Sunday 2 October 2016

பத்தாம் நாள்... THE TENTH DAY... யவ்மே ஆஷுரா!

அஸ்ஸலாமு அலைகும் வ ரஹ்மதுல்லாஹி வபர்காதஹூ



ஹிஜ்ரி 1437 முடிந்து புத்தாண்டு 1438 பிறந்துள்ளது.  இந்த புத்தாண்டில் இருந்து, இன்ஷா அல்லாஹ் (இறைவன் நாடினால்)  சில பதிவுகள் நம் மார்கம் சம்பந்தமாக பதிவிடலாம் என்று எண்ணியுள்ளேன்.  அதன் ஆரம்பமாக புத்தாண்டின் முதல் மாதமாகிய மொஹர்ரம் மாதத்தின் பத்தாம் நாளின் சிறப்பை இங்கே தருகிறேன்.  இதில் ஏதேனும் தவறுகள் அல்லது குறைகள் இருப்பின் தயைகூர்ந்து நண்பர்கள் எடுத்து கூறினீர்களேயானால் அதை நிவர்த்தி செய்துகொள்வேன்.  அனைத்தையும் அறிந்தவன் அல்லாஹ் ஒருவனே!

ஒவ்வொரு இனம் மற்றும் மதத்திற்கும் நாட்காட்டிகள் இருக்கின்றன. அதேபோல இஸ்லாம் மார்க்கத்தின் நாட்காட்டியானது மொஹம்மத் ஸல்லல்லாஹூ அலைஹ் வஸல்லம் மக்காவை துறந்து மதினாவிற்கு பயணமான ஹிஜ்ரத்தில் ஆரம்பமாகிறது.  எனவே இஸ்லாமியர்களின் நாட்காட்டிக்கு ஹிஜ்ரி ஆண்டு என்று கூறப்படுகிறது.  இஸ்லாமியர்களாகிய நாம் மாதங்களை சந்திரனை கொண்டு கணக்கிடுகின்றோம்.  எனவே பன்னிரண்டு மாதங்கள் கொண்ட ஆண்டிற்கு கிட்டத்தட்ட 355 நாட்களே!

இதன் முதல் மாதம் மொஹர்ரம்   2) ஸஃபர்    3) ரபியுல் அவ்வல்
4) ரபியுல் தானி     5) ஜமாத்துல் அவ்வல்       6) ஜமாத்துல் தானி    7) ரஜப்               8) ஷா'பான்    9) ரமதான்  10) ஷவ்வால்  11) துல் காயிதா  12) துல் ஹஜ்



மொஹர்ரம் என்ற அரபி வார்த்தையின் அர்த்தம் "தடை செய்யப்பட்டது" (FORBIDDEN) என்பதாகும்.  இந்த மாதத்தில் சண்டைகளிட்டுக்கொள்ள தடைசெய்யப்பட்டிருக்கிறது!  மேலும் இம்மாதத்தின் 10-ஆம் நாளானது மிகவும் புனிதமானதாக கருதப்படுகிறது.  எம்பெருமானார் ரசூலேகரீம் ஸல்லல்லாஹூ அலைஹ் வஸல்லம் மதீனா சென்றபோது, அங்கிருந்த யூதர்கள் மொஹர்ரம் 10-ஆம் நாள் உண்ணா நோன்பு வைத்திருந்தனர். அவர்களிடம் நோன்பு வைப்பதற்கான காரணத்தை கேட்டபோது யூதர்கள், "எங்கள் தூதர் மோஸஸ் (மூசா அலைஹ் வஸலாம்) மற்றும் அவரின் கூட்டத்தார்கள் கொடுங்கோலனாகிய பாரோ(ஃபிர்அவ்ன்) மன்னனிடமிருந்து காக்கப்பட்டார்கள்.  எனவே அந்த புனித நாளை நினைவு கூற நாங்கள் நோன்பு நோற்கிறோம்" என்றனர்.  இதை கேட்ட எம்பெருமானார் ஸல்லல்லாஹூ அலைஹ் வஸல்லம் "உங்களை விட நாங்கள் தான் மூஸா அலைஹ் வஸலாம்-க்கு நெருங்கியவர்கள்.  எனவே நாங்கள் இரண்டு தினங்கள் நோன்பு நோற்போம்" என்று கூறினார்கள்.  எனவே மொஹர்ரம் மாதம் 9 மற்றும் 10 ஆகிய இரு நாட்களில் அல்லது 10 மற்றும் 11 ஆகிய இரண்டு நாட்களில் நோன்பு நோற்பது நபி வழியாகும் (ஸுன்னத்)



பொதுவாக நாம் மொஹர்ரம் 10-ஆம் நாளை துக்க நாளாக புரிந்து வைத்துள்ளோம்.  ஆனால் இந்த ஆஷூரா நாளானது மிகவும் சிறப்பிக்கபட்ட நாளாகும்.  இந்த நாளில் தான் உலகில் படைக்கப்பட்ட முதல் மனிதனான ஆதம் (ADAM) அலைஹ் வஸலாம் அவர்களின் பாவமன்னிப்பு அல்லாஹ்வால் ஏற்றுக்கொள்ளப்பட்டது!  நூஹ் (NOAH) அலைஹ் வஸலாம் அவர்கள் வெள்ளப் பிரளயத்திலிருந்து தப்பிக்க அல்லாஹ்வின் ஆணைபடி தான் நிர்மாணித்த கப்பலில் ஏறி பயணித்தபோது அல்லாஹ்வால் காப்பாற்றப்பட்டதும் இதே ஆஷூராவன்றுதான்.  இப்ராஹீம் (ABRAHAM) அலைஹ் வஸலாம் அவர்கள் நம்ரூத் அரசனால் கொழுந்துவிட்டு எரிந்த நெருப்பு குண்டத்தில் வீசியெறிந்த போது அவரை அல்லாஹ் காப்பாற்றியதும் அதே நன்னாளில்தான்!

மூசா அலைஹ் வஸலாம் அவர்களோடு அல்லாஹ் தூர்ஸினா மலையில் நேரடியாக பேசி தவ்ராத் வேதத்தை அருளியதும் (10 COMMANDMENTS) இதே மொஹர்ரம் பத்தாம் நாளில் தான்!  கொடிய நோயில் உழன்றுகொண்டிருந்த அய்யூப் அலைஹ் வஸலாம் அவர்கள் நோய் குணமடைந்ததும் இதே நன்னாளில்தான்!  யூஸூஃப் (JOSEPH) அலைஹ் வஸலாம் பிரிந்த பின் தன் தந்தையாகிய யாகூப் அலைஹ் வஸலாம் அவர்களோடு இணைந்ததும் இதே நன்னாளில்தான்!  மீன் வயிற்றில் வாழ்ந்த யூனூஸ் அலைஹ் வஸலாம் அவர்கள் மீனின் வயிற்றிலிருந்து வேளியேற்றப்பட்ட தினமும் இதே பத்தாம் நாள்தான்!  ஃபிர்அவ்ன் கடலில் மூழ்கடிக்கப்பட்டு மூஸா  (MOSAS) அலைஹ் வஸலாம் மற்றும் அவரின் கூட்டத்தார்கள் பத்திரமாக பாதுகாக்கப்பட்டதும் அன்றைய தினம்தான்!

தாவூத் (DAVID) அலைஹ் வஸலாமின் பாவமன்னிப்பு ஏற்றுக்கொள்ள பட்டதும், சுலைமான் (SOLOMON) அலைஹ் வஸலாமின் அரசாட்சி மீண்டும் அவருக்கே திருப்பியளிக்கப்பட்டதும், ஈஸா (JESUS) அலைஹ் வஸலாம் அவர்கள் வானத்தில் உயர்த்திக்கொள்ளப்பட்ட தினமும் இதே ஆஷூரா அன்றுதான்!  

மேலும் எம்பெருமான் ரஸூலே கரீம் ஸல்லல்லாஹூ அலைஹ் வஸல்லம் அவர்களின் பேரன் ஹஜரத் ஹுசைன் ரலியல்லாஹ்ஹூ அன்ஹூ அவர்கள் எதிரிகளால் ஷஹீத் ஆக்கப்பட்டதும் இதே மொஹர்ரம் மாதம் பத்தாம் நாள்தான். மேலும் உலகம் படைக்கப்பட்டதும் அழிக்கப்படப்போவதும் யவ்மே ஆஷூரா எனும் இதே நாளில்தான் என்பதனையும் நாம் நினைவில் கொள்வோம்.



இப்படி பல்வேறுபட்ட சிறப்புகள் நிறைந்த "யவ்மே ஆஷூரா" என்கின்ற மொஹர்ரம் மாதம் பத்தாம் நாளை நாம் சிறப்பிக்கவேண்டியது நம் கடமையாக உள்ளது.  மேலும் மொஹர்ரம் மாதம் 9 மற்றும் 10 ஆகிய இரண்டு நாட்களில் ஸுன்னத்தான நோம்பு நோற்று அந்நாளை சிறப்பிப்போம்.

1 comment:

  1. என்னப்பா ஷேக் மார்க்க கல்வியில் எப்படி இவ்வளவு அனுபவம் !
    Really great Sheik
    Kutti Venkatachalam

    ReplyDelete