாதுவில் கர்நாடக அரசு கட்ட இருக்கும் அணையை நிறுத்திவிடுமா?  அரசியல் கட்சிகளுக்கு இது இன்றைய காலத்தின் கட்டாயமாக உள்ளது.  இன்னும் சில மாதங்களில் மாநில தேர்தல் நடக்க இருப்பதால்  அதற்குள் தங்களின் இருப்பை பறைசாற்ற இது ஒரு வாய்ப்பு என்பதாலேயே இவர்களின் நீலிக்கண்ணீர்!

இன்று தமிழகம் சார்பாக மக்களவையில் 39 உறுப்பினர்களும் மாநிலங்களவையில் 18 உறுப்பினர்களும் இருக்கின்றனர்.

அதிமுகதிமுககாங்கிரஸ்பாஜககம்யூனிஸ்ட்பமக
மாநிலங்களவை1141-2-
மக்களவை37--1-1
இந்த 57 உறுப்பினர்களும் என்றைக்காவது/எதற்காகவாவது ஒன்றாக நின்று குறல் எழுப்பியிருக்கின்றார்களா என்றால் இல்லை என்பதே பதில்.  அதுவே கர்நாடகாவாகட்டும் கேரளாவாகட்டும் அல்லது ஆந்திராவாகட்டும், தங்கள் மாநில பிரச்சனையென்றால் அனைத்து கட்சியினரும் ஒன்றாக கூடி தங்களின் ஒட்டுமொத்த ஆதரவையோ அல்லது எதிர்ப்பையோ காட்ட தயங்குவதில்லை. அப்பேர்பட்ட ஒரு ஒற்றுமை ஏன் நம் தமிழக கட்சிகளிடையே இல்லை?  ஒன்று பட்டால் உண்டு வாழ்வு என்பதை ஏன் இவர்கள் மறந்துவிட்டனர்.
அதுபோக விட்டுக்கொடுக்கும் மனப்போக்கும் நம்மில் யாருக்குமில்லாமல் போனதேன்?  அண்டை மாநிலம் பாலைவனமானால் நமக்கு என்ன என்ற மனோபாவம் வந்ததற்கு யார் காரணம்?

பிரம்மபுத்ரா நதியின் நீரை சீனாவும் இந்தியாவும் பங்களாதேசமும் பகிர்ந்துகொள்கின்றன!

ஜீலம் நதியின் நீரை இந்தியாவும் பாகிஸ்தானும் பகிர்ந்துகொள்கின்றன!

நைல் நதியின் நீரை எகிப்தும் சூடானும் எத்தியோப்பியாவும் பகிர்ந்துகொள்கின்றன!

ஆனால் காவிரியையோ பெரியாரையோ ஒரு நாட்டின் இரு மாநிலங்கள் பகிர்ந்துகொள்ள எத்தனை தடைகள்!  இதற்கு காரணமென்ன?  அரசியல்... வாக்கு அரசியல்!  இந்த பிரச்சனையை தீர்த்துவிட்டால் பின்னர் எதை கூறி தங்களின் கடையை விரிப்பது?  எனவேதான் இதுபோன்ற கடையடைப்பு கோரிக்கைகள். இந்த கடையடைப்பினால் பாதிக்கப்படுவது அன்றாடம் சம்பாதித்தே ஆகவேண்டிய கட்டாயத்தில் உள்ளவர்களேயன்றி இந்த கேடுகெட்ட அரசியல்வாதிகளல்லவே!

1 comment:

  1. அய்யா,

    நீங்களே குறிப்பிட்டதை போல எல்லாம் பாழாய் போன ஓட்டு அரசியல் படுத்தும் பாடு ! மக்களின் அடிப்படை வசதிகளிலும் அத்யாவசிய தேவைகளிலும் கூட ஓட்டு கணக்கு பார்க்கும் அரசியல்வாதிகள் இந்த தேசத்தின் கேடு !

    இரு மாநில மக்களும் ஒன்றுக்கூடி ஒத்துக்கொண்டால் கூட இந்த அரசியல்வாதிகள் தண்ணீருக்கு தடங்கல் செய்வார்கள்... ஓட்டு பிச்சை கேட்க காரணம் ஒன்று குறைந்து விடுமே !!!

    எனது புதிய பதிவு : மீண்டும் முபாரக்
    http://saamaaniyan.blogspot.fr/2015/02/blog-post.html
    தங்களுக்கு நேரமிருப்பின் படித்துவிட்டு உங்கள் கருத்தினை பதியுங்கள். நன்றி


    நன்றி
    சாமானியன்
    saamaaniyan.blogspot.fr

    ReplyDelete