Saturday 15 June 2013

மை ஃபர்ஸ்ட் வைஃப் - by my பொண்டாட்டி! part 1

நான் சொல்வதெல்லாம் உண்மை... உண்மை... உண்மையைத்தவிர வேறில்லை மை லார்ட் (அதாவது வாசித்து காரித்துப்பப்போகும் சமூகத்தாரே!)
இது என்னுடைய முதல் மனைவியைப் பற்றிய என் பொண்டாட்டியின் கருத்துக்கள். ஆனாலும் இந்த சக்களத்தி சண்டை என்றைக்குத்தான் தீருமோ  தெரியவில்லை.  இந்த பதிவை என் வார்த்தைகளில் படிப்பதைவிட என் மனைவியின் வார்த்தைகளில் வாசித்தால்தான் அதன் வீரியம் உங்களுக்கெல்லாம் விளங்கும் என்பதால், இதோ என் அன்பு பொண்டாட்டி பேசுகிறார்!

அப்போ எனக்கு திருமணமாகி பதினைந்து நாட்கள்கூட ஆகியிருக்காது.  இவர் வேலையிலிருந்து வீட்டுக்கே இன்னும் வரவில்லை. பொதுவாக இரவு எட்டு மணிக்கு கடையை மூடிவிட்டு ஒன்பதரைக்குள் வீட்டுக்கு வந்துவிடுவார் அவர்.  ஆனால் அண்றைக்கு எட்டரை மணியிலிருந்து வீட்டுக்கு ஃபோன் காலுக்கு பின்னால் ஃபோன் கால் பண்ணி, "அவர் வந்துவிட்டாரா வீட்டுக்கு" என்று பலமுறை அவங்க விசாரிச்சாங்க.  நான் கொஞ்சம் கொஞ்சமாக பொருமையை இழந்துக்கொண்டிருந்தேன்.  இவங்களுக்கு ஏன் இவ்வளவு படபடப்பு.  கட்டிக்கிட்டு வந்த நம்மகிட்டயே "வந்தா உடனேயே" அவங்களுக்கு போனில் பேசச் சொல்ல வேண்டுமாம்.  சரி உங்க பேர் என்னன்னு கேட்டா "மான் என்று சொல்லுங்க அவருக்கு தெரியும்" என்று வேறு சொல்றாங்க.



இவர் சரியாக ஒன்பதே காலுக்கு வீட்டுக்கு வந்தார்.  வந்ததும் வராததுமாக, "ஏதாவது ஃபோன் கால் வந்ததா?" என்று கேட்டதும் எனக்கு வந்தது பாருங்க கோபம்.  "வந்தது... வந்தது... ஏதோ தலையிருக்கிற பேனோ காட்டிலிருக்கிற மானோன்னு யாரோ ஃபோன் பண்ணாங்க! உடனே பேசணுமாம்" என்றேன்.  எனக்கு கல்யாணமான இந்த பதினைந்து நாட்களில் அவர் முகத்தில் அப்படி ஒரு சந்தோஷத்தை நான் பார்க்கவில்லை.  அப்படியே பூரித்துவிட்டார்.  உடனே ஓடிபோய் ஃபோனை எடுத்து பேச ஆரம்பித்துவிட்டார்.  இவர் முகத்தில் நவரசங்களும் நாட்டியமாடின. "சே! அதுக்குள்ள ஃபோன் கட்டாயிடுச்சு" என்று வருத்தப்பட்டுக்கொண்டே வந்தவரிடம் "மணி பதினொண்ணு ஆகிடுச்சு, சாப்பிடலாமா?" என்றேன். அதற்கவர் அவங்களிடம் பேசியதே full meals சாப்பிட்ட மாதிரி இருக்குன்னு சொல்லிட்டார்.  அப்போதான் புரிந்தது, நாம் சைதாப்பேட்டைகாரனை நம்பி ஏமாந்துவிட்டோம் என்று!  சரி இதை இப்படியே விட்டால் சரிபட்டுவராது என்று அன்றைக்கே முடிவெடுத்தேன்.

அன்றிரவு முழுவதும் எனக்கு தூக்கம் வரவில்லை.  யாராக இருக்கும் அந்த மான்?  யாரிடம் கேட்பது?  எப்படி விசாரிப்பது?



விடிந்ததும் முதல் வேலையாக என் அம்மாவுக்கு ஃபோன் போட்டு நேற்று நடந்த விஷயத்தை தெரிவித்தேன்.  அதற்கு அவர் "உன் வீட்டுக்காரர் உன்னிடம் சந்தோஷமாக இருக்கிறாரல்லவா?  உன்னை சந்தோஷமாக வைத்திருக்கிறாரில்லையா? அதுபோதும்.  மற்றவையெல்லாம் சரியாகிப்போகும்.  கவலைப்படாதே" என்று சர்வசாதாரணமாகச் சொல்லிவிட்டார்.  இவங்க என்னை பெத்த தாயா இல்லை பேயா?  இப்படி சொல்றாங்க!  இவங்க இதுக்கு சரிபட்டு வரமாட்டாங்க.  நேராக மாமியாரிடம் போய் விஷயத்தை சொன்னேன். அதற்கவர் "இப்போதாவது ஒழுங்கா வீட்டுக்கு வரானே!  உன்னை கட்டிக்கிறதுக்கு முன்னாடியெல்லாம் பாதி நாட்கள் அவன் அவங்க வீட்டில்தான் தங்குறதே!  நீ ஒண்ணும் கவலைப்படாதே" என்றார்.  அடச்சே!  சரியான அசிங்கம் பிடித்த குடும்பத்தில் வந்து மாட்டிக்கிட்டோமே என்று அழுகையா வந்தது.  ஆனால் நான் அழவில்லை.  அழவும்மாட்டேன்!  இனி சாட்சிகாரங்க காலில் விழுந்து பிரயோஜனமில்லை.  நேரா சண்டைக்காரன் தான்!



அவர் வேலைக்கு போவதற்கு முன், "எனக்கு ஓர் உண்மை தெரிஞ்சாகணும்" என்றேன்.  "என்னடா, சொல்லு DEAR" என்று ஒண்ணுமே நடக்காதது போல, அப்படியே தலையில் ஐஸ் வைத்தார்.  அவர் எப்போதும் இப்படித்தாங்க.  பேச ஆரம்பித்தார் என்றால், வயித்திலிருக்கும் குழந்தைகூட தானா வெளியே வந்த்துவிடும்.  "ஏய்... ஏமாந்துவிடாதே" என்று உள்மனது எச்சரித்தது!


No comments:

Post a Comment