Sunday 23 June 2013

மை ஃபர்ஸ்ட் வைஃப் - by my பொண்டாட்டி - இறுதிப் பகுதி

முதல் பகுதியை படிக்க தவறியவர்கள் இங்கு பார்க்கவும்

உள்மனதின் குறலை புரிந்துக்கொண்டு எச்சரிக்கையாக பேச ஆரம்பித்தேன்.  "நேற்று ஃபோன் பண்ணவங்க பற்றி தெரிஞ்சுக்க ஆசைப்படறேன்.  அவங்களை பற்றி சொல்ல முடியுமா?" என்று தான் கேட்டேன்.  அட அட... எங்கிருந்துதான் அந்த மகிழ்ச்சி வந்ததோ அவருக்கு தெரியவில்லை.  வேலைக்குச் செல்ல தாமதம் ஆவதைக்கூட நினைக்காமல் மடை திறந்த வெள்ளம் போல, கிட்டத்தட்ட ஒண்ணேகால் மணி நேரம் மூச்சு முட்ட பேசிக்கொண்டே இருந்தார்.  அதையெல்லாம் நான் உங்ககிட்டே சொன்னேன் என்றால்... இல்ல வேணாம்ங்க! என் கஷ்டம் என்னோடவே போகட்டும்.  ஆனாலும் சுருக்கமாக அவர் கூறியதை சொல்கிறேன், எப்படி "சுரு"க்குனு இருக்கு பாருங்க!

இவங்க ரெண்டு பேரும் பழக ஆரம்பித்தது கல்லூரியில் ஒன்றாக படிக்கும்போதுதானாம்!  கடந்த பல ஆண்டுகளாக மிகவும் அன்யோன்யமாக பழகிக்கொண்டிருகின்றனராம்.  கிள்ளிக்கொள்வது, கடித்துக்கொள்வது முதல் அடித்துக்கொள்வது வரை எல்லாம் நடந்துள்ளதாம்.  பல நாட்கள் ஒன்றாக தூங்கியுமுள்ளனராம்.  எல்லாவற்றையும் கொஞ்சமும் கூச்சமே இல்லாமல், அதுவும் என்னிடமே கூறுகின்றார்.   அவங்க பழக்கம் ஏற்பட்டது முதல் இவருக்கு கவித கொட்ட ஆரம்பிச்சுடுச்சாம்.  இவருக்கு சாண்டில்யன், ஜெயகாந்தன், பாலகுமாரன், Dr. MS உதயமூர்த்தியை எல்லாம் அறிமுகப்படுத்தியது அவங்கதானாம்.  அதுபோக அவங்களை பற்றி முதலிரவு அன்றைக்கே என்னிடம் கூறவேண்டும் என்று நினைத்தாராம்.  அவங்கதான் கொஞ்ச நாட்களுக்கு பின்னர் தெரிவிச்சுக்கலாம் என்று சொன்னதால், இதை பற்றி ஒன்றும் சொல்லிக்கொள்ளவில்லையாம்!!  நல்ல வேளை, நானாகவே கேட்டுக்கொண்டதால், மனதில் இருந்ததை எல்லாம் அப்படியே சொல்லிவிட்டாராம்.

சரி, இனி விட்டுப்பிடித்தால்தான் முடியும் என்று என்னை நானே சமாதானப்படுத்திக்கொண்டேன்.

காலங்கள் உருண்டோடுகின்றன.  வாழ்க்கை என்றால் சண்டை சச்சரவுகள் இருக்கத்தானே செய்யும்.  அதுபோல எங்களிருவருக்குள் கருத்து வேற்றுமை ஏற்படும்போதும் அவர் ஆறுதலுக்கு செல்வது அவங்களிடம்தான்.  சரி, அவர்தான் போய்த்தொலைகிறார் என்றால், அவங்ககிட்டேயே சொல்லி எனக்கு ஃபோன் பேசி என்னை சமாதானப் படுத்துவதும் அவங்கதான்.  "என்ன கொடும சார்" இது.  எந்த பொண்ணுக்கும் இப்படி நடக்கக்கூடாதுங்க!

சரி, எல்லாம் ஒரு நாள் மாறிவிடும் என்று நம்பிக்கொண்டிருந்தால், ஒரு நாள் இவர் வந்து தான் செய்துகொண்டிருக்கும் வியாபாரத்தை விரிவுபடுத்தப்போவதாக சொன்னார்.  மகிழ்ச்சியான விஷயம்தானே என்று பார்த்தால், அதில் அவங்களையும் ஒரு பங்குதாரராக்கிவிட்டார்.  வாழ்க்கையில்தான் பங்கெடுத்துக்கிட்டாங்க என்றால் வருமானத்திலுமா?  என்னால் பொருத்துக்கொள்ள முடியவில்லை.  ஆனால் என்ன செய்வது என்றறியாமல் வாழ்க்கையை ஓட்டிக்கொண்டிருந்தேன்.  கடவுளின் மீது பாரத்தை போட்டு காத்திருக்கிறேன்.

ஒரு நாள் அந்த இனியச் செய்தியை என் கணவரே தன் வாயால் வந்து சொன்னார்.  அவங்களுக்கு, அதாங்க அந்த மானுக்குங்க, திருமணம் நிச்சயிக்கப்படப்போகிறதாம்.  இதைவிட நல்ல செய்தி என்னவாக இருக்கும் எனக்கு சொல்லுங்க!  நிச்சயம் முடிந்து திருமணமும் நடந்தது.  நானும் குடும்பத்தோடு சென்று ஆசீர்வத்தித்துவிட்டு வந்தேன்.  அவங்களோட அவுங்க பேரு, கீதா ராணிங்க!



ஆன்ன்... சொல்ல விட்டுவிட்டேனே... மான் மான் என்று சொல்லிக் கொண்டிருந்தேனே அவங்க முழு பேரு அதியமானுங்க!  எல்லோரும் அவங்களை "மான்" என்றுதான் கூப்பிடுவாங்கங்கோ...கோ...  இப்போ அவங்களுக்கு அரவிந்தன் என்று ஒரு மகனும்  ஆரத்தி எனறு ஒரு மகளும் இருக்காங்க!  வாழ்க்கை சந்தோஷமாக இருக்குங்க!  ஆனாலும் இப்பவும் பேச ஆரம்பித்தார்களென்றால் இவங்க ரெண்டுபேருக்கும் நேரம் போறதே தெரிவதில்லை.... ஏன்  சாப்பாடுகூட தேவையில்லைங்க!



ஞாயமாறே... என்னுடைய எரிச்சல் என்னவென்றால், எங்கூடவும்தான் ரதி, மதி, விதி, சதி என்று எத்தனையோ பேரு படிச்சாங்க.  அவங்ககிட்டே இருந்து ஃபோன் வந்தாலோ அல்லது நான் அவங்களுக்கு ஃபோன் பேசினாலோ அளந்து பேச சொல்றாருங்க!  ஃபோன் பில்லு எகிறிவிடுமாம்!  இப்ப சொல்லுங்க என் எரிச்சல் ஞாயமானதுதானேங்க?

தீர்ப்ப சொல்லுங்க ஞ்...ஞ்...ஞா....ய்ய...ம்ம்....மா....ற்றே....

1 comment: