ஒரு மனிதர் இவ்வுலகில் தோன்றினால், அவனைக்கொண்டு மற்றவர்களுக்கு ஏதேனும் பிரயோஜனம் இருக்க வேண்டும் என்பது எல்லோரும் எதிர்பார்ப்பது. அப்படிப்பார்த்தால் மறைந்த திரு அப்துல் கலாம் அவர்களால் யாருக்கு என்ன நன்மை பயத்துள்ளது இந்த உலகிற்கு?
ஒருவர் பிரபலமடைந்தால் அதைக்கொண்டு தனக்கும் தன்னை சார்ந்தவர்களுக்கும் முடிந்தவரை ஏதேனும் செய்து கொள்வது என்பது மனித இயல்பு. பொதுவாக பிரபலமானவர்கள் தன் புகழ்ச்சியை பயன்படுத்தி ஒரு தொழிற்சாலையையோ அல்லது திரையரங்கையோ கட்டி ஊர் மக்களை சந்தோஷமடைய வைத்தது அந்தக்காலம்.
இந்தக்காலத்தில் தன்னுடைய புகழ்ச்சியை உயயோகப்படுத்தி ஊரில் கல்வி நிறுவனத்தையோ, மருத்துவமனையையோ அல்லது மேம்பாலங்களை கட்டியோ ஊரை முன்னேற்றுகிறார்கள். இப்படி எதையுமே செய்யாத திரு அப்துல் கலாம் அவர்களை இந்த உலகம் அவரின் மறைவின்போது, தானாகவே முன்வந்து, தன் வீட்டில் ஒரு துக்க நிகழ்ச்சி ஏற்பட்டதை போன்று வருந்தியுள்ளது என்றால் அதற்கான காரணம் என்ன?
தன் தாய்மொழியில் ஆரம்ப கல்வி பயின்று பார் போற்றும் அணு வஞ்ஞானியானதால் இந்த பெருமை கிடைத்திருக்"கலாமோ?"
இந்தியாவின் கடைக்கோடி கிராமத்தில் பிறந்து நாட்டின் முதல் குடிமகனாக உயர்ந்ததால் கிடைத்திருக்"கலாமோ?"
தனக்குப்பிடித்த ஆசிரியர் பணியை தன் கடைசி மூச்சுவரை செய்து மாணவர்களின் முன்னேற்றத்துக்கு வழிகாட்டியதால் கிடைத்திருக்"கலாமோ?"
தான் பதவியிலிருப்பதால் தனக்கு கிடைத்த பரிசுப் பொருளுக்கும் விலை கொடுத்து வாங்கி, அந்த காசோலை பணமாக மாற்றப்படவில்லை என்பதை அறிந்து, பரிசு கொடுத்தவருக்கு கடிதம் எழுதி, "பணம் பெற்றுக்கொள்ளுங்கள். இல்லையெனில் உங்களின் பொருளை திருப்பி அனுப்பிவிடுவேன்" என்று கூறிய கண்டிப்பும் எளிமையும் இருக்"கலாமோ?"
இப்படி எத்தனையோ
இவரைவிட மிகச்சிறந்த விஞ்ஞானி இருந்திருக்"கலாம்"
இவரைவிட மிகச்சிறந்த முதல் குடிமகன் இருந்திருக்"கலாம்"
இவரைவிட மிகச்சிறந்த ஆசிரியரும் இருக்"கலாம்"
இவரைவிட மிகவும் கண்டிப்பானவரும் இருக்"கலாம்"
இவரைவிட மிகவும் எளிமையானவரும் இருக்"கலாம்"
பிறகு எதற்கு இவருக்காக ஒரு தேசமே வருந்தியது?
விழிக்"கலாம்"
படிக்"கலாம்"
உழைக்"கலாம்"
சிந்திக்"கலாம்"
படைக்"கலாம்"
பறக்"கலாம்"
ஜெயிக்"கலாம்"
சாதிக்"கலாம்"
என்று நம் சந்ததியரின் எண்ணங்களை மாற்றியவர்.
மதத்தின் பெயரால், ஜாதிகளின் பெயரால், கட்சிகளின் பெயரால், படிப்பு மற்றும் பணத்தைக்கொண்டு பிறிந்திருந்த நம் எண்ணங்களை மாற்றி நாம் எல்லோரும் இந்தியர் என்ற எண்ணத்தை நம் மனதில் ஆழமாக விதைத்தவர்.
நம் தேசத்தை வல்லரசாக்க கனவு காணுங்கள் என்று நமக்கு உத்வேகம் ஊட்டியவர்.
"ராஜாவின் பார்வை ராணியின் பக்கம்" என்று பாடி தனது எதிர்காலத்தை பாழடித்துக்கொண்டிருந்த இளைய சமூதாயத்திற்கு கனவின் இலக்கணத்தை மாற்றி புரிய வைத்த மாமேதை திரு அப்துல் கலாம் அவர்கள்.
மீனை கொடுப்பதைவிட மீன் பிடிப்பதை கற்றுக்கொடுப்பது சிறந்தது என்று ஒரு சீனப்பழமொழி இருக்கிறது. அதைவிட சிறந்தது, துறுபிடித்துப்போன நம் எண்ணங்களை மாற்றி நம்மை தன்னம்பிக்கை கொண்ட மனிதனாக மாற்றிய...
நமது காலத்தில் தோன்றிய ஒரு ஞானிதான்
உயர்திரு APJ அப்தும் கலாம் அவர்கள்.
ஹதீஸ் எனும் நபிமொழிகள் அடங்கிய புகாரி எனும் புத்தகத்தின் முதல் நபிமொழி "உன் எண்ணங்களை போன்றே உன் செயல்கள் அமையும்" என்ற நபிமொழிக்கு ஏற்ப தன்னுடைய வாழ்நாள் முழுவதும் எண்ணங்களையும் செயல்களையும் ஒருமுகப்படுத்தியவர். சொன்னதை செய்தவர். செய்தவற்றையே கூறிக்கொண்டிருந்தவர். மேலும் நம் அனைவரின் எண்ணங்களையும் மாற்ற கடைசி மூச்சு உள்ளவரை முயன்றுகொண்டே இருந்தவர். எனவேதான் அவருடைய இழப்பு என்பது நம் ஒவ்வொருவரும் தன் வீட்டில் நேர்ந்த ஒரு பேரிழப்பு என்று எண்ணி கலங்கி வருந்தியது.
தேசத்தந்தை காந்தியையும் ஒருவனுக்கு பிடிக்காமல் சுட்டு கொன்றான்.
கர்ம வீரர் காமராஜும் தன் சமுதாயத்துக்காக ஒரு பிடி அதிகமாக செய்தார்.
அன்னை தெரஸாவையும் பணம்படைத்த ஒரு கோமான் பிடிக்காமல் விரட்டிய கதைகளை கேட்டுள்ளோம்.
ஆனாலும் உங்களை பிடிக்காதவர் என்று யாருமே இவ்வுலகில் இல்லையே ஐயா!
ஐயா நீங்கள் மனிதரில் புனிதர் ஐயா!
டிஸ்கி1: இந்த இடுக்கையை இப்போது எழுத முக்கிய காரணம், AQ கான் என்று பாக்கிஸ்தானியர்களால் அறியப்பட்ட ஒரு பக்கி (ஹிந்துஸ்தானி=ஹிந்தி என்றால் பாக்கிஸ்தானி=பக்கி) திரு அப்துல் கலாம் ஒரு சாதாரண விஞ்ஞானிதான். அவர் எதையும் பெரிதாக சாதிக்கவில்லை என்று கூறியதை கேட்ட ஆத்திரத்தில் எழுத தூண்டியது. இந்த கானின் இலட்சணத்தை அறிந்துதான் அந்த நாடே அவரை வீட்டுக்காவலில் வைத்தது. ஏனெனில் இவர் தன் நாட்டு ராணுவ ரகசியங்களை வேறு நாட்டுக்கு கடத்தியவர் என்ற குற்றச்சாட்டுக்கு உள்ளானவர். இவனுக்கு அப்துல் கலாம் பெயரை உச்சரிக்கவும் அறுகதை கிடையாது.
டிஸ்கி2: காந்தியவாதி சசி பெருமாளின் மரணமும் என்னை மிகவும் பாதித்தது. அவர் கேட்டது உயர்நீதிமன்றத்தின் ஆணையை அமுல்படுத்த வேண்டும் என்பதே.
அருமையான பதிவு.. வாழ்த்துகள்
ReplyDeleteகலாமுக்கு ஒரு சலாம்...
ReplyDeleteவலைப்பதிவர் விழாக்குழு உங்களை அன்புடன் வரவேற்கிறது.நன்றி
இதுவரையிலும் நான் படித்த உங்களின் பதிவுகளில் சிறந்தது இது என்பேன் !
ReplyDeleteகாந்தியும் கக்கனும் இனி வரலாற்று பாட பக்கங்களில் மட்டுமே காணக்கிடைப்பார்கள் என்ற அவநம்பிக்கையை போக்கி, தன்னலம் என்ற வார்த்தையை கூட அறியாத ஒரு மனிதருள் மாணிக்கம் எங்கள் காலத்திலும் வாழ்ந்தார் என நாம் நம் வாழ்நாள் முழுவதும் பெருமைபட்டுக்கொள்ள கூடிய மனிதர் கலாம் !
கலாம் அவர்களின் சுயசரிதையான " விங்ஸ் ஆப் பயரில் " அவரே குறிப்பிட்ட ஒரு சம்பவம் நினைவு வருகிறது...
மிக நீண்ட முயற்சிக்கு பிறகு ரஷ்யா தன் " ராக்கெட் இஞ்சின் " தொழில்நுட்பத்தை இந்தியாவுக்கு தர சம்மதிக்கிறது. இந்த வெற்றிக்கு கலாமும் ஒரு காரணம்.
ஒப்பந்தம் கையெழுத்திடப்படும் விழாவில் அனைவருக்கும் ரஷ்ய மதுவான ஓட்கா வழங்கப்படுகிறது... அனைவரும் மதுக்கோப்பையை உயத்தி வாழ்த்து தெரிவித்துவிட்டால் ஒரு மிடறாவது குடித்துவிட்டுதான் கீழே வைக்கவேண்டும் என்பது மேல்நாட்டு நாகரீகம் ! விருந்துகொடுப்பது உலகின் வல்லரசு...
சட்டென தன் உதவியாளரை அழைக்கும் கலாம் அவர் காதில் ஏதோ கிசுகுசிக்கிறார். உதவியாளர் வேறொரு மதுக்கோப்பையில் தண்ணீரை நிரப்பி கலாமின் கையில் கொடுக்க, ஓட்கா கோப்பையை தனக்கு பின்னாலிருந்த பூந்தொட்டியில் மறைத்துவிட்டு தண்ணீர் கோப்பையை உயர்த்தி வாழ்த்திவிட்டு குடிக்கிறார் கலாம் !
டிஸ்கி : ஓட்காவும் தண்ணீரைபோன்றே நிறமற்ற மது !!!
தொடருவோம் !
சாமானியன்
எனது புதிய பதிவு : " க்ளிஷே ! "
http://saamaaniyan.blogspot.fr/2015/11/blog-post.html
தங்களுக்கு நேரமிருப்பின் படித்துவிட்டு உங்கள் கருத்தினை பதியுங்கள். நன்றி