Wednesday, 5 June 2013

நான் தந்தையானேன்

ஜூன் 5


அப்போது நாங்கள் மதுரையில் வாழ்ந்துக்கொண்டிருந்தோம்.  என் மனைவி பிரசவத்துக்காக சென்னைக்கு சென்றிருந்தார்.  காலை ஆறு மணிக்கு சென்னையிலிருந்து தொலைபேசியில் அழைத்து எனக்கு மகன் பிறந்துள்ளான் எனும் இனிய செய்தி தெரிவிக்கப்பட்டது. சந்தோஷம் என்றால் அப்படி ஒரு பரம சந்தோஷம்.

உடனே சென்னைக்கு செல்லவேண்டும்... மகனை பார்க்க வேண்டும்.

வைகை எக்ஸ்பிரஸ் கிளம்பிவிட்டது. எனவே வேறு வழியில்லாமல் திருவள்ளுவர் பேருந்தில் (அப்போதைய விரைவுப்பேருந்தின் பெயர்) காலை எட்டு மணிக்கு ஏறியாகிவிட்டது.  பொதுவாக இரவில் பயணித்தால் நேரம் செல்வதே தெரியாது. 8 முதல் 9 மணி நேர பயணம்தான். அதுவும் வண்டியில் உட்கார்ந்தால், படம் பார்க்கவில்லையெனில், அதிகபட்சம் ஒரு மணி நேரத்தில் தூங்கிவிடலாம். தாம்பரத்தை வண்டி நெருங்கியவுடன் எழுந்துக்கொள்ளலாம்.
அதுவே பகல் நேர பயணம் என்றால்... அதுவும் மகனை பார்க்க செல்வதென்றால்....
அதிகபட்சம் 12 மணி நேரம் என்றாலும் இரவு எட்டு மணிக்கு சென்னையை சென்றடைந்துவிடும். பையனை உடனே பார்த்துவிடலாம்.
ஆனால் அந்த பேருந்தோ அனைத்து சிறிய பெரிய ஊர்களுக்கும் உள்ளே சென்று வந்துகொண்டிருந்தது. திருச்சி சென்றடைந்த நேரமோ பகல் 1 மணி!  ஒவ்வொரு மணி நேரமும் ஒரு நாளைப்போல இருந்தது எனக்கு!

ஒருவழியாக இரவு சரியாக பத்தரை மணிக்கு சென்னையை வந்தடைந்தேன். அங்கிருந்து ஒரு ஆட்டோவைப் பிடித்து மருத்துவமனைக்கு இரவு பதினொண்ணேகாலுக்கு சென்றடைந்தேன். மருத்துவமனை பூட்டப்பட்டிருந்தது. பூட்டிய கதவை தட்டினால் ஒரு காவலாளி வந்து விசாரித்தார். நான் பிள்ளையை பார்க்க வந்துள்ளேன் என்று ஆவலாக சென்னேன். அதற்கு அவர் நாளை காலை வந்து பார்த்துக்கொள்ளவும் என்று கூறிவிட்டார். எவ்வளவோ கெஞ்சிப்பார்த்தும் அவர் முடியாது என்பதையே பதிலாக கூறிச்சென்றுவிட்டார்.

வீட்டிற்கு சென்றால் தூக்கம் வரவில்லை.  எப்போது விடியும் என்று விடிய விடிய விழித்துக்கொண்டிருந்துவிட்டு மீண்டும் காலை சரியாக ஆறு மணிக்கு மருத்துவமனையில் ஆஜர்.  கதவு திறக்கப்பட்டது. ஓடோடி மனைவியிருக்கும் அறையை கேட்டுச் சென்றேன்.
அதோ என் மகன்.  அமைதியாக தூங்கிக்கொண்டிருந்தான்.
அவனை அப்படியே தூக்கி நெற்றியில் முத்தமிட்டேன். மனைவியை பார்க்கிறேன்... கண்களிலிருந்து நீர்! என்ன என்று கேட்டால்... "ஒன்றுமில்லை" என்றார். நான் சிரித்தேன். அவரும் சிரித்தார்.

இவை நடந்து இருபத்து மூன்று ஆண்டுகளாகிவிட்டன. இன்று அவர் ஒரு மருத்துவர்.
Dr. இம்ரான்!

மெனி மெனி ஹாப்பி ரிடர்ன்ஸ் ஆஃப் தெ டே மை ஸன்!
யூ மேட் மீ ப்ரவ்ட்!!




1 comment:

  1. அன்பின் அஜீஸ் - இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துகள் மருத்துவர் இம்ரான் - நட்புடன் சீனா

    ReplyDelete